Friday 2 September 2011


கருணாநிதியின் கபட நாடகம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் விவகாரத்தில் பல்வேறு நாடகங்களை ஆடிக்கொண்டிருக்கிறார். இந்த மூவரும் தூக்கு தண்டனையிலிருந்து விடுபட வேண்டும் என்பதை விட இந்த விவகாரத்தை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை நிலைகுலைய வைக்க வேண்டும் என்பதில்தான் அவர் ஆர்வமுடன் இருக்கிறார்.  ஜெயலலிதா இம்மூவரையும் விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கருணாநிதி வலியுறுத்தி வருகிறார். இவரது ஆதரவுடன் செயல்படும், இவரது கட்சியும் அங்கம் வகிக்கும் மத்திய .மு.கூ. அரசுதானே ஜனாதிபதியின் மூலம் இம்மூவரின் கருணை மனுவையும் நிராகரித்திருக்கிறது.  இவர் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்காமல் ஏன் ஜெயலலிதவிடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கிறார் .. ? இம்மூவரின் தூக்கு தண்டனையையும் இரத்து செய்யாவிட்டால் மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவோம், .மு.கூ. கூட்டணியிலிருந்தும் விலகுவோம் என்று அறிவிக்க வேண்டியதுதானே.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது, தான் முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் .. தனது குடும்பத்தினர்கள் பதவி சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஒரு 2 மணி நேர உண்ணாவிரதத்தை மட்டும் நடத்தி விட்டு தமிழினப் படுகொலையை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் கருணாநிதி. உலகத் தமிழினமே அவரை தமிழினத் துரோகி என்று அழைப்பதனால், ஏதாவது தகிடுதத்த வேலை செய்து தமிழினத்தை ஏமாற்ற முடியுமா என்பதற்காக இந்த மூவரின் உயிர்கள் மீது அக்கறை உள்ளவர் போல ஒரு நடிப்பை அரங்கேற்றுகிறார் கருணாநிதி. இந்த மூவரும் முதலில் கருணாநிதியின் அரசிடம்தானே கருணை மனுவை சமர்ப்பித்டிருந்தார்கள்.. அப்போது அந்த கருணை மனுவை நிராகரித்து அவர்களுக்கு தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தியது இதே கருணாநிதிதானே.. இப்போது திடீரென்று இந்த மூவர் மீதும் அவருக்கு பற்று வர காரணம் என்ன .. ? உள்ளாட்சித் தேர்தல் வருகிறது; தமிழினப்பாதுகாவலன் என்பது போல ஒரு வேஷம் போட்டு மக்களின் ஓட்டுக்களை பெற்று விட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாடகம் கருணாநிதியால் அரங்கேற்றப்படுகிறது.
இலங்கை அரசு சோனியா காந்தி அரசின் துணையோடு, தமிழின அழிப்பு வேலையை நடத்தியபோது, அதைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிடக் கூட துணிச்சலற்று இருந்தவர் கருணாநிதி. ஆனால், ஜெயலலிதா இராஜபக்ஷேவைக் கண்டித்து சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்தவர். மூவரின் தூக்கு தண்டனையையும் நிறைவேற்றக் கூடாது எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். கருணாநிதிக்கு உண்மையிலேயே தமிழின உணர்வு இருக்குமேயாயின் இவர்களது விடுதலைக்காக, தனது கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் த்னது கூட்டணி பலத்தைப் பயன்படுத்தி போராடட்டும். அதை விட்டு, ஜெயலலிதாவிடம் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி நாடகத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டாம். தமிழர்கள் இவரிடம் மீண்டும் ஏமாறத் தயாராயில்லை.


No comments:

Post a Comment