Saturday 12 February 2022

என்ன செய்தார்கள் 8 மாதத்தில் ...?

 

தேர்தலின்போது திமுக வால் எத்தனையோ வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன; இவற்றில், ஆவின் பால் விலை குறைப்பு வாக்குறுதிதான் எவ்வித வில்லங்கமும் இன்றி  நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு குறிப்பிட்ட பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக  அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டு வந்த பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது . இலவச சலுகை வழங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை மறைமுகமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்தபின் பெரும்பாலான மாநிலங்கள்  லிட்டருக்கு 10 ரூபாய்க்கும் மேலாக வரிகளை  குறைத்தன. ஆனால் தமிழக அரசு வரிகளைக் குறைக்கவில்லை; அதனால், தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மிக அதிக விலையில் விற்கப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; மின் கட்டணங்கள் மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படும் ; அரசு மற்றும் போக்குவத்துக் கழக ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் முறை அமுல்படுத்தப்படும் என்பது போன்ற முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்ற வாக்குறுதிகள்தான் திமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தன. நகைக் கடன்கள், பயிர்க்கடன்கள், மாணவர்கள் கல்விக் கடன்கள், சுய உதவிக் குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டன. உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, எல்லோரும் தங்கள் வீட்டிலிருக்கும் நகைகளைக் கொண்டு வந்து அடகு வையுங்கள் ; அடுத்து திமுக ஆட்சிதான் வரப் போகிறது ..எல்லாக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று மக்களின் ஆசைகளைத் தூண்டிவிட்டார் . இப்போது நகைக் கடன்கள் ரத்துக்கு எண்ணற்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இதன் விளைவால் நகைக் கடன் பெற்றிருப்போரில் 30% பேருக்கு தான் தள்ளுபடி கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உதயநிதியின் பேச்சைக் கேட்டு வீட்டிலிருந்த நகைகளை எல்லாம் கொண்டு போய் அடகு வைத்தவர்கள் இப்போது வட்டி மேல் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். .பலரது நகைகள் ஏலத்துக்கும் வந்திருக்கின்றன.  

தமிழகத்தில் இந்த வருடம் வரலாறு காணாத மழை பெய்தது. மக்களின் வீடுகள், உடமைகள் நீரில் மூழ்கின ; மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாயினர் ; ஆனால் , திமுக அரசு வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட யாருக்கும் அளிக்கவில்லை. பொங்கலுக்கு வழங்கப்பட்ட இலவசப் பொருட்கள் தரம் குறைந்ததாக இருந்தது.. இதில் பல கோடிகள் ஊழல் நடந்திருக்கின்றன என்று செய்திகள் கூறுகின்றன.  

எடப்பாடி ஆட்சியின்போது, பொங்கலுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ 5000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த ஸ்டாலின் இப்போது ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று முழங்கியவர்கள் இப்போது 2026 சட்டமனற தேர்தலுக்கான வாக்குறுதியாக அதை மாற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று பேசி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் திமுக ஆட்சிக்கு வந்தபின் வன்முறை அராஜகங்கள் அதிகரித்திருக்கின்றன. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை திருட்டு போன்ற  செய்திகளாகத்தான் இருக்கின்றன. மத்தியில் ஆளும் பாஜக மாநில அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டுகள் வீசும் அளவுக்கு  சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்திருக்கிறது. .

கோயில்கள் இடிக்கப்படுகின்றன. திமுக முழுக்க முழுக்க மத அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது.. ஸ்டாலின் தனது ஆட்சியை கிறித்துவர்களின் ஆட்சி, முஸ்லிம்களின் ஆட்சி என்று வெளிப்படையாகவே கூறுகிறார். கிறித்துவ மதமாற்ற சக்திகளை ஆதரிக்கிறார். தஞ்சையில் கிறித்துவ மதமாற்ற நிர்ப்பந்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட லாவண்யா என்ற 16 வயது சிறுமியின் மரணத்தை  காவல் துறையின் உதவியுடன் திசை திருப்பும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன ஹிந்து மதத்தை இழிவுபடுத்தப்படும் போக்கு அதிகரித்திருக்கிறது. அரசு அதற்கு மறைமுக ஆதரவு ம் அளிக்கிறது. ஹிந்துக்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன; ஹிந்துக்கள் இரண்டாம் aதர குடிமக்கள் போல நடத்தப்படுகிறார்கள்.

