Thursday 27 February 2014

வெளுக்கும் சாயம்



 
          ஒரு இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், " ஊழலை விட மதவாதம்தான் எதிர்க்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னை" என்று பேசியிருக்கிறார்.
ஊழல் எதிர்ப்பை பிரதானமாக வைத்து பல போராட்டங்களை நடத்தி, பின்பு கட்சி ஆரம்பித்து, டில்லியில் மைனாரிட்டி அரசு அமைத்து, மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கவும் நிர்வாகத்தை நடத்தவும் முடியாமல் 48 நாட்களிலேயே முதல்வர் பதவியை இராஜினாமா செய்து விட்டுப்போன கெஜ்ரிவால் இப்போது ஊழல் முக்கிய விஷயமல்ல என்ற நிலையை எடுத்திருக்கிறார்.
         அவர் சிறுபான்மையினர்களைத் தாஜா செய்வதற்காக அதன் மூலம் அவர்களது ஓட்டுக்களைப் பெறுவதற்காக மதவாத எதிர்ப்பு ( அதாவது போலி மதச்சார்பின்மை )என்ற விசயத்தை முன்னெடுத்திருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், சமாஜ்வாடி, ஜனதா தள், தி.மு.. போன்ற கட்சிகளின் வரிசையில் பத்தோடு பதினோன்றாக ஆம் ஆத்மியும் இணைந்திருக்கிறது.
         மதவாதம் என்பது முக்கியப் பிரச்னைதான். ஆனால் இக்கட்சிகள் கூறுகிற மதவாதம் என்பது உண்மையான மதவாதத்தைப் பற்றியோ மதச்சார்பிமையைப் பற்றியோ குறிப்பிடவில்லை என்பதுதன் கவலைப்பட வேண்டிய விஷயமாகும். 
          உண்மையான மதச்சார்பின்மை என்பது அனைத்து மதத்தினருக்கும் சமமான உரிமைகள், சலுகைகள், சமமான அணுகுமுறைகள் என்பதே சரியான விளக்கமாயிருக்க முடியும். ஆனால், இக்கட்சிகள் மேற்கண்ட  விளக்கத்தை எதிர்மறையாக மதவாத அரசியல் என்று விமர்சிக்கின்றன
          இது சம்பந்தமான சில விசயங்களை மட்டும் பார்க்கலாம்.

           மத்திய ஐமுகூ அரசு சிறுபான்மை மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.அவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கக் கூடாது என்பதல்ல.. ஏன் அந்த உதவித் தொகையை ஹிந்துக்கள் உட்பட அனைத்து மதத்திலுமுள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்கக் கூடாது ..?  
          தி.மு..தலைவர் கருணாநிதி ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டார்; ஆனால், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு முதல் ஆளாக வாழ்த்துச் சொல்வார்; ஆனால் தன்னை மதச்சார்பற்ற தலைவர் சிறிது கூட கூச்சமின்றி கூறிக் கொள்வார்.  
         உத்தரப்பிரதேசத்தில் மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீகளுக்கு மட்டும் சமாஜ்வாடிக் கட்சி அரசு உதவித்தொகை வழங்குகிறது; ஆனால், பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு அல்ல. 
         மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே விசாரணையின்றி பல ஆண்டுகள் சிறையிலிருக்கும் முஸ்லீம் கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதுகிறார். ஆனால், அதே போல விசாரணையின்றி பல ஆண்டுகள் சிறையிலிருக்கும் ஹிந்துக் கைதிகளைப் பற்றி சீக்கிய கைதிகளைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.இப்படி பல விசயங்களைக் கூறிக்கொண்டே போகலாம்.  
         சிறுபான்மைச் சமுதாயத்தினரைப் பாதுகாப்போம்.. அவர்களுக்கு சலுகைகள் வழங்குவோம் என்று கூறுவது மதச்சார்பின்பை எனப்படுகிறது. சிறுபான்மையினர்களின் நலன்களும் ஹிந்துக்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்றால் அது வகுப்புவாதம், மதவாதம் எனப்படுகிறது.
                                                                                                                                                                                           
         இத்தகைய மதவாதத்தை எதிர்க்கும் கட்சிகளின் கூட்டத்தில்தான் இப்போது இப்போது ஊழல் எதிர்ப்பை பின்னுக்குத் தள்ளி அரவிந்த் கெஜ்ரிவால் இடம்பிடித்திருக்கிறார்.
         கொள்கை நியாயம் என்று அரசியலில் இறங்கியவர் இறுதியாக வாக்கு வங்கி அரசியலுக்கு தன்னை பலி கொடுத்து தனது அரசியலுக்கு முடிவு கட்டிவிட்டார்.