Tuesday 8 May 2018

நீட் மாய்மாலங்கள்


நீட் தேர்வு கடந்த 2 வருடங்களாக அனைத்து மாநிலங்களிலும் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு தேர்வெழுத விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் , உடை மற்றும் பிற கட்டுப்பாடுகள் தமிழக மாணவர்களுக்கு மட்டும் உரியதல்ல.. அனைத்தும் அனைத்து மாநில மக்களுக்கும் பொதுவானவையே. இந்த இரண்டு வருடங்களும்  பிற மாநிலங்களில் நீட் தேர்வு தொடர்பாக எவ்விதப் பிரச்னையுமில்லை; போராட்டங்களுமில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஏன் இத்தனை கூச்சல்கள்..கூக்குரல்கள்..ஆர்ப்பாட்டங்கள்..?


நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது ஏற்புடையது அல்ல எனினும் தேர்வெழுத கேரளாவிற்குச் சென்ற மாணவரின் ( இதய நோயுள்ள ) தந்தை திடீர் மாராடைப்பால் இறந்ததற்கும் நீட்டை குற்றம் சாட்ட முற்படும் சில அரசியல்வாதிகள் மற்றும் மீடீயாக்களின் போக்கு விசித்திரமாகவும் அருவருப்பானதாகவும் இருக்கிறது. நீட் தேர்வு எழுத அந்த மாணவர் கேரளாவிற்கு அனுப்பப்பட்டதால்தான் அவரது தந்தை மரணமடைய நேர்ந்தது தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் அளிக்கப்பட்டிருந்தால் அவர் உயிரோடிருந்திருப்பார் என்று கூறப் போவோமேயானால், சிவகங்கையைச் சார்ந்த மாணவி ஒருவருக்கு மதுரையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்க தேர்வு எழுதிய அந்த மாணவியின் உடன் வந்த தந்தை மாரடைப்பால் மரணமடைந்திருக்கும் இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்று கூற..?  நீட் தேர்வு நடைபெற்ற நாளில் தேர்வு எழுதிய இலட்சக்கணக்கான மாணவ மாணவிகளின் இல்லங்களில் யார் இறந்திருந்தாலும் அதற்கும் நீட் தான் காரணம் என்று குற்றம் சாட்டுவார்கள் போலிருக்கிறதே

இதுபோன்ற எதிர்பாராத மரணங்கள் வருத்தத்திற்குரியது. ஆனால், இயற்கையாக நிகழ்ந்த இத்தகைய துயரச் சம்பவங்களுக்கும் நீட் தேர்வுக்கும் முடிச்சு போட நினைக்கும் சிலரது உள்நோக்கம் என்ன..? மனநிலை தவறியவர்கள் போல இவர்கள் இப்படி உளற வேண்டியதன் அவசியம் என்ன..? 


10 மற்றும் +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில்கூட ஒரு சிலர் தோல்வி பயம் மற்றும் சில காரணங்களினால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த மாணவர்களின் உறவினர்கள் கூட தேர்வு சமயங்களில் உயிரிழந்திருக்கின்றனர். இதற்காக தமிழகத்தில் இனிமேல் 10 மற்றும் +2 தேர்வுகளே நடக்கக்கூடாது என்று அறிவித்துவிடலாமா..?.
தரங்கெட்ட தகுதியில்லாத அரசியல்வாதிகள் தமிழகத்தில் அதிகரித்துவிட்டதின் வெளிப்பாடே இது. 

நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு ஆடை அலங்காரம் மற்றும் பிற விஷயங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது உண்மைதான். தேர்வெழுத வந்தவர்களை மெட்டல் டிடக்டர் பயன்படுத்தியும், மற்றும் பல வகைகளிலும் கடுமையாக சோதித்ததும் உண்மைதான். ஆனால், இப்படிப்பட்ட சோதனைகள் தமிழக மாணவர்களுக்கு எதிராக மட்டும் நடத்தப்படவில்லை.. அனைத்து மாநில மாணவர்களுக்கு எதிராகவும் நடத்தப்பட்டது.
நவீன தொழில் நுட்பங்களும் தொழில் நுட்பக் கருவிகளும் பெருகியிருக்கும் இக்காலகட்டத்தில் எந்த மாணவரும் இத்தகைய நவீன கருவிகளைப் பயன்படுத்தி முறைகேடான வழியில் வெற்றிபெற்று, திறமை வாய்ந்த மாணவர்கள் நிராகரிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தகைய கடும் சோதனைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த சோதனைகள் மாணவர்களின்   நலனுக்கானவை. ஆனால்,தமிழகத்தில் மட்டும் இவை பெரும் பிரச்னையாக்கப்படுகின்றன.