இப்படி இந்த 8 மாத வேதனைகளை இன்னும் பல இருக்கின்றன.. இந்நிலையில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றுவிட்டால், திமுக தனது 8 மாத ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழாகவே அதை வெளிப்படுத்தும். அதன் பிறகு  நிறைவேற்றப்படாமல் இருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை அரசு கண்டு கொள்ளவே செய்யாது. அதோடு நிதி பற்றாக்குறை என்ற காரணம் சொல்லி , மின் கட்டணம், பேருந்து கட்டணம், சொத்து வரி போன்றவைகளை உயர்த்தவும் முற்படும்.  மாறாக எதிர்க்கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெற்றால், அரசு தனது தவறுகளை உணரும். .வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு  தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவங்கும்.  

உள்ளாட்சி தேர்தலில் திமுக தோற்றால் ஆட்சி  மாற்றம் ஏதும் ஏற்படப் போவதில்லை; ஆனால் அரசின்  செயல்பாடுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மக்களுக்கு பல நன்மைகளும் கிடைக்கும். மக்களுக்கு விரோதமாக ஒரு அரசு நடக்கிறபோது, அந்த அரசுக்கு தேர்தலில் கிடைக்கிற தோல்விதான் ஒரு பாடமாக இருக்கும்.

அந்த பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும். .

Tuesday 21 September 2021

இந்திய சரித்திரத்தில் ஒரு பொற்காலம்.

 


இந்திய சரித்திரத்தில் ஒரு பொற்காலம்.


பிரதமர் மோடி அவர்கள் பொதுவாழ்வில் 20 ஆண்டுகள் ( குஜராத் முதல்வராக 13 ஆண்டுகள், நாட்டின் பிரதமராக 7 ஆண்டுகள் ) நிறைவு பெற்றதை ஒட்டி, தினமலர் 19/9/2021 அன்று வெளியிட்ட 4 பக்க சிறப்பு செய்திகள் மிகவும் அருமையாக இருந்தன. தினமலருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மோடியின் 7 ஆண்டுகள் பிரதமர் ஆட்சியின் சாதனைகள் எண்ணற்றவை. அதில் 2 விஷயங்கள் மிக முக்கியமானவை. மோடிக்கு முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை  பெரும் பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இப்பயங்கரவாதச் சம்பவங்களுக்கு அப்போதைய ஐமுகூ அரசு வெறும் கண்டனங்களை மட்டுமே பதிலடியாக கொடுத்து வந்தது.

அதே போல, ஒவ்வொரு 6 மாதத்திற்கும் மத்திய ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட பெரும் ஊழல்கள் வெளிப்பட்டுவந்தன. பல்லாயிரக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் இந்த ஊழல்களால் ஆட்சியாளர்களின் பாக்கெட்டுகளை சென்றடைந்தது.

மோடி பிரதமரானதும் இவை இரண்டுக்கும் முடிவுகட்டப்பட்டது. நாட்டில் மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எல்லைப் பகுதிகளில் இராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கும் முன்பு போல கன்டன அறிக்கைகளோடு நின்றுவிடாமல் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது.. பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு, பயங்கரவாதத்துக்கு துணைபோன பாகிஸ்தான் மீதும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தப்பட்டது. 

முதன்முறையாக வலிமை மிக்க ஒரு ஆட்சியின் கீழ் இந்தியா பாதுகாப்பாக இருப்பதை மக்கள் உணர்ந்தார்கள்.

அதேபோல அரசின் உயர்மட்டங்களில் ஊழல் என்பதே இல்லாத ஒரு நிலையை மோடி அரசு உண்டாக்கியிருக்கிறது.. பிரதமர் மீது மட்டுமல்ல...எந்த மத்திய அமைச்சர்கள் மீதும் கூட கடந்த 7 வருடங்களில் ஊழல் குற்றச்சாட்டே இல்லாத ஒரு அரசாக மோடி அரசு விளங்குகிறது. ஒவ்வொரு இந்தியரும் இந்த அரசை நினைத்து பெருமைப்பட வேண்டிய விஷயம் இது. இந்தியர் ஒவ்வொரும் வரியாக கொடுக்கிற ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களாக மாறுகிறது; ஏழைகளுக்கான உதவி நிதியாக மக்களுக்கே திரும்ப கிடைக்கிறது.

இது மட்டுமல்ல....

