Thursday 25 April 2013

சீனாவின் ஊடுருவல்


சீனப் படையினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு உள்ளே ஊடுருவி முகாம் அமைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. சீனா இப்படி ஊடுருவல்களில் ஈடுபடுவது இது முதன் முறையன்று; இதற்கு முன்பும் பல முறை இவ்வாறு நடந்திருக்கிறது.ஒவ்வொரு முறையும் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் நிகழும்; சீனா வெளியேறும்; பின்பு சில வாரங்களுக்குப் பின் மீண்டும் ஊடுருவும். இப்படி இது ஒரு தொடர்கதையாகவே ஆகிவிட்டது. இந்தியப் பகுதிகள் பலவற்றை தனக்குரியதாக நிலைநாட்டிக் கொள்ள விரும்புகிறது சீனா. அதற்காகத்தான் இப்படி அடிக்கடி எல்லை தாண்டிய ஊடுருவல்களில் ஈடுபடுகிறது. சீனாவின் இந்தப் போக்கு வன்மையான கன்டனத்திற்குரியது. 
சீனா ஒரு ஆக்ரமிப்பு மனப்பான்மை கொண்ட நாடு; திபெத்தை ஆக்ரமித்துக் கொண்ட அதன் வெறி இன்னும் தீர்ந்தபாடில்லை. ஆனால், இந்தியா(அரசு)சமாதானம் என்ற பெயரில் அண்டை நாடுகளிடம் மிக மிக மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து வரும் நாடு. இதனால்தான் சீனா தொடர்ந்து இத்தகைய காரியங்களில் ஈடுபட்டுவருகிறது. 1962ல் இந்தியா மீது படையெடுத்து ஆயிரக்கணக்கான .கி.மீ. பரப்புள்ள நமது நிலப்பரப்பை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் சீனா, நமது மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல்ப் பிரதேசத்தையும் தனக்குரியது என்று சொந்தம் கொண்டாடிவருகிறது.
சீனாவின் தொடர்ச்சியான இத்தகைய ஆக்ரமிப்புகளுக்கு முடிவுகட்டப்பட வேண்டும். உலக அரங்குகளில் சீனாவின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதோடு இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும். பேச்சுவார்த்தைகள் பலனளிக்காவிட்டால் படைபலத்தின் மூலம் அவர்கள் ஊடுருவல் செய்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாடும் தனது எல்லைகளைப் பாதுகாக்க அனைத்து வழிமுறைகளையும் கடைப்பிடிக்க உரிமை பெற்றவை. அதற்காகத்தான் இலட்சக்கணக்கான கோடிகளை செலவளித்து இராணுவத்தை உருவாக்குகின்றன.
இந்தியா ஒரு அமைதியை விரும்பும் நாடாகவே இருக்கட்டும்; அதற்காக நாட்டின் எல்லைகள் ஆக்ரமிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு அமைதி பேண வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கத்தான் அரசும் இராணுவமும் இருக்கின்றன. அவை இரண்டும் நாட்டைக் காக்கும் தனக்குரிய கடமையை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும். 120 கோடி இந்தியர்களும் ஒற்றுமையுடன் அவற்றின் பின் நிற்பார்கள்.
இது 1962 அல்ல; இந்தியா ஒரு அணு வல்லரசு நாடு என்பதை தக்க முறையில் சீனாவுக்கு எடுத்துரைப்பது அவசியம்.


Friday 19 April 2013

மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு...

அரசு அலுவலகங்களில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக குறிப்பிட்ட காலத்தை நிர்ணயிக்கும் சட்டம் நாட்டின் பல மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

உதாரணமாக, பட்டா வழங்க இத்தனை நாட்கள்,கெஸட்டில் பெயர் மாற்றம் செய்ய இத்தனை நாட்கள் என அரசு வழங்கும் சேவைகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட நாட்கள் நிர்ணயிக்கப்படும்.தனது நிலத்திற்கான பட்டா பெறுவதற்காக அரசு அலுவலகத்தை அணுகும் ஒருவர்க்கு குறித்த காலத்திற்குள் அந்தப் பட்டா வழங்கப்படாவிட்டால், தொடர்புடைய அந்த அரசு அதிகாரிக்கு தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிட்ட தொகை அபராதம் விதிக்கப்படும்.

இத்தகைய சட்டம் மத்தியப் பிரதேசம், பீஹார், டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் பஞ்சாப், ஜார்க்கண்ட், கேரளா உட்பட பல மாநிலங்களிலும் அமுல்படுத்தப்பட்டுவருகிறது. மத்திய அரசும் மத்திய அரசின் சேவைகளைப் பெறுவதற்காக இதேபோன்ற ஒரு சட்டத்தை கொண்டுவர ஏற்பாடு செய்துவருவதாக செய்திகள் கூறுகின்றன.  


இத்தகையதோர் சட்டத்தின் மூலம் அரசு நிர்வாகம் சுறுசுறுப்பு அடைவதோடு, மக்கள் அலைச்சல் இல்லாமல் குறித்த காலத்தில் அரசு சேவைகளைப் பெற வழி ஏற்படும்.

தமிழக முதல்வர் அவர்கள் தான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். சமீபத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் 'அம்மா' ( Assured maximum services to marginal people in all villages ) திட்டத்தின் மூலம் தங்களுடைய தேவைகளுக்காக மக்கள் அரசு அலுவலகங்களை நாடிச் செல்வதற்குப் பதிலாக மக்களைத் தேடி அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே அரசு சேவைகளைக் கொண்டுவர முதல்வர் வழிவகுத்திருக்கிறார். இதனால் மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

இதேபோல அரசு சேவைகளுக்கான கால நிர்ணயச் சட்டத்தையும் கொண்டு வந்தால் மக்களுக்கு அது பேருதவியாயிருக்கும்