Thursday 15 September 2011

இது பெருமைக்குரிய விஷயம்.


அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக் குழு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பெரும் பாராட்டு தெரிவித்திருக்கிறது. அவரது சீரிய ஆற்றல் மிக்க செயல்பாடுகளால் குஜராத் மாநிலம் இந்தியாவின் சிறந்த முன்னுதாரணமான மாநிலமாக விள்ங்குகிறது; ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு நிர்வாகத்தில் தாமதத்தை ஒழிப்பதிலும் மோடி வெற்றி பெற்றிருக்கிறார். குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி 11% ஆக உள்ளது. இது இந்தியாவின் சராசரி வளர்ச்சியை விட அதிகம். நாட்டின் மக்கள் தொகையில் 5% பங்கு வகிக்கும் குஜராத் நாட்டின் ஏற்றுமதியில் 20% பங்கு வகிக்கிறது. இவ்வாறு பலவாறாக மோடிக்கும் அவரது நிர்வாகத் திறமைக்கும் அந்த அறிக்கை பாராட்டு தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் மோடியை மலினப்படுத்த பல்வேறு சக்திகள் முயற்சித்துக் கொண்டிருக்கையில், எங்கோ இருக்கும் அமெரிக்கா அவரின் நிஜத்தைக் கண்டறிந்து அவரது செயல்பாடுகளை பாராட்டியிருக்கிறது. அவர் 2014ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதம வேட்பாளாராக இருப்பார் என்றும் அந்த அறிக்கை கணித்திருக்கிறது.
இது நாமெல்லாம் சந்தோஷப்பட வேண்டிய செய்தி; சமீப காலங்களாக போஃபர்ஸ், 2ஜி,காமன்வெல்த் போன்ற பல்வேறு ஊழல்களால் இந்தியாவின் பெயர் உலக நாடுகளில் சந்தி சிரித்துக் கொண்டிருந்தது; இந்நிலையில்ரேந்திர மோடியின் சாதனைகள் உலக அளவில் பாராட்டப்பட்டிருப்பது நாட்டுக்கு பெருமை சேர்ப்பது.
     நரேந்திர மோடி பாராட்டுக்குரியவர்; நாட்டின் பிற மாநில முதல்வர்களும் அவரைப் போல சாதனைகளைச் செய்வதின் மூலமும் ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பதின் மூலமும் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்

Thursday 8 September 2011

ஐ.மு.கூ. அரசுக்கு ஓய்வேது .. ?



          மீண்டும் நிகழ்ந்து விட்டது அந்த கொடூர சம்பவம்; இந்த முறை டில்லியில். டில்லியில் நீதிமன்றம் எதிரே நிகழ்ந்த பயங்கரவாத சம்பவத்தில் 11 பேர் மரணமடைந்திருக்கின்றனர். வழக்கம் போல பிரதமர் அளிக்கும் கண்டன அறிக்கை, மக்கள் அமைதி காக்க வேண்டும் என்ற் வேண்டுகோள், இற்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர்களுக்கான நிதியுதவி போன்ற அனைத்து சம்பிரதாய சடங்குகளும் நிகழ்ந்தேறி விட்டன.
           கடந்த முறை மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது, .மு.கூ. அரசின் நிஜ பிரதமர்களில் ஒருவரான ராகுல் காந்தி எல்லா குண்டு வெடிப்புகளையும் அரசால் தடுத்து நிறுத்த முடியாது என்று முழங்கினார்; ஆனால் உண்மை என்னவென்றால் எந்த பயங்கரவாதச் சம்பவங்களையுமே இந்த அரசு தடுக்க முயற்சிக்காது; பயங்கரவாதிகள் மீது நடவடிக்கையும் எடுக்காது.
          நாட்டின் பாராளுமன்றத்தை தாக்கிய பயங்கரவாத கும்பலைச் சார்ந்த அப்சல் குருவையே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் தூக்கிலிடாமல் அவனைப் போற்றிப் பாதுகாத்து வருகிறது .மு.கூ. அரசு. அப்படியிருக்க பயங்கரவாதத்தை ஒடுக்கவும் பயங்கரவாதிகளை களையெடுக்கவும் இந்த அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று யாராவது நம்ப முடியுமா .. ?அப்படி யாராவாது நம்பினால் அவர்கள் கேழ்வரகில் நெய் வடியும் என்று நம்புகிற வகையைச் சார்ந்தவர்கள்தான்.
          .மு.கூ. அரசு சாதாரண மக்கள் எத்தனை பேர் மாண்டாலும் சிறிது கூட கவலைப்படாது; ஆனால், பயங்கரவாதி இறக்காமல் பார்த்துக் கொள்ள எல்லா வேலைகளையும் செய்யும். ஏனெனில் இது மக்களுக்கான அரசு அல்ல; பயங்கரவாதிகளுக்கான அரசு. இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நாளும் நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிக் கொண்டுதானிருக்கும்; அப்பாவிகள் நூற்றுக்கணக்கில் குண்டு வெடிப்புகளில் பலியாகிக் கொண்டுதானிருப்பார்கள். இந்தியாவின் தேசியப் பறவை மயில், தேசிய விளையாட்டு ஹாக்கி, தேசிய மலர் தாமரை என்பது போல இந்தியாவின் தேசிய நிகழ்ச்சி குண்டு வெடிப்புக்கள் என்ற ஒரு நிலையை உருவாக்காமல் இந்த .மு.கூ. அரசு ஓயப்போவதில்லை.


