Friday 25 October 2013

அனுதாபப்பட்டால் அனுதாபத்திற்குரியவர்களாகி விடுவோம்



ராகுல் காந்தியின் சமீபத்திய பேச்சுக்கள் ஆக்கபூர்வமாக இல்லாமல் குழந்தைத்தனமாகவும் அழுகைமயமாகவும் இருக்கிறன. மத்தியப் பிரதேசத்தில் "கொசுக்கள் என்னைக் கடித்தன" என்கிறார்; " என் தாய் கண்ணீர் விட்டு அழுதார்" என்று ஒரு இடத்தில் ஒப்பாரி வைக்கிறார்; " என் பாட்டியும் தந்தையும் கொல்லப்பட்டது போல நானும் கொல்லப்படலாம் "  என்று தனக்குத் தானே தியாக வேஷம் கட்டிக் கொள்ளவும் முயற்சிக்கிறார்.
ஏன் இந்த ஒப்பாரிக் கூச்சல்கள்..? இதற்காக இந்த ஏமாற்று வேலைகள் ..?
காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு மிக வேகமாக சரிந்து வருவதும் மோடியின் செல்வாக்கு அசுர வேகத்தில் வளர்ந்து வருவதும் கண்டு, ராகுல் இப்படி அழுது கண்ணீர் சிந்தி மக்களின் அனுதாபத்தை தேட முற்படுகிறார்.ஆனால் ராகுலின் இந்த ஒப்பாரிகள் அனுதாபத்திற்குப் பதிலாக சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. 
எதற்காக இந்திரா கொல்லப்பட்டார்..? இந்திராவின் மரணத்திற்குப் பிறகு  நாடு முழுக்க பல்லாயிரக் கணக்கில் அப்பாவி சீக்கியர்கள் காங்கிரஸ் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்டதையும், "ஒரு ஆலமரம் வீழ்ந்தால் பூமி அதிரத்தான் செய்யும்" என்று இந்த சீக்கியர் படுகொலைகளை ராஜிவ் நியாயப்படுத்தியதையும் மக்கள் மறக்கவில்லை. 
இந்திரா மற்றும் ராஜிவின் மரண விவகாரங்களைப் பற்றியும் அதன் பிண்ணணிகளைப் பற்றியும் அலச முற்படுவது இறந்தவர்களை விமர்சிக்கும் அநாகரிக செயலாக அமையக் கூடும் என்பதால் அதைத் தவிர்த்து விடுவோம். இலங்கையில் இலட்சக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதும் ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டதும் அங்கே தமிழினமே கருவறுக்கப்பட்டதற்கும் காரணமானவர்கள் யார் .. இந்தத் தமிழினப் படுகொலையை பின்னணியில் இருந்து கொண்டு அரங்கேற்றியவர்கள்  யார் என்பதும் எல்லோரும் அறிந்த செய்திதானே.
சரி.. ராகுல் ஏன் தான் கொல்லப்படலாம் என்று கூறுகிறார்..? இவர் பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறு மூச்சு கூட விட்டதில்லைதேசப்பிரிவினை பேசுபவர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. மாறாக இத்தகைய தேச விரோத சக்திகளுக்கு ஆதரவாகத்தான் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க பயங்கரவாதிகள் ஏன் ராகுலை கொல்லப் போகிறார்கள் ..?.
இன்று இந்தியாவில் பயங்கரவாதிகளாலும் பிரிவினைவாதிகளாலும் மிகவும் வெறுக்கப்படுபவர் திரு நரேந்திர மோடி அவர்களே. பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிற லஸ்கர்- - தொய்பா பயங்கரவாத அமைப்பானாலும் சரி, உலகளாவிய அல் காய்தா பயங்கரவாதிகளானாலும் சரி , தமிழகத்து பக்ரூதின்களானாலும் சரி எல்லோரும் மோடியே தங்கள் குறி என்கிறார்கள். 
ஆனால், மோடி என்னைக் கொலை செய்ய சதி என்று புலம்பவில்லை; ஐயோ என்னைக் கொல்லப் பார்க்கிறார்களே என்று அழுது மக்கள் அனுதாபத்தை தேடவில்லை. கண்ணீர் விடவில்லை.சிறிதும் அஞ்சாமல் இந்த தேசம் பெரிது; மக்கள் பெரிது; தேசத்தை முன்னேற்றுவதே என் பணி என்று சிங்கம் போல் கர்ஜித்து வலம் வருகிறார்.
நாட்டுக்கு இப்போது தேவை உறுதியான தலைமை; அழுது புலம்புவதும் உயிர் போய் விடும் என்று அரற்றுவதும் அதன் மூலம் அனுதாபம் தேட முயல்வதும் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படுகிற நாடகங்கள். இந்த நாடகங்களை நம்பி வேஷங்களை நம்பி நாம் அனுதாபப்பட்டால் இறுதியில் மக்களாகிய நாம்தான் அனுதாபத்திற்குரியவர்களாகி விடுவோம்