எப்படியாவது நீட் தேர்வை தமிழகத்தில் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதற்காக பிரதான எதிர்க் கட்சியான திமுக உட்பட பலரும் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறார்கள்.கடந்த வருடம் அனிதா என்ற அப்பாவிப் பெண்ணை தற்கொலை செய்துகொள்ள வைத்தார்கள். இந்த முறை இயற்கையாக நிகழ்ந்த மரணங்களைக் கூட நீட் மீது சுமத்த முற்படுகிறார்கள். நீட் தேர்வு எழுதியிருக்கிற எந்த மாணவனாவது, மாணவியாவது தற்கொலை செய்து கொள்ளமாட்டார்களா என்று இந்த பிணம் தின்னி அரசியல்வாதிகள் இந்த வருடமும் காத்திருக்கிறார்கள் என்று கூறினால் கூட அது நிஜமாகத்தான் இருக்கும்.. அதற்காக மாணவர்களைத் தூண்டிவிடும் முயற்சிகளிலும் இவர்கள் மறைமுகமாக ஈடுபட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டும் நீட்டுக்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்..? தமிழகத்தில் மட்டும் நீட்டுக்கு ஏன் விலக்கு எதிர்பார்க்கிறார்கள்..? தமிழக மாணவர்களின் கல்வியறிவு நீட்டுக்கு தேவையான தரத்தை எட்ட முடியாத அளவிற்கு பின்தங்கிப் போயிருக்கிறதா..? அதெல்லாம் இல்லை; தமிழக மாணவர்களின் கலிவியறிவு மிகவும் உயர்ந்ததுதான்.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தனியார் சுயநிதி மருத்துவக் கல்வி நிலையங்கள் அதிகமாயிருக்கின்றன. நீட் அமுல்படுத்தப்படும் முன் இந்தக் கல்லூரி உரிமையாளர்கள் மருத்துவக் கல்லூரி சீட்கள் கோடிக்கணக்கில் விலை பேசி விற்று பெரும் தொகையை இலாபமாக்கி கொழித்துக் கொண்டிருந்தனர். நீட் இந்த அநியாய பகற்கொள்ளைக்கு முடிவு கட்டிவிட்டது. திறமையிருந்தால் ஏழை மாணவ மாணவிகள் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்வி பயிலலாம் .. மருத்துவராகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இப்போது நீட் ஐ எதிர்க்கும் அரசியல்வாதிகள் தலைவர்கள் பலர் இத்தகைய தனியார் மருத்துவக் கல்லூரிகள் பலவற்றின் நேரடியாகவோ பினாமியாகவோ உரிமையாளர்களாயிருக்கிறார்கள். மற்றும் சிலர் கல்லூரி உரிமையாளர்களின் கோடிகளுக்கு விலைபோனவர்களாயிருக்கிறார்கள். அதானால்தான் இந்த நீச அரசியல்வாதிகள் எப்படியாவது எத்தனை பொய்களைச் சொல்லியாவது நீட்டை தமிழ்நாட்டிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

அதோடு, நீட் விஷயத்தையும்  பிரதமர் மோடிக்கு எதிரான பிரச்னையாக மாற்ற அவருக்கு எதிரான சில மதவெறி சக்திகளும் மதமாற்ற சக்திகளும் நினைக்கின்றன. இவர்கள் தங்கள் எதிர்ப்பை தங்கள் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி, இதே தகுதியற்ற அரசியல்வாதிகள் மூலமும் அப்பாவி மாணவர்களைத் தூண்டிவிடுவதன் மூலமும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

தமிழக மாணவர்கள், இளைஞர்கள் இந்தப் பித்தலாட்டக்காரர்கள்வலையில் வீழ்ந்துவிடக் கூடாது. பொய்களாலும் ஏமாற்று வேலைகளாலும் தங்கள் அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் இந்த நாசகார சக்திகளின் செயல்பாடுகளிலிருந்து தமிழ்ச் சமுதாயம் விலகியிருக்க வேண்டும்.
தமிழ்ச் சமுதாயம் தலைசிறந்த சமுதாயம் என்று நிருபிக்க வேண்டும்.