Sunday 19 January 2014

மாறாது முடிவு



மானிய விலையில் வழங்கப்படும் சமையல் வாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 9லிருந்து 12 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது ஒரு சரியான நடவடிக்கையே. ஆனால், இந்த 12 என்பது என்றும் 12ஆகவே தொடருமா அல்லது வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டால்(?) மீண்டும் 9ஆக குறைக்கப்பட்டு விடுமா என்பதுதான் சிந்திக்க வேண்டிய விஷயம்.

ஏனெனில், ராகுல் 9 சிலிண்டர்கள் ஒரு குடும்பத்திற்கு போதாது; அதை 12 ஆக உயர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் பிரதமரும் அதை ஏற்றுக் கொண்டு உடனடியாக அமுல்படுத்தியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ராகுல் மக்கள் நலனில் அக்கறையுடன் இருக்கிறார் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் காட்ட இந்த நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது.


ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும், அதற்கு மேலும் தேவைப்பட்டால் மானியம் வழங்காத சிலிண்டர்களையே மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற புதியதோர் முறையை .மு.கூ.அரசு 2012 செப்டம்பரில் அறிவித்தது.

அந்த சமயத்தில் ராகுல் காங்கிரஸின் நிர்வாகியாகத்தான் இருந்தார். பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் அனைவருமே அவருக்கு கட்டுப்பட்டவர்களாகத்தான் இருந்தனர். ஆனால்,அப்போது ராகுல் 6 சிலிண்டர்கள் போதாது; அதை 12 ஆகவோ அல்லது 9 ஆகவோ உயர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு கட்டளையிடவில்லை. அதன் பிறகு பா... போன்ற எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் அரசு அதை 9 ஆக உயர்த்தியது. அப்போதும் ராகுல் அதை 12 ஆக உயர்த்த வேண்டும் என்று ஒரு பேச்சிற்கு கூட கூறவில்லை. ஆனால், எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் அதை 12 ஆக உயர்த்த தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், .மு.கூ. அரசு விடாப்பிடியாக மறுத்து வந்தது. ராகுலும் மௌன குருவாகவே காட்சியளித்தார்.

2012 செப்டம்பரிலிருந்து 2014 ஜனவ்ர் 15 வரை அதாவது சுமார் 16 மாத காலமாக 9 சிலிண்டர்கள் ஒரு குடும்பத்திற்கு போதாது 12 வேண்டும் என்ற ஞானோதயம் ராகுலுக்கு உண்டாகவேயில்லை. இப்போதுதான் அந்த ஞானோதயம் வந்திருக்கிறது. காரணம் இன்னும் 3 மாதத்தில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கிறது.

எனவே, 9 சிலிண்டரை 12 ஆக உயர்த்த ராகுல் காட்டளையிட்டிருப்பது மக்கள் நலனின்பால் கொண்ட அக்கறையினால் அல்ல.. தேர்தலில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கத்தான் என்பதை நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இதுமட்டுமல்ல, தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல சலுகைகளையும் இலவசங்களையும் ' ராகுல் உத்தரவிட்டார்' என்ற பெயரில் .மு.கூ. அரசு வழங்கும்.  

தாங்கள் மூழ்கியிருக்கும் ஊழல்,நிர்வாகத் திறமையின்மை, செயல்படாத் தன்மை போன்ற பெரும் சேற்றுக் குழியை மக்களிடமிருந்து மறைக்க என்னென்ன ஏமாற்று நாடகங்களையும் மாய்மாலங்களையும் நடத்த முடியுமோ அத்தனையும் இந்த 3 மாதத்தில் நடத்தும்.


ஆனால், இதற்கெல்லாம் ம்க்கள் ஏமாறப்போவதில்லை; அவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்; உறுதியுடன் இருக்கிறார்கள்; மாற்றம் கொண்டு வருவோம் என்ற முடிவில் மாறாதிருக்கிறார்கள்..



