Wednesday 22 April 2020

கொரானாவை வெல்வோம்.



சீனாவில் உருவான அல்லது உருவாக்கப்பட்ட கொரானா வைரஸ் உலக நாடுகளில் மிகப்பெரும் பாதிப்பை உருவாக்கி மக்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. உலகம் முழுக்க சுமார் 1,80,000 மக்களின் உயிர்களை பலி வாங்கியிருக்கும் நிலையில், இதன் முடிவுக்கு இன்னமும் கூட நிலையான தீர்வு காணப்படாமலிருக்கிறது. 

உலகப் பொருளாதாரம் மண்ணில் வீழ்ந்து கிடக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0 டாலருக்கும் குறைவாகப் போய்  -32 டாலர் என்ற நிலையை எட்டியிருக்கிறது. உலக நாடுகளில் ஊரடங்கின் காரணமாக பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு மிகவும் குறைந்து போயிருப்பதால் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க கிடங்குகள் இல்லாத நிலையில் உற்பத்தி நிறுவனங்கள் கச்சா எண்ணெய் வாங்குபவர்களுக்கு 32 டாலர் அளிக்கும் ஒரு விசித்திர நிலை உருவாகியிருக்கிறது. 

வைரஸின் சீற்றம் இன்னும் குறைந்தபாடில்லை. மீண்டும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டிய நிலையில், வேலையின்மை அதிகரித்து ஏழை மக்கள் வாழ்வாதாரம் முடங்கிப் போகும் ஆபத்திருக்கிறது . உலகின் மற்ற நாடுகளை விட நமது நாட்டு மத்திய மாநில அரசுகள் நிலைமையை சிறப்பாக கையாண்ட போதிலும் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.

அமெரிக்க, ஜெர்மனி, ஃபிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கொரானா பாதிப்புகளுக்கு காரணமாக சீனாவை பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றன. சில நாடுகள் சீனாவிடமிருந்து நஷ்ட ஈடும் கோரியிருக்கின்றன. சீனாவின் அலட்சிய மனப்பான்மையே கொரானா பரவலுக்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்படுவதோடு, கொரானா சீனாவின் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பின் விளைவாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் உருவாகி விசுவரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இது உண்மையாகவும் இருக்கக் கூடும் ; ஏனெனில் சீனா அப்படிப்பட்ட ஒரு நாடுதான். கொரானா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின் உலக நாடுகள் சீனாவுக்கு எதிராக திரண்டெழக் கூடும். சீனாவுக்கு எதிராக யுத்தம் என்பது சாத்தியமற்றது. ஆனால், பொருளாதார தடை உட்பட்ட பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை சீனா எதிர் கொள்ள நேரிடலாம்.                       


இதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்; நாளை உலகின் எந்த நாடாவது கொரானா போன்ற ஒரு வைரஸை செயற்கையாக உருவாக்கி, அதற்கு முடிவு கட்டும்  மருத்துவ இரகசியத்தையும் தன் வசம் வைத்துக் கொள்ளும் சக்தி பெற்றால், அதுவே உலகின் மிகப் பெரும் வல்லரசாக மாறும்.அதுவே உலகின் பெரும் அழிவை உருவாக்கும் ஆயுதமாகவும் விளங்கும். இது இப்போதைக்கு கற்பனை என்றாலும் வரும் காலம் இதை நிஜமாக்கலாம். உலக வல்லரசுகளின் மத்தியில் இப்போதே இது போன்ற ஒரு திட்டம் உருவாகி இருக்கவும் கூடும்.ஆனால், இதுபோன்ற கற்பனைகள் நிஜமாகும்போது, அவற்றையும் எதிர்கொள்ளும் மாற்று சக்தியை அல்லது அதே போன்றதொரு அழிவு சக்தியை நம் நாடும் பெற்றிருக்கும். 

இப்போது கொரானாவுக்கு எதிராக நமது மத்திய மாநில அரசுகள் நடத்தும் போரில் உதவ பொருளாதார வசதி பெற்ற ஒவ்வொருவரும் தம்மாலான பெரும் நிதி உதவியை அரசுகளுக்கு அளிக்க வேண்டும். அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் கொரானாவுக்கு எதிரான போரில் இந்தியா முழுமையான வெற்றி பெறும்.