மோடி தலைமையிலான இந்த 7 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அரிய சாதனைகள் பலவும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

அரசியல் சட்ட 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது அங்கே தினசரி நிகழ்ச்சியாக விளங்கிய பயங்கரவாத சம்பவங்கள் ஒடுக்கப்பட்டு மக்கள் தாராளமாக நடமாடும் நிலை உண்டாகியிருக்கிறது.அம்மாநிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஹிந்து மக்கள் மீண்டும் அங்கே குடியேற முடிந்திருக்கிறது.  

நூற்றாண்டு காலங்களாக நீடித்து வந்த அயோத்தி இராமபிரான் கோயில் பிரச்னைக்கு ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் தீர்வு காணப்பட்டது. 2023 வாக்கில் இராமபிரான் ஆலயம் கம்பிரமாக அயோத்தியில் உயர்ந்து நிற்கும்.இவையிரண்டும் சாதாரண சாதனைகள் அல்ல; பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டியவைகள் ஆகும்.

இந்தியா ஒரு விவசாய நாடு; 75% க்கும் மேற்பட்ட மக்கள் விவசாயிகள் ; அத்தகைய விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யவும் உலகளாவிய அளவில் தங்கள் விளைபொருட்களை விற்கவும் புதிய விவசாய சட்டங்கள் மூலம் வகை செய்யப்பட்டிருக்கிறது இது ஒரு புரட்சிகரமான சட்டமாகும். இதன்முலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு பெருக வாய்ப்பு ஏற்படும்.

கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையும்,  கோடிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராமல் வங்கிகளை ஏமாற்றும் பெரும் பண முதலைகளிடமிருந்து பணத்தை மீட்க திவாலா சட்டமும் கொண்டுவரப்பட்டது.

முப்படையினர்களைப் பாதுகாக்க அவர்களுக்கு நவீன ஆயுதங்களும் கவச உடைகளும் வழங்கப்பட்டன. ஒய்வு பெற்ற பாதுகாப்பு படையினர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க One Rank .. One Pension திட்டம் நிறைவேற்றப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த காலம் மாறி வெளிநாடுகளுக்கு இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

உலகின் இருண்ட காலமான கொரானா வைரஸ் தாக்குதல்  சிறந்த முறையில் சமாளிக்கப்பட்டது.   மக்கள் உயிரிழப்புகளும் வைரஸ் பாதிப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டு மீட்சிக்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.  விஞ்ஞானிகள் ,  மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும்   தூய்மைப் பணியாளர்கள் இவர்களது தன்னிகரில்லாத சேவைகள் துணையுடன் பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கைகள் விளைவாக கொரானா  பெருமளவு முடிவுக்கு வந்துவிட்டது. கொரானா  தடுப்பூசிகள் சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது  தற்சயம் வரை சுமார் 80 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டிருக்கின்றன. .மற்ற நாடுகளுக்கும் விற்பனை மற்றும் இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன..  இந்திய அரசின் இந்த  சாதனை உலகையே வியந்து பார்க்க வைத்திருக்கிறது.

பிரதமரின் செயல்பாடுகளில் ஜாதி மத பேதங்கள் இல்லை; சமூக நீதியைப் பாதுகாக்க நலிந்தோர்க்கு தேவையான இட ஒதுக்கீட்டு சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஜாதி அடிப்படையில் மட்டுமல்லாது பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கும் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது..இஸ்லாமிய பெண்களின் துயர் துடைக்க முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இன்னும் எத்தனை எத்தனையோ சாதனைகள் ; எழுதிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொன்னால் , இந்திய அரசியல் வானில் அஸ்தனமில்லாத சூரியனாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரதமரின் நடவடிக்கைகளால் இருண்ட பகுதிகள் எல்லாம் வெளிச்சமாகின்றன..

 பிரதமரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

மோடி இன்னும் பல காலம் பிரதமராக நீடிக்க வேண்டும்.  

மோடிக்கு பக்க பலமாக இருந்து ஆதரவு தர வேண்டும்



Saturday 12 September 2020

திமுக வின் நாடக அரசியல்

                                     

தமிழகத்தில் திடீரென்று ஹிந்தி எதிர்ப்பு கோஷம் தீவிரமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.' ஹிந்தி என்கிற பூதம் ' நம்மை விழுங்க காத்திருக்கிறது என்கிற ரீதியில் மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் ஒரு அச்ச உணர்வை உண்டாக்க திறமையான முறையில் திரைக்கதை வசனத்தை எழுதி, ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இந்த நாடகத்தின் தயாரிப்பு டைரக்க்ஷன் எல்லாம் திமுகதான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சமீப காலங்களில் தமிழகத்தில் இளைஞர்கள் அதிக அளவில் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். குக்கிராமங்கள் தொடங்கி பெருநகரங்கள் வரை பா.ஜ.க.வின் வளர்ச்சி தெளிவாகத் தெரிகிறது. மறுபுறம், தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் பேசிக் கொள்வதை பல இடங்களில் கேட்க முடிகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில் ஜெயலலிதா இல்லாத அதிமுக நன்றாக காலுன்றி வருகிறது.

