Saturday 2 May 2015

விஜயகாந்தின் 'புத்திசாலித்தனம்'


                                                விஜயகாந்துடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார் கருணாநிதி; இப்போது அவரது மகன் ஸ்டாலினும் விஜகாந்துடனான கூட்டணியைத் தான் விரும்புவதாக குறிப்பிட்டிருக்கிறார். விஜயகாந்த் இதுவரை ஒருமுறை கூட தி.மு..வுடன் கூட்டணி பற்றி  பேசவில்லை;ஆனால், தி.மு..வின் உரிமையாளர்களான தந்தையும் மகனும் மாறி மாறி தேமுதிக வுடன் கூட்டணியை விரும்பி அறிக்கை விடுகின்றனர். இதிலிருந்தே திமுக எந்த அளவிற்கு பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. யாராவது நம்மோடு கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டார்களா என்று ஏங்கிப் பரிதவிக்கின்ற நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது தி.மு...
                   2ஜி ஊழல், கலைஞர் டி.வி.ஊழல், பி.எஸ்.என்.எல். ஊழல் என ஆயிரக்கணக்கான கோடி ஊழல்களில் கருணாநிதியின் மகள் கனிமொழி, பேரன்கள் கலாநிதி தயாநிதி மாறன்கள் உட்பட குடும்பத்தினர் பலர் தொடர்புடையவர்களாக சி.பி..ன் விசாரணை வளையத்திற்குள் இருந்து வருகின்றனர். இவர்களில் சிலர் நீதிமன்ற ஜாமீனில் வெளியில் இருந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் சி.பி..வசம் கிடைத்திருக்கும் ஒலி நாடா இந்த ஊழல்கள் கருணாநிதிக்கும் தெரிந்தே நடந்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதாக கடந்த வாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
           இந்த ஒலிநாடாவின் அடிப்படையில் புதிதாக எப்..ஆர். ஒன்றைப் பதிவு செய்ய சி.பி..உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் இதற்கு அனுமதி அளிக்கும்போது 2ஜி ஊழலில் தொடர்புடையவர்களில் மூத்த தலைவர் உட்பட இன்னும் சில புதியவர்கள் மக்களுக்கு அடையாளம் காட்டப்படலாம்
                  ஏற்கனவே குடும்ப அரசியலால் சிதிலமடைந்து போயிருக்கும் தி.மு.. 2ஜி ஊழலிலும் கலைஞர் டி.வி. ஊழலிலும் வெளிவரவிருக்கும் புதிய தகவல்களால் கடும் பின்னடைவை எதிர்கொள்ளப்போவது உறுதி. அதனால், இப்போதே எப்படியாவது விஜயகாந்தை கூட்டணியில் இணைத்துவிட்டால் அதனடிப்படையில் இன்னும் சில உதிரிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஒரு மெகா கூட்டணியை அமைத்து மக்களிடம் ஆதரவு அலையை உருவாக்கிவிட கருணாநிதி திட்டமிடுகிறார். அதனால்தான் விஜயகாந்த் கூட்டணி பற்றி பேசாத போதிலும் தானே வலிய வந்து கூட்டணிக்காக விஜயகாந்திடம் மனுப்போட்டிருக்கிறார்; அதுபோதாதென்று தனது மகனையும் மனு போட வைத்திருக்கிறார். பதவிகளுக்காக யாரிடமும் எத்தகைய நிலைக்கும் இறங்கி வருபவர் கருணாநிதி என்பதை இச்சம்பவங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.


                 முடைநாற்றமெடுக்கும் ஊழல் சேற்றில் முழுவதும் மூழ்கிப்போய் இருக்கும் தி.மு.. யாராவாது கை தூக்கி விடமாட்டார்களா என்ற பரிதவிப்பில் விஜயகாந்தின் கரத்தைப் பற்றிக் கொள்ளத் துடிக்கிறது. ஆனால், விஜயகாந்த் இக்கூட்டணிக்கு ஒப்புக் கொண்டால் தேர்தலில் வெற்றியும் கிடைக்கப் போவதில்லை.. தேமுதிக. வும் உதிக்கட்சியாகிவிடும் என்பதை மற்றவர்களைப் போலவே விஜயகாந்தும் நன்றாக அறிந்தே வைத்திருக்கிறார் போலிருக்கிறது. எனவேதான் தந்தையும் மகனும் மாறி மாறி மனுப் போட்டும் கூட கண்டு கொள்ளமலேயே இருக்கிறார்

       இது அவரது அரசியல் நடவடிக்கையின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. இந்த புத்திசாலித்தனம் தொடர்வதுதான் அவரது  அரசியல் வாழ்க்கைக்கு நல்லதாயிருக்கக் கூடும்.