Wednesday 24 July 2013

2002ம் 2013ம்



2002ல் குஜராத்தில் நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பாக எண்ணற்ற தவறான செய்திகள் திட்டமிட்ட முறையில் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. ஆயிரக் கணக்கில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதாகவும் முதல்வர் நரேந்திர மோடி கலவரங்களை ஒடுக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது போலவும் பொய்கள் இப்போதும் கூட ஊர் வலம் வருகின்றன.
27 பிப்ரவரி 2002 அன்று குஜராத்திலுள்ள கோத்ரா என்னுமிடத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சில இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அயோத்தி சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஹிந்து பக்தர்கள் 59 பேர் இதில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இதில் 25 பேர் பெண்கள் 18 பேர் குழந்தைகள் ஆவர். இந்தக் கொடூர சம்பவத்தின் எதிர் விளைவாக மாநிலத்தின் சில பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.
இக்கலவரத்தில் 5000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர் என்றெல்லாம் சிலர் பொய்யைப் பரப்பி நாட்டின் மத அமைதியை கெடுப்பதையே நோக்கமாய்க் கொண்டு பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால், உண்மை என்ன ..? இக்கலவரத்தின் போது கொல்லப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை 794;கொல்லப்பட்ட ஹிந்துக்களின் எண்ணிக்கை 254; இது 11 மே 2005 அன்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உள்துறை இணை அமைச்சர் ஜெய்ஸ்வால் கொடுத்த அதிகாரபூர்வமான தகவல்.  
குஜராத் கலவரத்தில் முஸ்லீம்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்பது போன்றதோர் பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது; ஆனால், கலவரங்களில் இருதரப்பினருமே உயிரிழந்திருக்கின்றனர்.
கலவரத்தை ஒடுக்க மோடியின் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், கலவரத்தின் போது கலவரத்தை ஒடுக்க காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் மட்டும் சுமார் 98 பேர் கொல்லப்பட்டனர்; இவர்களில் 90%க்கும் மேற்பட்டவர்கள் ஹிந்துக்கள். சுமார் 4000 பேர் கைது செய்யப்பட்டனர்; இவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்கள் ஆவர். இதிலிருந்தே கலவரங்களை ஒடுக்க மாநில அரசு தன்னாலியன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது என்ற உண்மை தெளிவாகிறது.
794 முஸ்லீம்கள்தான் கொல்லப்பட்டனர் என்பதனால் அது ஒரு பெரிய விஷயமில்லை என்று வாதிட இந்தப் புள்ளிவிவரம் இங்கே எடுத்துரைக்கப்படவில்லை.ஒவ்வொரு முஸ்லீம் உயிரும் பாதுகாக்கப்பட வேண்டியதுதான்; அதே போல ஒவ்வொரு ஹிந்துவும் பாதுகாக்கப்பட வேண்டியவன்தான்.  ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக 59 ஹிந்துக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது மக்களிடையே பெரும் கோபத்தை தூண்டி விட்டதன் விளைவே இப்பெரும் கலவரங்கள் நடக்க காரணமாய் அமைந்துவிட்ட சூழ்நிலையை இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது நாடு முழுக்க ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்; அப்போது ராஜீவ் காந்தி அவர்கள்,"ஒரு பெரிய ஆலமரம் வீழ்ந்தால் பூமி அதிரத்தான் செய்யும்" என்று அதை நியாயப் படுத்தும் வகையில் பேசினார். ஆனால், மோடி கலவரத்தை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார்; அதனால்தான் போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 70க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பலியாக நேர்ந்தது.
எனவே குஜராத் கலவரம் என்பதை வரலாற்றின் ஒரு கசப்பான சம்பவம் என்ற ரீதியில் உணர்ந்து அதை மறக்க முயல வேண்டும். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டிருப்பதாலும் கலவரத்தைப் பற்றிய உண்மைகளை மறைத்து பொய்த்தகவல்களை பரப்பிக் கொண்டிருப்பதாலும் நாட்டில் மத அமைதிதான் கெடும். அந்த விரும்பத் தகாத சம்பவத்திலிருந்து விடுபட்டு குஜராத் அனைத்துத் துறைகளிலும் வெகு வேகமாக முன்னேறி வருகிறது
2002 கலவரத்திற்குப் பிறகு குஜராத்தில் மோடி மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று வந்திருக்கிறார்.ஆனால், இதுவரை எந்த ஒரு சிறு மதக்கலவரமோ முஸ்லீகளுக்கு எதிரான தாக்குதலோ குஜராத்தில் நடந்ததில்லை என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் நிர்வாகத் திறமையினால் குஜராத் நாட்டின் முதல் மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. குஜராத்தின் இந்த அபார வளர்ச்சியால் மாநிலத்திலிருக்கும் ஹிந்துக்கள் மட்டும் முன்னேறவில்லை; இலட்சக்கணக்கான முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் முன்னேறி வளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நரேந்திர மோடி வளர்ச்சிக்கான தலைவர்; முன்னேற்றத்திற்கான தலைவர். குஜராத் கண்ட அந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் நாடு காண வேண்டும்.
சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் மோடியின் தலைமையை ஏற்பதன் மூலம் அது சாத்தியமாகும்.