Sunday 27 October 2019

இது மதச்சார்பின்மையா..?


தீபாவளி திருநாள் உலகளாவிய அளவில் மக்களால் சிறப்புடன் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். தீமையை நன்மை வென்றதன்  மற்றும் இருள் நீங்கி ஒளி பரவுவதன்  குறியீடாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இத்திருநாளுக்கு அமெரிக்க அதிபர் உட்பட, உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் ஹிந்துக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட பல்வேறு அரபு நாட்டு தலைவர்கள் கூட ஹிந்துக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் மிக மிக பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி ஆகும்.

பொதுவாக இந்தியாவில் இஸ்லாம் கிறித்துவக்  கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தீபாவளிக்கு மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின்  அதை ஒரு தகாத செயலாக நினைத்து, தீபாவளிக்கு  மக்களுக்கு வாழ்த்து சொல்வதை தவிர்த்து விடுகிறார்.  தீபாவளிக்கு மட்டுமல்ல.. எந்த ஹிந்து பண்டிகைகளுக்குமே அவர் மக்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை.ஆனால், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களின் அனைத்து பண்டிகை தினங்களுக்கும் தவறாமல் வாழ்த்து தெரிவித்து விடுகிறார் ஸ்டாலின்.

திமுக. ஒரு கடவுள் மறுப்பு மற்றும் மதங்களுக்கு எதிரான கட்சி என்றால், அனைத்து மத பண்டிகைகளையும் அவர் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால் அவர், ரம்ஜான், பக்ரீத், புனித வெள்ளி, கிறிஸ்துமஸ் என பிற மதத்தினர்கள் புனிதமாக நினைக்கும் அனைத்து தினங்களுக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு, ஹிந்துக்கள் கொண்டாடும்  அனைத்து பண்டிகை நாட்களையுமே  புறக்கணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதால் தீபாவளியோ விநாயகர் சதுர்த்தி , கிருஷ்ண ஜெயந்தி போன்ற ஹிந்து பண்டிகைகளோ எந்த முக்கியத்துவத்தையும் சிறப்பையும் இழந்து விடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், வருடத்திற்கு வருடம் இந்துப் பண்டிகைகள்  தமிழகத்தில் மேலும் மேலும் கோடிக்கணக்கான பக்தர்களால் பக்தியுடனும் சிரத்தையுடனும் மிகச் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது.

ஆனால், தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவராகவும் , முதல்வர் வேட்பாளராக கருதப்படுபவருமான ஒருவர் பிற மதத்தினர்களைப் போற்றி, ஹிந்துக்களை மட்டும் புறக்கணிக்க முற்படுகிறார் எனும்போது, அவர் தமிழகத்தை ஆளும் நிலைக்கு வருவார் எனில் அவரது ஆட்சியின் கீழ் மத ரீதியில் ஹிந்துக்களின் நிலை எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கும் ... ஹிந்துக்களின் மத சுதந்திர , மத வழிபாட்டு உரிமைகள் எந்த அளவிற்கு பாதுகாக்கப்படும் என்பதுதான் பிரச்னைக்குரிய விஷயம்..

ஸ்டாலின் பொதுவாக அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கையற்றவராக இருந்தால் அது அவரது தனிப்பட்ட உரிமை என்று நாம் அதை பொருட்படுத்தாமல் இருந்து விடலாம். ஆனால், கிறித்துவ இஸ்லாம் மதங்களின் மீது பூரண நம்பிக்கையும் அதி தீவிர விசுவாசமும் உடையவராக விளங்கி, ஹிந்து மதத்தின் மீது மட்டும் கடும் வெறுப்பு தன்மை உடையவராகவும் இருப்பதை பார்க்கும்போது, அவர் ஆளும் கட்சிக்கு தலைமை வகிப்பவராக மாறினால், அவரது ஆட்சியின் கீழ் ஹிந்துக்கள் எப்படி மத சுதந்திரம் உள்ளவர்களாக வாழ முடியும் என்பது நியாயமான கேள்விக்குரிய விஷயமாகவே தோன்றுகிறது.

நமது அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிற 'மதச்சார்பின்மை' என்ற வார்த்தை 'மதங்களுக்கு அப்பாற்பட்ட ' அரசு என்ற பொருளில் சேர்க்கப்படவில்லை. எந்த மதத்திற்கும் சார்பாக நடந்து கொள்ளாமல் அனைத்து மதத்தினரையும் சமமாக கருதி ஆட்சி நடத்துவது என்ற பொருளிலேயே அந்த வார்த்தை சேர்க்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தி.. மற்றும் வேறு சில அமைப்புகள் கூட, ஹிந்து மதத்திற்கு மட்டும் விரோதமான செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் அரசியல் அதிகாரத்துக்கான போட்டியில் இல்லை. அவை அரசியல் இயக்கங்களும் அல்ல. ஆனால், திமுக ஒரு அரசியல் கட்சி.
அப்படியிருக்க, முற்றிலும் ஹிந்து மதத்திற்கு ( மட்டும் ) விரோதமான மனப்பான்மையுடன் , ஹிந்து பண்டிகைகளுக்கு மக்களுக்கு வாழ்த்து சொல்வது கூட தவறு என்ற தீவிர ஹிந்து எதிர்ப்பு நிலையுடன் இருக்கும் ஸ்டாலின் போன்றவர்  ஆட்சியில் அமர்ந்தால், அவரது ஆட்சியின் கீழ் ஹிந்துக்களின் உரிமைகளும் நலன்களும் பாதுகாப்புடன் இருக்குமா..?  இருக்காது என்பதுதானே நிஜம்.

இது ஒருபுறமிருக்க, வேறொரு கேள்வியும் எழுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
திமுக ஒரு மதச்சார்பற்ற கட்சிதானா..? இந்த அளவிற்கு குறிப்பிட்ட மதத்தின் மீது மட்டும் வெறுப்புணர்வுடன் இருக்கும் திமுகவை எப்படி மதச்சார்பற்ற கட்சி என்று  அழைக்க முடியும்..?
திமுக வை  ஹிந்து  விரோத கட்சி என்று அழைத்தால் ,,, அது நியாயம்தானே.....
திமுக விற்கு எதிராக ஹிந்துக்கள் திரண்டெழ வேண்டும்; திமுக வுக்கு வாக்களிப்பதை ஹிந்துக்கள் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படுவது நியாயமானதாகத்தானே கருதப்பட வேண்டும்...?

நமது அரசியல் சாசனம் கூறுகிற மதச்சார்பின்மைக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக நடந்து கொள்ளும் திமுக ஒரு அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்துக்கே தகுதியான கட்சிதானா...
இதுவும் தீவீரமாக ஆராயப்பட  வேண்டிய விஷயம்தான்.