Wednesday 21 May 2014

முதல்வராக கெஜ்ரிவால்




ஊழலுக்கு எதிராக சமூக சேவகர் அன்னா ஹஸாரே நடத்திய போராட்டத்தின் மூலமாக பிரபலமான கெஜ்ரிவால், தனிக்கட்சி ஆரம்பித்து, டில்லி சட்டமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்து,காங்கிரசின் ஆதரவோடு ஆட்சிக்கும் வந்தார். ஊழலுக்கு எதிராய் இயக்கம் நடத்தியவர் ஊழலின் உறைவிடமாயிருந்த காங்கிரசின் ஆதரவுடன் பதவியில் அமர்ந்த போதே அவரது ஊழல் எதிர்ப்பு என்பது ஒரு ஏமாற்று வேலை என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.

இந்நிலையில் மக்களவைக்குத் தேர்தல் வர, அவசர அவசரமாக டில்லி முதல்வர் பதவியை இராஜினாமா செய்த கெஜ்ரிவால், தனது கட்சியின் சர்பாக நாடு முழுக்க 400க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தினார். ஆனால், ஒரு சில தொகுதிகளைத் தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி டிபாசிட் இழந்தது. மிகப்பெரும் ஊழல் அரசியல்வாதிகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, 13 ஆண்டுகாலமாக குஜராத்தில் ஊழலற்ற நேர்மையான மக்கள் நல  ஆட்சியை அளித்து வந்த,நாட்டின் பிரதமர் பதவிக்கு மக்களால் நியமிக்கப்பட்ட நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவினார் கெஜ்ரிவால். 

இப்போது எப்படியாவது மீண்டும் டில்லியின் முதல்வராகிவிடத் துடிக்கிறார் கெஜ்ரிவால்தான் டில்லியின் முதல்வர் பதவியை விட்டு விலகியபோது, உடனடியாகச் சட்டசபையைக் கலைக்க டில்லி கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதற்காக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். இப்போது சட்டமன்றத்தைக் கலைக்கக் கூடாது என்று அதே கவர்னருக்கு கடிதம் கொடுத்திருப்பதோடுதன்னை எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என்று காங்கிரசின் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

டில்லியின் முதல்வராயிருந்த ஷீலா தீட்சீத்தை தோற்கடித்ததனால், அவருக்கு ஏற்பட்ட ஆணவம், அகம்பாவம் மற்றும் தனக்கு மக்களிடம் அபரிமிதமான செல்வாக்கு இருக்கிறது என்ற குருட்டு நம்பிக்கை இவற்றின் காரணமாக வாரணாசியில் மோடியை எதிர்க்க முனைந்தார். வாரணாசி மக்கள் கொடுத்த பலத்த அடியில் அதிர்ந்து போய் மீண்டும் டில்லிக்கு ஓடிவந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரசின் காலில் விழுந்து என்னை முதல்வராக்குங்கள்... என்னை முதல்வராக்குங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

அவர் இனி ஒருக்காலும் டில்லியின் முதல்வராகப்போவதில்லை; ஆனால், இந்தியாவின் 'மட்டரகமான அரசியல்வாதி'களின் முதல்வராக  மாறியிருக்கிறார்.

Saturday 3 May 2014

களைகள் நீக்கப்படவேண்டியவை.





மே1 அன்று சென்னை சென்ட்ரல் இரயில்வே ஸ்டேசனில் இரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒரு அப்பாவி இளம்பெண் கொல்லப்பட்டிருக்கிறார். சிலர் காயமடைந்திருக்கின்றனர். இதுபோன்ற பயங்கரவாதச் செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியவை.இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பயிரின் நடுவே விளைகிற களை போன்றவர்கள். களைகள் நீக்கப்படும்போதுதான் பயிர்கள் செழித்து வளரும். பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டால்தான் நாடும் மக்களும் நலமாயிருக்க முடியும்.

இப்படிப்பட்டவர்களுக்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுப்பது ஒருபுறமிருக்க, மக்களும் வெகுண்டெழ வேண்டும். எவ்விதக் காரணமுமின்றி தங்கள் மீது தொடுக்கப்படுகிற கொலை வெறித் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் சீற்றம் கொள்ள வேண்டும்.நமது தேசத்தைச் சீரழிக்க நினைக்கிற இப்பயங்கரவாதிகளையும் இவர்களுக்கு பல வகைகளிலும் துணையாய் இருப்பவர்களையும் ஒழிக்க மக்கள் துணையாயிருக்க வேண்டும்

சில மாதங்களுக்கு முன்பு, கொலை உட்பட பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட போலீஸ் ஃபக்ரூதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் போன்றவர்களை தமிழக காவல்துறை கைது செய்தபோது, மத அடிப்படையில் ஓட்டுக்களைப் பெறுவதற்காக தமிழகத்தின் வயது முதிர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் உட்பட சிலர் அவர்கள் கைது செய்யப்பட்ட விதம், முறை போன்றவற்றை விமர்சனத்திற்குள்ளாக்கி,அவர்கள் கைது செய்யப்பட்டதை மறைமுகமாக எதிர்த்தனர்.

சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட அந்த வயது முதிர்ந்த அரசியல் தலைவரின் மகன் அப்பயங்கரவாதிகளுக்கு ஆதரவாய் பேசி பிரச்சாரம் மேற்கொண்டாது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட செயல்கள்தான் மத வெறியின் அடிப்படையிலான பயங்கரவாதிகள் துணிச்சல் பெற துணையாகிறது. பயங்கரவாதிகள் மட்டுமல்ல.. ஓட்டுக்காக அவர்களுக்கு ஆதரவளிக்கிற இப்படிப்பட்ட மக்கள் விரோத, போலி மதச்சார்பற்ற அரசியல்வாதிகளும் ஆபத்தானவர்களே.


தங்களது மத வெறிக்காக அப்பாவி மக்களை பலி கொள்கிற இத்தகையவர்களை ஒடுக்க கடுமையான சட்டம் தேவை. அமையவிருக்கின்ற புதிய மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும். தமிழக அரசு ,பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இது தொடர்பாக அரசு எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் துணையாயிருப்பதோடு, அப்பயங்கரவாதிகளுக்கு எவ்வகையிலும் ஆதரவாயிருப்பவர்களையும் புறக்கணிக்க வேண்டும்.

அனைத்து மக்களையும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டியது அரசின் கடமை. அதற்கு மதவெறியால் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை ஒழித்துக் கட்டவேண்டியது மிகவும் தேவை.