Friday 17 January 2014

'தேனீர் வியாபாரி'யின் புரட்சி.





" நரேந்திர மோடி பிரதமராகவே முடியாது;வேண்டுமானல் காங்கிரஸ் காரியக் கூட்டத்தில் அவர் டீ விற்க ஏற்பாடு செய்யலாம்" என்று மணி சங்கர் ஐயர் என்பவர் பேசியிருக்கிறார். இது கீழ்த்தராமான அரசியல் நாகரீகமற்ற பேச்சு. முன்னாள் மத்திய அமைச்சரான அவர் ஒரு நாலாந்தர மேடைப் பேச்சாளர் போல பேசியிருக்கிறார்.

மணி சங்கர் கூட்டணியின் தயவால் மக்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார்; இப்போது ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கிறார். ஆனால், மக்கள் மத்தியில் எவ்வித செல்வாக்கும் இல்லாதவர். சுயமாக நின்றால் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராகக் கூட இவரால் வெற்றி பெற முடியாது. தமிழக காங்கிரசிலும் அவர் ஒரு முக்கியஸ்தர் அல்ல; மாநிலக் காங்கிரசினர் இவரை ஒரு துரும்ம்புக்கு கூட மதிப்பதில்லை.
ஆனால், அவர் ராஜீவ் குடும்ப அபிமானி; சொல்லப்போனால் சேவகர் என்று கூட சொல்லலாம். அதனால்தான் எந்தத் தகுதியும் இல்லாத இவரால் தொடர்ந்து பதவிகளைப் பெற முடிகிறது. மோடிக்கு ஆதரவாக மக்களிடம் பெருகி வரும் பேரெழுச்சியால், அவரது எஜமான குடும்பத்தினரின் அரசியல் ஆதிக்கம் வீழப்போவது உறுதியாகி விட்டதால் இந்தச் சேவகர் மனநிலை தடுமாறிப் போய் இப்படி தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்.

இந்தப் பேச்சில் டீ விற்றவர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதா என்ற மனநிலை தெரிகிறது.இதற்கு முன்பு கூட மற்றொரு மத்திய அமைச்சரா பேணி பிரசாத்தும் இதே போல டீ விற்பவர் பிரதமராக முடியது என்று பேசியிருந்தார்

ஜனநாயக ஆட்சி முறை இல்லாத நாடுகளில் ஊழல் மூலம் கோடி கோடியாய் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள், மக்கள் நலனைப் புறக்கணிப்பவர்கள், தேசப் பாதுகாப்பிற்கு முதலிடம் தராதவர்கள், பயங்கரவாதத்தை ஒடுக்க இயலாதவர்கள் போன்றோர்களை மக்கள் ஆயுதப் புரட்சியின் மூலம் வெளியேற்றுவார்கள்.
ஆனால், இந்தியா ஜனநாயக நாடு. இத்தகையோரை நம் நாட்டில் டீ விற்பவர்களும் தெருக் கூட்டுபவர்களும் விவசாயிகளும் தொழிலாளிகளும் வியாபாரிகளும் ஒன்று சேர்ந்து மக்கள் புரட்சியின் ( தேர்தலின்)மூலம் வெளியேற்றுவார்கள்.  

குஜராத்தில் பல்லாண்டுகளுக்கு முன்பே ஒரு  டீ வியாபாரி( மோடி ) யின் தலைமையில் அதைச் செய்து காட்டினார்கள். இந்தியா முழுமைக்கும் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது அதே டீ வியாபாரியின் மூலம் அந்த மக்கள் புரட்சி வெற்றிகரமாக நடந்தேறும். அதன் பிறகு மணி சங்கர் போன்றோரும் அதிகார மமதையில் இருப்பவர்களும் டீ விற்போர் போன்ற மக்கள் சக்தியின் பலத்தை புரிந்து கொள்வார்கள்.


Saturday 4 January 2014

மோடியின் எழுச்சி; பிரதமரின் எரிச்சல்.




