Saturday 14 January 2012

தமிழர் திருநாள்






பொங்கலோ ... பொங்கல்..
பொங்கலோ ... பொங்கல்..
சந்தோஷ வெள்ளத்தில் 
சிறகடித்த குரல்கள்.
தமிழரின் திருநாள் இது;
தமிழின் இனிமை போல 
பொங்கட்டும் பொங்கல்;
பொங்கலோடு பெருகட்டும்
எங்கும் இன்பங்கள்.
தமிழுக்கு அமிழ்தென்று பேர்;
தமிழ் எங்கள் வாழ்வுக்கு வேர்.
தமிழ் உலகின் முதல் மொழி;
தமிழுலகின் பெரும் விழா இது.
விழாக்கள் வாழ்வில்
இனிமையைக் கூட்டுகின்றன;
இனிமையான வாழ்க்கை 
வரலாற்றைப் படைக்கின்றன.
வரலாற்றைப் படைத்தது தமிழினம்;
வரலாறாய் எழுந்து நிற்கும் தமிழினம்.
தமிழுக்கும் தமிழனுக்கும்
அழிவென்பதில்லை.
தமிழ் பேசும் நல்லுலகம் 
தலை நிமிர்ந்து நிற்கும்.
தமிழரின் வாழ்வெல்லாம்
அமிழ்தாய் இனிக்கட்டும்;
அமிழ்தாய்ப் பெருகும்
மகிழ்ச்சியில் மக்கள்
" பொங்கலோ.. பொங்கல் " என
பொங்கிக் கூச்சலிடட்டும்.
இது தமிழர் திருநாள்;
பொங்கலோ .. பொங்கல் ..
பொங்கலோ ... பொங்கல் ..
பொங்குக மகிழ்ச்சிகள்;
பொங்குக வளங்கள்.
பொங்கலோ ... பொங்கல் ..

Thursday 12 January 2012

சுவாமி விவேகானந்தர்.



எழுமின் .. விழிமின் .. இலட்சியத்தை அடையும் வரை ஓயாதீர்.

நீர் கடவுளை எங்கே தேடுகிறீர் .. ? ஏழை எளியோர் நலிவுற்றோர் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் கடவுளின் வடிவங்கள்தான்.

நம்பிக்கை வையுங்கள் ; கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் ; உங்களிடம் நம்பிக்கை வையுங்கள் ; வலிமையுடையவர்களாய் எழுந்து நில்லுங்கள்.

நீங்கள் எந்த சாதியாவது இருங்கள் ; அதற்காக நீங்கள் ஏன் மற்றொரு மனிதனை மற்றொரு சாதியை வெறுக்கிறீர்கள் .. ?


உங்களுடைய உடலை வலிமையாக்கிக் கொள்ளுங்கள் ; இரும்பு போன்ற தசையும் எஃகு போன்ற நரம்புகளுமே உங்களுக்குத் தேவை. வலிமையுடனிருங்கள் ; வலிமையே வெற்றிக்கு வழி.



ஒரு ஏழை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவனை உயர்ந்த ஜாதி ஹிந்துக்கள் வாழும் தெரு வழியே செல்ல அனுமதிப்பதில்லை ; அவனே கிறிஸ்துவனாக மாறி ஒரு ஆங்கிலேயப் பெயரை வைத்துக் கொண்டால் , இஸ்லாமியனாக மாறி இஸ்லாமியப் பெயரை வைத்துக் கொண்டால் தாராளமாக அனுமதிக்கின்றனர். இது பைத்தியக்காரத்தனம் அல்லவா.


பயப்படாதீர்கள் ; எதற்கும் பயப்படாதீர்கள் ; அப்போது நமது காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பயம்தான் எல்லா மூட நம்பிக்கைகளுக்கும் காரணம் ; பயம்தான் நமது துயரங்களுக்கு எல்லாம் காரணம்.


.. இங்கே இருட்டாக இருக்கிறது .. இருட்டாக இருக்கிறது .. என்று அழுவதால் இருள் போய்விடுமா .. ? விளக்கை அதற்கருகில் கொண்டு செல்லுங்கள் ; இருள் விலகி விடும்.

தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் .. அறியாமை மிக்கவர்கள் .. ஏழைகள் .. கல்வியறிவில்லாதவர்கள் .. ஆகிய அனைவரும் உன் சகோதரர்கள் என்பதை மறந்து விடாதீர்.


நான் என்னை ஒரு ஹிந்து என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் ; ஒரு இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் .  
                                சுவாமி விவேகானந்தர்


( இன்று ( 12/1/2012 ) சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த தினம்இது தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. )

Friday 6 January 2012

கடவுளுக்கு அடுத்தபடி



தனது மனைவிக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படாததனால் அவள் இறந்துவிட்டாள் என்று கோபமுற்ற ஒரு நபர் மற்றும் அவரைச் சார்ந்த சிலரால் தூத்துக்குடியில் ஒரு பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இது சம்பந்தமான் குற்றவாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தப் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கின்றனர்.
மருத்துவர்கள் மக்களின் உயிரையும் உடல் நலத்தையும் காக்கும் உயரிய தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்; அப்படிப்பட்டவர்கள் வேலை நிறுத்தம் செய்து மக்களின் உயிரோடு விளையாடும் கொடூர செயலில் இறங்கலாமா .. ?
மருத்துவர் படுகொலை என்பது அதிர்ச்சி அடைய வைப்பது; வன்மையான கண்டனத்திற்குரியது. அதற்காக மருத்துவ சமுதாயம் கோபத்தோடு பொங்கி எழுவது இயற்கையானதுதான். ஆனால், அந்தக் கோபம் அந்தக் கொலையோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரோடும் வாழ்க்கையோடும் விளையாடும் வகையில் பிரயோகிக்கப்படுவது எப்படி நியாயமாகும் .. ? சில தனி நபர்களின் தவறான செயலுக்காக அதற்காக அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்ட பின்னரும் கூட ஒட்டுமொத்த மக்கள் சமுதாயத்தையே பழிவாங்க நினைப்பது கொடூரமான செயல் இல்லையா .. ?
வேலை நிறுத்தம் செய்யாமல் வேறு வகைகளில் மருத்துவர்கள் தங்கள் போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம். கருப்பு பேட்ஜ் அணியலாம்; கன்டனப் போஸ்டர்கள் ஒட்டலாம்; படுகொலையைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கலாம்; தங்கள் பணி முடிந்த பிறகு தர்ணா, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் கூட ஈடுபட்டிருக்கலாம்.  வேலை நிறுத்தம் என்பது மக்களின் உயிர்களைப் பறிப்பதற்கு சமமானது. அப்படிப்பட்ட கொடூரமான காரியத்தில் மருத்துவர்கள் ஈடுபடலாமா .. ?அவர்களது வேலை நிறுத்தத்தினால் எங்காவது யாராவது ஒருவர் சிகிச்சையின்றி மரணமடைந்திருந்தால் அவரது உயிரை அவர்களால் மீட்டுத்தர முடியுமா .. ? அவரது குடும்பத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியுமா .. ? நிச்சயம் முடியாது.
எனவே, இனியாவது மருத்துவர்கள் எதற்காகவும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்தபடி. அந்தப் புனிதத் தன்மையிலிருந்து அவர்கள் விலகிச் செல்லாமலிருக்க வேண்டும்.