Wednesday 29 July 2015

களைகளுக்கு அனுதாபம் தேவையில்லை.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு பெருமளவில் மக்களைக் கொன்று குவிப்பவர்கள் மற்றும் தேசத்திற்கு எதிரான பெரும் சதிச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பலகட்ட விசாரணைக்குப் பின் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிக்கும்போது, அரசியல் கட்சியினர் சிலரும் சமுதாயத்தில் பிரபலமானவர்கள் என்றழைக்கப்படுகிற சிலரும் அந்த பயங்கரவாதியை தூக்கிலிடக் கூடாது என்று கோரிக்கையை வைக்கத் துவங்குகினனர். அதோடு, தூக்கு தண்டனையையே சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற கூச்சலும் ஒலிக்க ஆரம்பிக்கிறது.

பயங்கரவாதிகளால் கொல்லப்படும் நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிர்களைப் பற்றி சிறிது கூட கவலைப்படாத இவர்கள், அந்தப் பயங்கரவாதியின் உயிரைக் காப்பாற்ற பல வகைகளிலும் முயற்சி செய்கின்றனர். ஒருவகையில் பார்த்தால், பயங்கரவாதிகளை விட அவர்களுக்கு வக்காலத்து வாங்கி, அவர்களுக்கு ஆதரவான உணர்வை மக்களிடம் உண்டாக்க முயலும் இத்தகையவர்களே சமுதாயத்திற்கு பெரும் தீங்கிழைக்கிறார்கள் என்று சொன்னால் அதில் மிகை ஏதுமில்லை.
இத்தகைய நபர்களின் கருத்துக்களை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். பயங்கரவாதிகள் சமுதாயத்தின் களைகள் போன்றவர்கள்; சமுதாயம் நலம் பெற களைகள் அகற்றப்பட்டாக வேண்டும்.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்திய பின்பும் அவர்கள் மீதான வழக்கு முடிவடைந்து இறுதித் தீர்ப்பு வர பலப் பல வருடங்களாகி விடுகின்றன. இந்த நீண்ட நெடிய காலத்திற்குள் நடைபெற்ற பயங்கரவாதச் செயலின் கொடுமையையும் குற்றத்தின் தன்மையையும் மறந்து விடுகின்றனர். இதனால், தூக்கு தண்டனை பெற்ற கொடிய பயங்கரவாதி மக்களில் ஒரு சாராரின் அனுதாபத்திற்குரியவனாகி விடுகிறான்.

எனவே, விரைவான விசாரணை நடைமுறைகள் வேண்டும். காலதாமதமான தீர்ப்புகள் பல்வேறு விதமான தவறுகளுக்கும் தீய எதிர் விளைவுகளுக்கும் காரணமாக அமைகின்றன. பயங்கரவாதம் தொடர்பான வழக்குகள் மட்டுமல்ல பல்வேறு வகையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளிலும் கூட இதே நிலைதான் நிலவுகிறது; 15 வருடங்கள், 20 வருடங்கள் என காலதாமதத்துடன் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. குற்றங்கள் குறைய விரைந்து நீதி வழங்கப்படுவது அவசியம்.

வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் விரைவு பெற நீதித் துறையும் வழக்கறிஞர்களும் அரசும் இணைந்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதம் கருவறுக்கப்பட இதுவும் ஒரு முக்கிய தேவையாகும்.