Sunday 6 December 2015

மீண்டு எழுவோம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ளச் சேதங்கள் வரலாறு காணாதவை .இதை ஒரு தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்தக் கொடும் சூழ்நிலையைச் சமாளிக்க அதிலிருந்து மீண்டு வர தமிழக அரசு துடிப்புடனும் வேகத்துடனும் செயல்பட்டு வருகிறது. அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரின் உத்தரவுக்கிணங்கி பம்பரமாய் சுழன்று நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றனர். நடுநிலையோடு நோக்கும் அனைவரும் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளவே செய்வார்கள். மத்திய அரசும் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ரு 1930 கோடி நிதியுதவியும் மேலும் பல்வேறு உதவிகளையும் உடனடியாக துரித கதியில் செய்து வருகிறது.

தமிழக அரசின் ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள், மீனவர்கள், துப்புரவு பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், இராணுவத்தினர், மத்திய அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பல தரப்பினரும் இந்த இன்னல்மிகு சூழ்நிலையைச் சமாளிக்க சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள்.

பல்வேறு தொண்டு நிறுவனங்களும் பிறரும் பிற மாவட்டத்து மக்களும், பிற மாநில அரசுகளும் மக்களும் நிதி உதவி உட்பட காலத்திற் செய்ய வேண்டிய பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அரசுகளின் முயற்சிகளினாலும் மேலே கூறிய பலதரப்பட்டோரின் உதவிகளினாலும் சேவைகளினாலும் இந்த கொடிய சூழ்நிலையிலிருந்து மக்கள் உறுதியாக மீண்டுவருவார்கள்நாம் மீண்டும் எழுவோம்

Friday 20 November 2015

'எது நடந்தாலும்.. யார் என்ன சொன்னாலும் ...மோடியைத் தாக்கு '

ராகுல் காந்தி இங்கிலாந்தில் பேக் ஆப்ஸ்( Back ops Limited )என்ற நிறுவனத்தை துவக்கி அந்நிறுவனத்தின் தலைவராகவும் செயலாளராகவும் இருந்தபோது, அந்நிறுவனம் தாக்கல் செய்த ஆண்டு கணக்கு அறிக்கைகளில் ( Annual return statemaents ) ராகுல் காந்தி இங்கிலாந்து பிரஜை என குறிப்பிடப்பட்டிருக்கிறது; ஒரு முறை அல்ல..2005,2006 மற்றும் 2009 என 3 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளில் ராகுல் இங்கிலாந்து நாட்டு பிரஜை என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கணக்கு அறிக்கைகளை சரிபார்த்து கையெழுத்திட்டிருப்பவர் ராகுல் காந்திதான்இதற்கு ஆதாரமாக ஆவணங்களும் இருக்கின்றன. இந்த உண்மைகளை சுப்பிரமணிய சாமி அம்பலப்படுத்தியிருக்கிறார்.     


காங்கிரஸ் கட்சியும் இதை மறுக்கவில்லை; ஆனால், அது டைப்  ( Type ) அடித்தவரின் தவறால் ஏற்பட்டது என்று சப்பைக் கட்டு கட்டியிருக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் கூடவா தவறாக டைப் செய்வார்கள்..? அதுவும் 3 வருடங்களாக..? நம்ப முடிகிறதா காங்கிரஸ் கட்சியின் விளக்கத்தை..? 2004 ல் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி தான் தாக்கல் செய்த சொத்துக் கணக்குகளில் தான் இங்கிலாதில் வசிப்பதாக குறிப்பிட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


ஆனால், ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. மாறாக, பிரதமரைப் பார்த்து தைரியமிருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று சவால் விட்டிருக்கிறார். இவ்விஷயத்தை மக்கள் முன் அம்பலப்படுத்தியவர் சுப்பிரமணியகாமி அவர்கள். ஆனால், ராகுல் மோடிக்கு கன்டனம் தெரிவிக்கிறார். சுப்பிரமணிய சாமியின் குற்றக்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றால் விளக்கங்களுடன் அவருக்கு ராகுல் பதிலளிக்க வேண்டும். அல்லது அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்க வேண்டும். இவற்றில் எதையும் செய்யாமல்,மோடி மீது குற்றம் சாட்ட முற்படுவதும் , என்னைக் கைது செய்து பார்.. என்னைக் கைது செய்து பார்.. என்று துடிப்பதும் சரியான விஷயமாகத் தெரியவில்லை. 'உண்மையை மறைக்க உரக்க சத்தம் போடு' என்பார்கள். ராகுலின் செயல் இப்படித்தான் இருக்கிறது

