Sunday 14 February 2016

ஹைதராபாத் & டெல்லி

டில்லி ஜவகர்லால் நேருபல்கலைக் கழக வளாகத்தில் கடந்த 9ஆம் தேதியன்று பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தொடர்புடைய, உச்சநீதி மன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு என்ற மத பயங்கரவாதியின் நினைவு தினத்தை சில மாணவர்கள் அனுஷ்டித்திருக்கின்றனர். அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து அந்த மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளேயே பேரணியாகச் சென்றதோடு இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்களையும்  எழுப்பியிருக்கின்றனர். "இந்திய பாராளுமன்றத்தை தகர்ப்போம்...காஷ்மீர் பாகிஸ்தானுக்கே சொந்தம்..இந்தியாவை துண்டு துண்டாக உடைத்தெறிவோம்..பாகிஸ்தான் வாழ்க .." என்றெல்லாம் கோஷமிட்டிருக்கிறார்கள்
இவர்களை டில்லி காவல் துறை தேசத்துரோக வழக்கில் கைது செய்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட சில மாணவர்கள் தலைமறைவாக இருக்கின்றனர்

இந்தியாவில் பேச்சுரிமை, எழுத்துரிமை அனைவருக்கும் உண்டு; அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் என்பதல்ல.. இந்தியாவின் இறையாண்மையையே கேலிக்குரியதாக்கும் வகையில் செயல்பட்ட இந்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதே.

 எங்கே எந்த பிரச்னை நடந்தாலும் அதன் உண்மை தன்மை என்ன என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் உடனடியாக அங்கே சென்று மோடி அரசை குறை கூறுவதையே வழக்கமாக வைத்திருக்கும் ராகுல், கெஜ்ரிவால் போன்றவர்கள், மாணவர்களை மிரட்டும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியிருக்கின்றனர். சாதாரண அப்பாவி மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை;பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், நூற்றுக் கணக்கில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட இந்திய விரோத மனப்பான்மையுள்ள மாணவர்கள்தான் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மாணவர்களாயிருந்தாலும் தொழிலாளியாக இருந்தாலும் விவசாயியாக இருந்தாலும்  யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் ஒரு தேச நலன் பேணும் அரசுக்கு இலக்கணமாயிருக்க முடியும்.  

பல்கைக் கழகங்களும் கல்லூரிகளும் மாணவர்கள் கல்வி கற்பதற்கும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும்தான். பாகிஸ்தானுக்கு ஆதரவாக இயங்கவும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தவும் அல்ல.

வயலில் களையெடுப்பது பயிர்களின் வளர்ச்சிக்கு சாதகமாயிருக்கும்; தேசவிரோத சிந்தனை கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மக்கள் சமுதாயத்திற்கு பயனுடையதாயிருக்கும்.
ஹைதரபாத் பல்கலைக் கழகத்திலும் இதே போன்ற சம்பவம் இதேபோன்ற தேசவிரோதிகள் சிலரால் சில வாரங்களுக்கு முன்பு அரங்கேற்றப்பட்டது. மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் என்ற பயங்கரவாதிக்கு ஆதரவாக பல்கலை கழக வளாகத்திலேயே சில தேச விரோத மாணவர் அமைப்புக்கள் கூட்டம் நடத்த அதன் தொடர் விளைவாக் வெமுலா என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இதே போன்றதொரு சூழ்நிலையை டெல்லி பல்கலைக் கழகத்திலும் ஏற்படுத்த தேசவிரோத மாணவர் அமைப்பு முயன்றிருக்கின்றது

இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் ராகுல், கெஜ்ரிவால் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தருவது வன்மையான கன்டனத்திற்குரியது. அரசியலில் தங்கள் குடும்ப ஆதிக்கத்திற்கு முடிவு கட்டிய மோடியின் மீது ராகுலுக்கு கோபம் இருக்கலாம்; அதற்காக தேசத்திற்கு எதிரான தீய சக்திகளுக்கு எல்லாம் ஆதரவு தரும் அளவிற்கு கீழ்நிலைக்கு அவர் இறங்கியிருப்பது பரிதாபத்திற்குரியது. இவர்களது இத்தகைய மனப்பான்மைக்கு முடிவு கட்ட மக்கள் சக்தி இவர்களுக்கெதிராக திரண்டெழ வேண்டும்.