ஆனால், திமுக நிலைகுலைந்து நிற்கிறது. ஸ்டாலின் கட்சியை திறம்பட வளர்க்கவோ பலப்படுத்தவோ முடியாத தலைவராக  இருக்கிறார்.. புதிதாக வாக்களிக்கும் வயது வந்த இளைஞர்கள் பலரும் திமுக வை நாடுவதில்லை; அவர்கள் பா.ஜ.க. வையே விரும்புகின்றனர். மோடியின் செயல்பாட்டு திறமை அவர்களை ஈர்த்து வருகிறது. சீன ஆக்ரமிப்புக்கு எதிராக இந்தியா எடுத்துவரும் உறுதியான அச்சமில்லாத பதில் நடவடிக்கைகள், கடந்த 6 வருடங்களில் ஊழலே இல்லாத ஆட்சி, பெரிதாக எந்த மதக் கலவரங்களும் இல்லாத நிலை, கொரானாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள், கொரானாவால் பொருளாதார சரிவு ஏற்பட்ட போதிலும் தேசம் வீழ்ந்து விடாமல் இருக்க எடுக்கப்பட்ட திறம்பட்ட நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் விவசாயத்தை மீட்கவும் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய திட்டங்கள் போன்றவை பா.ஜ.க. அரசு மீது மக்களுக்கு பெரிதும் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கின்றன. அதனால், பா.ஜ.க. வை நோக்கி மக்கள் வருவது அதிகரித்து வருகிறது. திமுக வின் தொடர்ச்சியான ஹிந்து விரோதச் செயல்பாடுகளின் எதிர்வினையாகவும் மக்கள் பா.ஜ.க. பக்கம் தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர். ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்தபோது கூட, திமுக எம்.எல்.ஏ. ஒருவர் கூட அக்கட்சியை விட்டு விலகியதில்லை. இப்போது ஒரு.எம்.எல்.ஏ.வே திமுக வை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

இத்தகைய சூழ்நிலையில்தான், தனது வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மக்களின் உணர்ச்சியை தூண்டி விடும் வகையில், மொழிப் பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால், இந்த முறை ஹிந்தி எதிர்ப்பு பருப்பு தமிழகத்து நீரில் வேகப்போவதில்லை என்றே தோன்றுகிறது..ஏனெனில்,திமுக வின் வேஷம் மக்களிடம் கலைந்து வருகிறது.

ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சன்ஷைன் பள்ளியில் ஹிந்தி கற்றுத்தரப்படுகிறது. அதே போல திமுக தலைவர்கள் நடத்தும் பல பள்ளிகளிலும் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கிறது. கனிமொழி உட்பட திமுக தலைவர்களின் பிள்ளைகள் பலரும் ஹிந்தி கற்கிறார்கள். ஆனால், சாதாரண மக்களின் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி கற்கக் கூடாது என்கிறது திமுக. திமுக வின் இந்த கபட நாடகத்தை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுவிட்டார்கள்.

ஒவ்வொருவரும் ஹிந்தி கட்டாயம் படித்தே தீர வேண்டும் என்று சொல்லப்பட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயாமானதாகவே இருக்கும். ஆனால், ஹிந்தி ஒரு விருப்பப் பாடமாகவே இருக்கிறது. விரும்புகிறவர்கள் ஹிந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கலாம். ஹிந்தியை விரும்பாதவர்கள், ஹிந்திக்கு பதிலாக, வேறு ஒரு இந்திய மொழியையோ அல்லது ஒரு அந்நிய நாட்டு மொழியையோ படிக்கலாம். என்றே புதிய கல்விக் கொள்கை 2020 கூறுகிறது. இதில் எங்கே ஹிந்தி திணிப்பு இருக்கிறது..?

தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஹிந்தி படிக்க வைக்கும் திமுக மற்றவர்களின் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்கிறது. தாங்கள் நடத்தும் பள்ளிக் கூடங்களில் பணம் வாங்கிக் கொண்டு ஹிந்தி கற்பிக்கும் திமுக வினர், அரசுப் பள்ளிகளில் இலவசமாக் ஹிந்தி கற்பிக்கக் கூடாது என்று போராடுகின்றனர்; இப்படி இரட்டை வேடம் போடும் திமுக வின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள். குடிப்பதை தடுக்க எவ்வித பிரச்சாரங்களையும் முயற்சிகளையும் செய்யாத திமுக, ( பெரும்பாலான மது உற்பத்தி ஆலைகளை நடத்துவதும் திமுக வினரே ) பிள்ளைகள் படிப்பதை கெடுக்க நினைக்கிறது.

ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்துவிடும் என்பது திமுக முன்வைக்கிற மற்றொரு கருத்து.கூடுதலாக ஒரு மொழியை கற்பதால் அழிந்துவிட தமிழ் ஒன்றும் பலகீனமான மொழி அல்ல; இத்தனை வருடங்களாக ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வந்த போதிலும் அழியாத தமிழா ஹிந்தி கற்பதால் அழிந்துவிடப் போகிறது..? தமிழ் என்றும் அழியாது. கர்நாடகம் கேரளா போன்ற மாநிலங்களில் பல வருடங்களாக ஹிந்தி மூன்றாவது மொழியாக இருக்கிறது. மலையாளமும் கன்னடமும் அழிந்து விட்டதா..?

திமுக மக்களை ஏமாற்ற நினைக்கிறது. தங்களின் அரசியல் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த ஹிந்தியை ஒரு பூச்சாண்டியாக மக்களிடம் காட்ட முயல்கிறது. இந்த முறை திமுக வின் இந்த முயற்சி வெற்றி பெறப்போவதில்லை. மக்கள் திமுக வின் நாடக அரசியலை நன்றாக புரிந்து கொண்டுவிட்டார்கள். திமுக வின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது.

Wednesday 22 April 2020

கொரானாவை வெல்வோம்.



சீனாவில் உருவான அல்லது உருவாக்கப்பட்ட கொரானா வைரஸ் உலக நாடுகளில் மிகப்பெரும் பாதிப்பை உருவாக்கி மக்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. உலகம் முழுக்க சுமார் 1,80,000 மக்களின் உயிர்களை பலி வாங்கியிருக்கும் நிலையில், இதன் முடிவுக்கு இன்னமும் கூட நிலையான தீர்வு காணப்படாமலிருக்கிறது. 

உலகப் பொருளாதாரம் மண்ணில் வீழ்ந்து கிடக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0 டாலருக்கும் குறைவாகப் போய்  -32 டாலர் என்ற நிலையை எட்டியிருக்கிறது. உலக நாடுகளில் ஊரடங்கின் காரணமாக பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு மிகவும் குறைந்து போயிருப்பதால் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க கிடங்குகள் இல்லாத நிலையில் உற்பத்தி நிறுவனங்கள் கச்சா எண்ணெய் வாங்குபவர்களுக்கு 32 டாலர் அளிக்கும் ஒரு விசித்திர நிலை உருவாகியிருக்கிறது. 

வைரஸின் சீற்றம் இன்னும் குறைந்தபாடில்லை. மீண்டும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டிய நிலையில், வேலையின்மை அதிகரித்து ஏழை மக்கள் வாழ்வாதாரம் முடங்கிப் போகும் ஆபத்திருக்கிறது . உலகின் மற்ற நாடுகளை விட நமது நாட்டு மத்திய மாநில அரசுகள் நிலைமையை சிறப்பாக கையாண்ட போதிலும் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.

அமெரிக்க, ஜெர்மனி, ஃபிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கொரானா பாதிப்புகளுக்கு காரணமாக சீனாவை பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றன. சில நாடுகள் சீனாவிடமிருந்து நஷ்ட ஈடும் கோரியிருக்கின்றன. சீனாவின் அலட்சிய மனப்பான்மையே கொரானா பரவலுக்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்படுவதோடு, கொரானா சீனாவின் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பின் விளைவாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் உருவாகி விசுவரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இது உண்மையாகவும் இருக்கக் கூடும் ; ஏனெனில் சீனா அப்படிப்பட்ட ஒரு நாடுதான். கொரானா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின் உலக நாடுகள் சீனாவுக்கு எதிராக திரண்டெழக் கூடும். சீனாவுக்கு எதிராக யுத்தம் என்பது சாத்தியமற்றது. ஆனால், பொருளாதார தடை உட்பட்ட பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை சீனா எதிர் கொள்ள நேரிடலாம்.                       


இதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்; நாளை உலகின் எந்த நாடாவது கொரானா போன்ற ஒரு வைரஸை செயற்கையாக உருவாக்கி, அதற்கு முடிவு கட்டும்  மருத்துவ இரகசியத்தையும் தன் வசம் வைத்துக் கொள்ளும் சக்தி பெற்றால், அதுவே உலகின் மிகப் பெரும் வல்லரசாக மாறும்.அதுவே உலகின் பெரும் அழிவை உருவாக்கும் ஆயுதமாகவும் விளங்கும். இது இப்போதைக்கு கற்பனை என்றாலும் வரும் காலம் இதை நிஜமாக்கலாம். உலக வல்லரசுகளின் மத்தியில் இப்போதே இது போன்ற ஒரு திட்டம் உருவாகி இருக்கவும் கூடும்.ஆனால், இதுபோன்ற கற்பனைகள் நிஜமாகும்போது, அவற்றையும் எதிர்கொள்ளும் மாற்று சக்தியை அல்லது அதே போன்றதொரு அழிவு சக்தியை நம் நாடும் பெற்றிருக்கும். 

இப்போது கொரானாவுக்கு எதிராக நமது மத்திய மாநில அரசுகள் நடத்தும் போரில் உதவ பொருளாதார வசதி பெற்ற ஒவ்வொருவரும் தம்மாலான பெரும் நிதி உதவியை அரசுகளுக்கு அளிக்க வேண்டும். அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் கொரானாவுக்கு எதிரான போரில் இந்தியா முழுமையான வெற்றி பெறும்.

Friday 13 March 2020

இந்த தயக்கம் தேவைதானா...?



திரு.ரஜினிகாந்த் அவர்கள் தான் முதல்வராக விரும்பவில்லை என்றும், இப்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கு எதிராக மக்களிடையே எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் பதவியை விரும்பாதவராக இருக்கிறார் என்பது  மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். சமுதாயத்தில் அநீதிகள் மலிந்திருக்கின்றன; அரசியல் போக்குகள் சீர்திருத்தப்பட வேண்டும் எனும்போது, ரஜினிகாந்த் தான் தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்று அதை மாற்றிக்காட்ட வேண்டுமே தவிர, மக்களிடையே எழுச்சி ஏற்பட்டபின் தான் நான் தலைமை தாங்க வருவேன் என்று அறிவிப்பது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதாகும்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு நாட்டுக்கு மற்றும் தமிழகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அவர் தேசப்பற்று மிக்கவராக இருக்கிறார்; பொது வாழ்க்கையில் தூய்மையும் நேர்மையும் மிக்கவராக இருக்கிறார். மக்கள் போகும் பாதையில் கும்பலோடு கும்பலாகச் செல்லாமல் மக்களுக்கு தேவையான கருத்துக்களை எதிர்ப்புகள் வந்தாலும் அஞ்சாமல் எடுத்துரைக்கிறார்.; அதோடு அவருக்கு கணிசமான மக்கள் ஆதரவும் இருக்கிறது. பிரதிபலனை பார்க்காமல் அவருக்காக உழைக்கிற மக்கள் கூட்டம் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் அரசியலில் முன்னணிக்கு வரவேண்டும்.  தனக்கு இருக்கும் செல்வாக்கையும் ஆதரவையும் மக்கள் நலனுக்கு ஆதரவாகச் செயல்படுத்த துணிந்து களத்தில் இறங்க வேண்டும். அப்போதுதான் அரசியம் தூய்மை அடையும். மக்கள் நல்ம் பெறுவார்கள். அவர் விரும்பும் சிஸ்டமும் சரியாகும் . ஆனால், ஏனோ தெரியவில்லை ...அவர் தயங்குகிறார்.

அவர் அறிவித்திருக்கும் நிபந்தனைகள், திட்டங்கள் சில காரிய சாத்தியமாற்றவை.
பொதுவாக நல்லவர்கள் வல்லவர்களாக இருப்பதில்லை; வல்லவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை. ஆனால், ரஜினிகாந்த் நல்லவராகவும் வல்லவராகவும் மக்கள் ஆதரவு பெற்றவராகவும் இருக்கிறார்.  இந்நிலையில் அவர்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதைவிட்டு, மக்கள் முன்னெடுத்து வந்தால் நான் பின்னால் வருவேன் என்பது தட்டிக் கழிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படும்.

இனியும் கூட எல்லாம் முடிந்து விடவில்லை. இப்போதும் கூட அவர் தனது நிலையை  மாற்றிக் கொண்டு வெற்றியோ தோல்வியோ அதைப் பற்றி கவலைப்படாமல், அவர் மனதில் இருக்கும் நல்ல திட்டங்களை சிந்தனைகளைச் செயல்படுத்த  மக்களுக்கு தலைமை தாங்கி களத்தில் இறங்கலாம்.

