Monday 29 October 2012

உடன்பிறப்பே.. கழக உடன்பிறப்பே .. சிந்திப்பீர்..


மத்திய அமைச்சரவையில் செய்யப்பட்டிருக்கும் மிகப்பெரும் மாற்றத்தில் புதிதாக 22 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.அதில் தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக குறிப்பாகச் சொல்லப்போனால், தேவகவுடா பிரதமராக இருந்த காலம் முதற்கொண்டு தற்போதைய காலம் வரை இடையில் வாஜ்பாய் அவர்கள் முதல் முறை பிரதமராய் இருந்த 13 மாதங்கள் தவிர்த்து ( 1996 - 98 &  1999 - 2012 )சுமார் 16 ஆண்டுகள் வரை பல்வேறு கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்து வந்திருக்கிறது தி.மு.க. ஒவ்வொரு முறையும் பல்வேறு நிர்ப்பந்த தந்திரங்களைப் பயன்படுத்தி பணம் கொழிக்கும் முக்கியமான இலாக்காக்களை கேட்டுப் பெற்று தன்வசம் வைதுக் கொண்டிருக்கிறது அக்கட்சி.
ஆனால், கடந்த 3 வருடங்களில் மத்திய அமைச்சரவையில் தி.மு.க. சார்பில் அங்கம் வகித்த ஆ.இராசா, தயாநிதி மாறன் ஆகியோர் 2 ஜி ஊழல் வழக்கில் சிக்கி பதவி விலகினர். இவர்களுக்குப் பதிலாக புதிதாக யாரையும் மத்திய அமைச்சரவையில் கருணாநிதி சேர்க்கவில்லை. பிரதமரே  தி.மு.க.விற்காக 2 அமைச்சரவை இடங்களை காலியாக விட்டு வைத்திருக்கிறோம் என்று அறிவித்த பின்பும் கூட அவர் புதிய அமைச்சர்களை நியமிக்கவில்லை. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள் அமைச்சரவை மாற்றத்தின் போது கூட தி.மு.க.விற்கென ஒதுக்கப்பட்டுள்ள 2 இடங்களுக்கு அமைச்சர் பெயர்களை அறிவிக்குமாறு  பிரதமரே கேட்டும் கூட தி.மு.க.விற்கு கூடுதலாக பதவிகள் எதுவும் வேண்டாம் என்று கருணாநிதி நிராகரித்து விட்டார்.
பல்வேறு கூட்டணிகள் மாறி மாறியும் பல்வேறு நிர்ப்பந்தங்கள் கொடுத்தும் மத்திய அரசில் பல பதவிகளைப் பெற்று வந்த கருணாநிதி இன்று தேடி வந்த அமைச்சர் பதவிகளையும் மறுத்திருக்கிறார் என்றால் இது என்ன மாற்றம் .. ஏனிந்த மாற்றம் ..  என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறதல்லவா ..?
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில் அழகிரி மத்திய அமைச்சராயிருக்கிறார். மற்ற எவரும் இப்போது மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. மகள் கனிமொழி 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருக்கிறார்; பேரன் தயாநிதியும் அதே ஊழல் காரணமாக பதவி நீங்கியிருக்கிறார். இவர்களைத் தவிர்த்து வேறு எவரையாவது மத்திய அமைச்சராக்க கருணாநிதி குடும்பத்தில் வேறு ஆட்களுமில்லை. குடும்ப உறுப்பினர்களாய் இல்லாத வேறு தி.மு.க. எம்.பி.க்கள் யாரையாவது அமைச்சர்களாக்கலாம் என்றால் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய ஆதரவாளர்களையே அமைச்சர்களாக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர். எங்கே தனது குடும்பத்தில் குத்து வெட்டுகள் நிகழ்ந்து விடுமோ என்று பயந்து போய் தேடி வந்த அமைச்சர் பதவிகளை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளியிருக்கிறார் கருணாநிதி. 
கருணாநிதியின் குடும்பம்தான் தி.மு.க.; அவரது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகத்தான் தி.மு.க.தொண்டர்கள் என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஒரு எடுத்துக்காட்டாய் விளங்கிக் கொண்டிருக்கிறது.
உணர்வுள்ள ஒவ்வொரு தி.மு.க.வினரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது; நினைத்துப் பார்க்க வேண்டிய தருணம் இது.