யார் என்ன சொன்னாலும் ...என்ன செய்தாலும் மோடி மீது பழி போடுவதையும் குற்றம் சாட்டுவதையும் காங்கிரஸ் உட்பட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றன. பீஹார் தேர்தலுக்கு முன்பாக பசு வதைப் பிரச்னை, இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பலர் கூறிய கருத்துக்களுக்கு மோடியை குற்றவாளியாகச் சித்தரித்தார்கள் இப்போதும் அதே நிலையை இக்கட்சிகள் கடைப்பிடிக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி வீழ்த்தப்பட்டதற்கு மோடியே பிரதான காரணம் என்பதனால் மோடியை பலவீனப்படுத்தி விட்டால் மீண்டும் அதிகாரம் தாங்கள் கைவசமாகிவிடும் என்று இக்கட்சிகள் கருதுகின்றன. அதனால்தான்  'எது நடந்தாலும்.. யார் என்ன சொன்னாலும் மோடியைத் தாக்கு ' என்ற வியூகத்தை இக்கட்சிகள் கடைப்பிடிக்கின்றன. இவ்வியூகம் பீஹார் தேர்தலில் பெரும் வெற்றியைத் தேடித் தந்ததைக் கண்ட இக்கட்சிகள் இதே அணுகுமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்க எண்ணுகின்றன.

ஆனால், ஏமாற்று வேலைகளாலும் பொய்களாலும் எப்போதும் உண்மையை  மறைக்க முடியாது

Monday 9 November 2015

பீஹாரில் தோல்வி.


பீஹாரில் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலில் பா... தோல்வியைச் சந்தித்திருக்கிறது; நிதிஷ் குமார்+லாலு கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

இக்கூட்டணியில், தற்போது முதலமைச்சராக இருக்கும் மற்றும் வெற்றி பெற்றால் முதலமைச்சராவார் என்றும் அறிவிக்கப்பட்ட நிதிஷ்குமாரின் கட்சி 71 இடங்களைக் கைப்பற்றியிருக்க,ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருக்கும்  லாலு பிரசாத் யாதவின் கட்சி 80 இடங்களைப் பிடித்திருக்கிறது. இக்கூட்டணியின் வெற்றியில் ஜாதி ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால், பாஜ..கூட்டணியின் தோல்விக்கு கட்சியின் பல்வேறு தலைவர்களிடமிருந்தும் கட்சிக்கு aதரவான முக்கிய தலைவர்களிடமிருந்தும் வெளிப்பட்ட தவறான அறிக்கைகளும் கருத்துக்களுமே பிரதான காரனமாகும். எதை எதையெல்லாம் பேசக்கூடாதோ அதையெல்லாம் எவ்வித தேவையோ காரணமோ இன்றி சர்வ சாதாரணமாக வெளியில் பேசினார்கள். தேசத்தின் வளர்ச்சிக்காக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால், கட்சியினர் சிலர் மத விவகாரங்களிலும் சாதி விவகாரங்களிலும் மக்கள் உணர்ச்சிபூர்வமாக கருதுகின்ற சில விஷயங்களிலும் தேவையற்ற பல கருத்துக்களை கூறி மக்களை குழப்பினார்கள்; பயமுறுத்தினார்கள். மோடி தலைமையிலான தனிப் பெரும்பான்மை அரசு அமைந்ததும் இனி என்றைக்கும் பா.ஜ.க. அரசுதான் என்பது போன்aறதொரு எண்ணத்தை உருவாக்கிக் கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொட்டினார்கள்.
மோடி அரசிற்கு விரோதமான அனைத்து சக்திகளும் கூட்டு சேர்ந்து இவ்விஷயங்களை பெரிதாக்கி மக்களிடம் மேலும் திரித்துக் கூறி நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதில் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

வளர்ச்சிக்காக,ஊழலற்ற நிர்வாகத்திற்காக தேசத்தை வலிமை பொருந்திய நாடாக மாற்றுவதற்காக, போலி மதச்சார்பின்மை போக்கி அனைத்து மக்களும் சம வாய்ப்பு பெற்று முன்னேறுவதற்காகவே மக்கள் மாற்றம் தேடினார்கள். மோடி அந்த மாற்றத்தைக் கொண்டு வருவார் என்பதற்காகவே தனிப் பெரும்பான்மையுடன் வெற்றியும் தந்தார்கள்.
ஆனால், தலைவர்களில் ஒரு சாரார் அவசர கதியில் உடனடியாக எதை எதையோ செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் கூடாத பேச்சுக்களையும் செயல்பாடுகளையும் மேற்கொண்டதால்தான் பீஹாரில் இந்தப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பது நிச்சயமான உண்மை.