அப்படி செய்ய அவர் விரும்பவில்லை என்றால், அவருக்கு மாற்று வழியும் இருக்கிறது.
தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த முயலும் தீய சக்திகளை ஒழித்துக்கட்ட , தேசபக்தியுள்ள,  உண்மையான மதச்சார்பற்ற கொள்ள்கையுடைய ,நாட்டு நலன் மக்கள் நலனில் அக்கறையுடைய  அரசியல் சக்திகளுக்கு அவர் உடனிருந்து ஆதரவு தெரிவிக்கலாம். 

பெரும் மக்கள் ஆதரவு அவரது பின்னணியில் இருக்கிறது.  காரணமில்லாத தயக்கத்தாலோ, அல்லது வேறு ஏதோ காரணங்களுக்காகவோ  அந்த அபரிமிதமான ஆதரவை வீணடித்து விடாமல் அவர் சாதித்து காட்ட வேண்டும்.

எதிர்கால சரித்திரம் குற்றம் சாட்டும் நிலைக்கு அவர் தன்னை ஆளாக்கிக் கொள்ளக் கூடாது.

Thursday 23 January 2020

என்ன தவறிருக்கிறது இதில்...?


ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் ஆண்டு விழாவில் பேசும்போது, 1971ல் சேலத்தில் ஈ.வெ.ரா. நடத்திய ஹிந்து எதிர்ப்பு மாநாட்டில் இராமபிரான் மற்றும் பிற ஹிந்துக் கடவுள்கள் இழிவுபடுத்தப்பட்டனர். .. அந்தச் செய்தியை பிற பத்திரிக்கைகள்  எதுவும் வெளியிடவில்லை; துக்ளக் மட்டுமே வெளியிட்டது என்று பேசியிருந்தார். துக்ளக் ஆண்டு விழாவில் துக்ளக்கின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் இக்கருத்தை வெளியிட்டிருந்தார்.

இக்கருத்து, ஈ.வெ.ரா. வை இழிவுபடுத்துகிறது என்றும் அதற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தி.க., தி.மு.க., மற்றும் அவர்களது ஆதரவு கட்சியினர் பல இடங்களில் வழக்கு தொடுத்தனர்; போராட்டங்களும் நடத்தப்பட்டன. அதற்கு அவர், நான் உண்மையைத்தான் சொன்னேன்...மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக அறிவித்து விட்டார்.

இதில் ஈ.வெ.ரா. அவமதிப்பு எங்கிருந்து வந்தது..? அந்த ஊர்வலத்தில் ஈ.வெ.ரா.வலும் மற்றவர்களாலும் ஹிந்துக் கடவுள் சிலைகள் அவமதிக்கப்பட்டன என்பது ஆதாரபூர்வமான உண்மை. அதை பல பத்திரிக்கைகளிலும் சோஷியல் மீடியாக்களிலும் வந்த படங்களும் செய்திகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இப்போது தி.க வினர்களும் மற்றவர்களும் என்ன சொல்ல விழைகிறார்கள்..? ஊர்வலத்தில் ஹிந்துக் கடவுளர்கள் யாரும் அவமதிக்கப்படவில்லை என்றா..? அப்படியானால், அந்த ஊர்வலத்தில் ஹிந்துக் கடவுள் சிலைகள் ஏன் கொண்டுவரப்பட்டன..? தி.க. வினர் ஹிந்துக் கடவுளர்களின் பக்தி ஊர்வலமா நடத்தினார்கள்..?

தி.க. வினர் காலம் காலமாக பகுத்தறிவு என்ற பெயரில், கோடானு கோடி மக்கள் பக்தியுடன் வழிபடும்  ஹிந்துக் கடவுளரையும் ஹிந்து மதத்தையும் நாக்கூசும் வார்த்தைகளால் கேவலமாக விமர்சிப்பதை தங்கள் முழு நேரப் பணியாகச் செய்து வருகின்றனர். இது ஹிந்துக்களை இழிவுபடுத்துவது ஆகாதாம்.. ஆனால், ரஜினிகாந்த் வேறு ஒரு விஷயம் பற்றி பேசும்போது எதேச்சையாக சேலம் மாநாட்டைப் பற்றி குறிப்பிட்டால் அது ஈ.வெ.ரா. வை அவமானப்படுத்துவது ஆகுமாம்.