Friday 2 September 2011


கருணாநிதியின் கபட நாடகம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் விவகாரத்தில் பல்வேறு நாடகங்களை ஆடிக்கொண்டிருக்கிறார். இந்த மூவரும் தூக்கு தண்டனையிலிருந்து விடுபட வேண்டும் என்பதை விட இந்த விவகாரத்தை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை நிலைகுலைய வைக்க வேண்டும் என்பதில்தான் அவர் ஆர்வமுடன் இருக்கிறார்.  ஜெயலலிதா இம்மூவரையும் விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கருணாநிதி வலியுறுத்தி வருகிறார். இவரது ஆதரவுடன் செயல்படும், இவரது கட்சியும் அங்கம் வகிக்கும் மத்திய .மு.கூ. அரசுதானே ஜனாதிபதியின் மூலம் இம்மூவரின் கருணை மனுவையும் நிராகரித்திருக்கிறது.  இவர் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்காமல் ஏன் ஜெயலலிதவிடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கிறார் .. ? இம்மூவரின் தூக்கு தண்டனையையும் இரத்து செய்யாவிட்டால் மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவோம், .மு.கூ. கூட்டணியிலிருந்தும் விலகுவோம் என்று அறிவிக்க வேண்டியதுதானே.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது, தான் முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் .. தனது குடும்பத்தினர்கள் பதவி சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஒரு 2 மணி நேர உண்ணாவிரதத்தை மட்டும் நடத்தி விட்டு தமிழினப் படுகொலையை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் கருணாநிதி. உலகத் தமிழினமே அவரை தமிழினத் துரோகி என்று அழைப்பதனால், ஏதாவது தகிடுதத்த வேலை செய்து தமிழினத்தை ஏமாற்ற முடியுமா என்பதற்காக இந்த மூவரின் உயிர்கள் மீது அக்கறை உள்ளவர் போல ஒரு நடிப்பை அரங்கேற்றுகிறார் கருணாநிதி. இந்த மூவரும் முதலில் கருணாநிதியின் அரசிடம்தானே கருணை மனுவை சமர்ப்பித்டிருந்தார்கள்.. அப்போது அந்த கருணை மனுவை நிராகரித்து அவர்களுக்கு தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தியது இதே கருணாநிதிதானே.. இப்போது திடீரென்று இந்த மூவர் மீதும் அவருக்கு பற்று வர காரணம் என்ன .. ? உள்ளாட்சித் தேர்தல் வருகிறது; தமிழினப்பாதுகாவலன் என்பது போல ஒரு வேஷம் போட்டு மக்களின் ஓட்டுக்களை பெற்று விட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாடகம் கருணாநிதியால் அரங்கேற்றப்படுகிறது.
இலங்கை அரசு சோனியா காந்தி அரசின் துணையோடு, தமிழின அழிப்பு வேலையை நடத்தியபோது, அதைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிடக் கூட துணிச்சலற்று இருந்தவர் கருணாநிதி. ஆனால், ஜெயலலிதா இராஜபக்ஷேவைக் கண்டித்து சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்தவர். மூவரின் தூக்கு தண்டனையையும் நிறைவேற்றக் கூடாது எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். கருணாநிதிக்கு உண்மையிலேயே தமிழின உணர்வு இருக்குமேயாயின் இவர்களது விடுதலைக்காக, தனது கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் த்னது கூட்டணி பலத்தைப் பயன்படுத்தி போராடட்டும். அதை விட்டு, ஜெயலலிதாவிடம் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி நாடகத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டாம். தமிழர்கள் இவரிடம் மீண்டும் ஏமாறத் தயாராயில்லை.