Friday 7 August 2015

பூரண மதுவிலக்கா...?

திடீரென்று தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கிற்கான குரல்கள் ஒங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. 
இந்தியாவில் குஜராத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு அமுலில் இல்லை. ஆனால், எல்லா மாநிலங்களிலும் மக்கள் மது குடித்து சந்தோஷமாயிருப்பது போலவும் தமிழகத்தில் மட்டும் சீரழிந்து போவது போலவும் அனைத்து கட்சிகளும் தமிழ் நாட்டில் மட்டும் மதுவிலக்கு கோருகின்றன. கர்நாடகத்திலும் கேரளாவிலும் மதுக்கடைகளைத் திறந்து வைத்திருப்பது காங்கிரஸ் கட்சியின் அரசு; அதே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மதுவிலக்கு கோருகிறது. பாண்டிச்சேரியில் மதுவிலக்கு கேட்காத கட்சிகள் தமிழகத்தில் கேட்கின்றன.
இது விசித்திரமாயிருக்கிறது.
மது குடிக்கக் கூடாது; மது மனிதனை மிருகமாக்குகிறது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை; 
ஆனால், அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டால் மக்கள் யாரும் மது அருந்தமாட்டார்கள் என்றும் எல்லாம் மாறிவிடும் என்று யாரேனும் நினைப்பார்களேயானில் அதைவிட பெரிய ஏமாளித்தனம் ஏதும் இருக்க முடியாது.
மாறிவரும் சமுதாயச் சூழ்நிலையில், முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. மக்களிடையே இருக்கும் குடிப்பழக்கத்தைப் போக்காமல் மதுக்கடைகளை மட்டும் மூடுவது எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். இப்போதிருக்கும் நிலையை விட மோசமான எதிர் விளைவுகளை அது சமுதாயத்தில் உண்டாக்கும். இது அனுமானமல்ல; கற்பனையுமல்ல; கடந்த காலங்களில் பலமுறை நாம் கண்ணெதிரிலேயே கண்டது.
எனவே, மதுக்கடைகளை முற்றிலுமாக மூடுவதை விட சில கட்டுப்பாடுகளை உருவாக்கலாம். 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது;25 வயதிற்குட்பட்டவர்கள் மது போதையில் இருந்தால் அதிகபட்ச அபராதம் உட்பட அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது; பள்ளிகள், கோயில்கள், மார்க்கெட் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மதுக்கடைகளைத் திறக்காமலிருத்தல் போன்ற கட்டுப்பாடுகளை உண்டாக்கலாம்.
முழுமையான மதுவிலக்கு என்பது உணர்ச்சி வசப்பட்டு வைக்கப்படும் கோரிக்கை; இதனால் எந்தப் பலனும் கிடைக்காது; இதைவிட மோசமான எதிர்விளைவுகளே உண்டாகும்.
நாங்கள் ஆட்சிக்கு வ்ந்தால், மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று கூறுபவர்கள் எல்லாம் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒருயுக்தியாகக் கருதி கூறுகிறார்களே தவிர வேறொன்றுமில்லை; ரூபாய்க்கு 3 படி அரிசி கதை போலத்தான் இந்த வாக்குறுதியும் முடியும். இதன் பேரில் பதவிக்கு வந்துவிட்டால், அடுத்த சில மாதங்களிலேயே கள்ளச்சாராயம் அதிகரித்து விட்டது.. மக்கள் விஷச் சாராயத்தையும் கண்டதையும் குடித்து இறக்கிறார்கள்..உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.. அண்டை மாநிலங்களிலிருந்து அதிக அளவில் மதுபானங்கள் கடத்தல் நடைபெறுகின்றன.. என்ற காரணங்களைக் கூறி மீண்டும் மதுக்கடைகளைத் திறப்பார்கள்; இதுதான் பலமுறை நடந்திருக்கிறது; மீண்டும் இதுதான் நடக்கும்.
மதுப்பழக்கம் முற்றிலும் இல்லாத சமுதாயம் உலகில் எங்குமே இருப்பதாகத் தெரியவில்லை; இந்த நவீன யுகத்தில் சிறுவர்களும் இளம்பெண்களும் கூட மதுவிற்கு அடிமையாகின்றனர். அதுதான் பிரச்னைக்குரிய விஷயம் . மது குடிக்கும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை தேவை; அதற்குத்தான் கட்டுப்பாடுகள் தேவை. மது குடிப்போர் எண்ணிக்கை குறைய குறைய , மதுக்கடைகள் தன்னாலேயே படிப்படியாக மூடப்பட்டுவிடும்.

Thursday 6 August 2015

நாடகமும் பினாமி நாடகங்களும்


ஆகஸ்ட் 10 அன்று மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்திருக்கிறது. இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க தேர்தலுக்கான ஒரு ஏமாற்று வேலையே தவிர வேறில்லை.

வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்கொள்ள தி.மு.க.விடம் எந்த விஷயமும் இல்லை என்பதாலும் கனிமொழியின் 230 கோடி 2ஜி ஊழல், தயாநிதி கலாநிதி மாறன்களின் ஆயிரக்காணக்கான கோடி பி.எஸ்.என்.எல். மற்றும் 2ஜி ஊழல்கள் தேர்தல் சமயத்தில் முக்கிய பிரச்னைகளாகி விடாமல் தடுக்கவுமே தன்னிடம் இருக்கும் பெரும் பணத்தின் மூலம் பலரையும் தூண்டிவிட்டு மதுவிலக்குப் பிரச்னையை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறது தி.மு.க .

தமிழகத்தில் மதுவிலக்கிற்காகப் போராட்டம் நடத்துகிற தி.மு.க பண்டிச்சேரியில் ஏன் நடத்தவில்லை..? பாண்டிச்சேரி மக்களுக்கு மட்டும் மது உடல் நலத்தைப் பாதுகாக்கிறதா..?

தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கின்றன; தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மதுவிலக்கை அமுல்படுத்தப் போவதாக கருணாநிதி அறிவித்திருக்கிறார். அப்படியிருக்க உடனடியாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று ஏன் போராட்டம் நடத்தப்படுகிறது..? கடந்த 4 1/4 வருடங்களில் மதுவிலக்கிற்காக தனது சுண்டு விரலைக் கூட அசைக்காத தி.மு.க. உட்பட்ட கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கின்ற நிலையில் உடனடியாக மதுவிலக்கை அமுல்படுத்தியாக வேண்டும் என்று ஏன் போராடுகின்றன..?எதற்காக மாணவர்களையெல்லாம் தூண்டிவிட்டு வன்முறையை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன..? மக்கள் மதுவினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவா.. இல்லை. தமிழகத்தில் பல்லாண்டுகளாக மதுக்கடைகள் திறந்திருக்கின்றன. கருணாநிதியும் பலமுறை முதல்வராக இருந்திருக்கிறார்; இத்தனை ஆண்டுகளில் மதுக்கடைகளை மூட எந்த நடவடிக்கையாவது கருணாநிதி எடுத்ததுண்டா.. ? வெறும் வாய் ஜாலத்தைத் தவிர. ஆனால், இப்போது மட்டும் அவசர அவசரமா உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராட்டத்தின் மேல் போராட்டங்களை கருணாநிதியும் அவரது பணத்தில் செயல்படுகின்ற கட்சிகளும் ஏன் நடத்துகின்றன..? உடனடியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்பாட்டால் அரசு நடைமுறைப் படுத்திவரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும்; உடனடியாக புதிதாக நிதி திரட்டவும் முடியாது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசுக்கு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி அதன் மூலம் தன் குடும்பத்தினரை மீண்டும் பதவிகளில் கொண்டு வந்து அமர்த்திவிட வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் திட்டம்; அதற்காகத்தான் கருணாநிதியும் அவரது பண உதவியின் மூலம் செயல்படுகின்ற கட்சிகளும் உடனடியாக மது விலக்கு வேண்டும் என்று போராட்டம் நடத் துகிறார்கள். மாணவர் போராட்டங்களைத் தூண்டிவிட்டு மாநிலத்தில் வன்முறையை அரங்கேற்றி தமிழக அரசை நிலைகுலைய வைக்க நினைக்கிறார்கள். தன்னுடைய பணபலத்தின் மூலம் அப்பாவிகளைத் தூண்டிவிட்டு, அவர்களைத் தவறான முறையில் போராட்டங்களை நடத்த வலியுறுத்தி பிண அரசியலையும் நடத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

உடனடியாக மதுக்கடைகளை மூட வலியுறுத்தும் கருணாநிதி ஏன் உடனடியாக தன் குடும்பத்தினரும் கட்சிக்காரர்களும் நடத்தும் மது ஆலைகளை மூடக்கூடாது..? மதுக்கடைகளைச் சூறையாடவும் மாணவர்களை மதுவிலக்கிற்காகப் போராடவும் தூண்டிவிடும் வை.கோ. ஏன் கருணாநிதி குடும்பத்தினர்கள் நடத்துகிற இந்த மது ஆலைகளை மூடுவது பற்றி வாயையே திறக்க மறுக்கிறார்..? மதுவிலக்கை அமுல்படுத்தினால் மது ஆலைகளை மூடுவோம் என்கிறார் ஸ்டாலின். இப்படி கூறுபவர் ஆட்சிக்கு வந்துவிட்டால், மக்கள் குடிப்பதை நிறுத்தினால் மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறமாட்டாரா..?
ஆகவே சிந்திப்போம்.


மதுவிலக்கு தொடர்பாக நடத்தப்படுகிற போராட்டங்கள், தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற நடத்தப்படுகிற நாடகங்கள். வை.கோ. போன்றவர்கள் நடத்தும் போராட்டங்களும் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் அவரது பண உதவியுடன் நடத்தப்படுகிற பினாமி நாடகங்களே.