மன்மோகன் சிங் தனது கடைசி நிருபர் கூட்டத்தில் தான் அடுத்த முறை பிரதமராகப் போவதில்லை என்று கூறி விட்டார்; ஆனால், அவர் எப்போதுமே பிரதமராக இருந்ததில்லை என்பதுதான் உண்மை.  

அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் இல்லை; நேரு குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட பிரதமர்; பிரதமருக்கான அதிகாரங்கள் அவரிடம் எப்போதும் இருந்ததில்லை.சோனியா மற்றும் ராகுல்தான் மத்திய அரசில் அதிகாரம் உடையவர்களாயிருந்தனர்; மன்மோகன் அவர்களுக்கு பினாமியாகத்தான் இருந்தார். அடுத்த முறை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால்(?) அவருக்கு அந்த பினாமி அந்தஸ்து கூட வழங்கப்படமாட்டாது என்பதற்கான பல்வேறு சமிக்ஞைகள் அவருக்கு அனுப்பப்பட்டு விட்டன. இந்நிலையில் அவர் இளைஞர்களுக்கு வழி விட்டு ஒதுங்குகிறேன் .என்ற கௌரவமான வார்த்தைகளின் மூலம் தான் ஓய்வு பெறும் முடிவை அறிவித்திருக்கிறார்.

அது எப்படியோ போகட்டும். ஆனால், நரேந்திர மோடியைப் பற்றி அவர் கூறியிருக்கும் சில கருத்துக்கள் அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதாக இல்லை.  

மோடி பிரதமரானால் நாடு பல வகைகளிலும் சீர்குலையும் என்று கூறியிருக்கிறார்.மோடி சுமார் 15 ஆண்டுகாலமாக குஜராத்தின் முதல்வராய் இருந்து கொண்டிருக்கிறார்; 3 முறை மக்களின் ஆதரவோடு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். குஜராத் இதுவரை எந்த சீர்குலைவையும் சந்தித்து விடவில்லை. மாறாக, குஜராத் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று இந்தியாவின் முதன்மையான மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, ஊழலில்தான் உலக நாடுகளிடையே முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. உண்மை என்னவெனில் .மு.கூ. ஆட்சியின் கடந்த பத்தாண்டு காலத்தில்தான் நாடு பல வகைகளிலும் சீர்குலைவை சந்தித்து வந்திருக்கிறது; இந்த சீர்குலைவுகளிலிருந்து மீண்டு வரத்தான் மக்கள் ஒரு நல்ல மாற்றத்திற்காக மோடியை தங்கள் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கிறார்கள்.நாடு முழுக்க அவருக்கு பெருகி வரும் பேராதாரவே இதற்கு நிரூபணம்.



ஆயிரக்கணக்கானோரை கொன்ற மோடிக்கு என்னைக் குறை கூற எந்த தகுதியுமில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.  இது ஒரு நிதானம் தவறிய பேச்சாகவே நடுநிலையாளர்களால் கருதப்படுகிறது.
 
குஜராத் கலவரத்தில் மோடிக்கு பங்கில்லை என்று உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழுவும் குஜராத் நீதி மன்றமும் தீர்ப்பளித்த பின்பும் பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படிப்பட்ட பொய் வதந்தியை பரப்ப முற்படுகிறார் என்றால் அவர் மோடிக்கு ஆதரவான மக்கள் அலையைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார் என்பதுதான் காரணமாயிருக்க முடியும் . அல்லது அவரை ஆட்டுவிக்கிற மேல்தலைமை அவரை இப்படி ஒரு மகா பொய்யை  கூற வைத்திருக்க வேண்டும்.

எனவே மோடி பற்றிய மன்மோகன் சிங்கின் கருத்துக்கள் பொய்யால், பொய்யையே கருவாக வைத்து உருவாக்கப்பட்ட பொய்க்கதை; அவை மக்கள் மன்றத்தில் சிறிதும் எடுபடப் போவதில்லை.