என்ன முட்டாள்தனமான சிந்தனை இது..? 
எந்த நாட்டிலுமே பெரும்பான்மை மதத்தினர்கள்தான் மேலாண்மை செலுத்துவார்கள். ஆனால், நம் நாட்டில் பெரும்பான்மை மதத்தினரான ஹிந்துக்கள் நசுக்கப்படுகிறார்கள்; அவமானப்படுத்தப்படுகிறார்கள்; ஹிந்து மதம் சிறுமைப் படுத்தப்படுகிறது.

இந்நிலையில் குனியக் குனியக் குட்டுவது போல ஹிந்து மதம் இழிவுபடுத்தப்படுவதை சொல்வது கூட குற்றம் என்பது போல தி.க. வினரின் பேச்சும் செயலும் அமைந்திருக்கிறது. தி.க.வின் இந்த அராஜகச் செயலுக்கு திமுக வும் காங்கிரசும் அதன் உதிரிக் கட்சிகளும் துணை போகின்றன.

யானைக்கு தன் பலம் தெரியாது என்பார்கள். அந்த தன் பலமறியாத யானையின் நிலையில் ஹிந்துக்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதனாலேயே இவை சாத்தியமாகியிருக்கிறது.
குனிய குனிய குட்டுபவன் மட்டுமல்ல...குட்ட குட்ட குனிபவனும் கூட முட்டாள்தான் .
இந்த முட்டாள்தனத்தை ஹிந்து சமுதாயம் கைவிடும்போது, எல்லாம் மாறும். வரும் காலம் அந்த மாற்றத்தை சாதிக்கும்.





-     

Sunday 27 October 2019

இது மதச்சார்பின்மையா..?


தீபாவளி திருநாள் உலகளாவிய அளவில் மக்களால் சிறப்புடன் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். தீமையை நன்மை வென்றதன்  மற்றும் இருள் நீங்கி ஒளி பரவுவதன்  குறியீடாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இத்திருநாளுக்கு அமெரிக்க அதிபர் உட்பட, உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் ஹிந்துக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட பல்வேறு அரபு நாட்டு தலைவர்கள் கூட ஹிந்துக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் மிக மிக பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி ஆகும்.

பொதுவாக இந்தியாவில் இஸ்லாம் கிறித்துவக்  கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தீபாவளிக்கு மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின்  அதை ஒரு தகாத செயலாக நினைத்து, தீபாவளிக்கு  மக்களுக்கு வாழ்த்து சொல்வதை தவிர்த்து விடுகிறார்.  தீபாவளிக்கு மட்டுமல்ல.. எந்த ஹிந்து பண்டிகைகளுக்குமே அவர் மக்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை.ஆனால், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களின் அனைத்து பண்டிகை தினங்களுக்கும் தவறாமல் வாழ்த்து தெரிவித்து விடுகிறார் ஸ்டாலின்.

திமுக. ஒரு கடவுள் மறுப்பு மற்றும் மதங்களுக்கு எதிரான கட்சி என்றால், அனைத்து மத பண்டிகைகளையும் அவர் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால் அவர், ரம்ஜான், பக்ரீத், புனித வெள்ளி, கிறிஸ்துமஸ் என பிற மதத்தினர்கள் புனிதமாக நினைக்கும் அனைத்து தினங்களுக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு, ஹிந்துக்கள் கொண்டாடும்  அனைத்து பண்டிகை நாட்களையுமே  புறக்கணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதால் தீபாவளியோ விநாயகர் சதுர்த்தி , கிருஷ்ண ஜெயந்தி போன்ற ஹிந்து பண்டிகைகளோ எந்த முக்கியத்துவத்தையும் சிறப்பையும் இழந்து விடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், வருடத்திற்கு வருடம் இந்துப் பண்டிகைகள்  தமிழகத்தில் மேலும் மேலும் கோடிக்கணக்கான பக்தர்களால் பக்தியுடனும் சிரத்தையுடனும் மிகச் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது.

ஆனால், தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவராகவும் , முதல்வர் வேட்பாளராக கருதப்படுபவருமான ஒருவர் பிற மதத்தினர்களைப் போற்றி, ஹிந்துக்களை மட்டும் புறக்கணிக்க முற்படுகிறார் எனும்போது, அவர் தமிழகத்தை ஆளும் நிலைக்கு வருவார் எனில் அவரது ஆட்சியின் கீழ் மத ரீதியில் ஹிந்துக்களின் நிலை எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கும் ... ஹிந்துக்களின் மத சுதந்திர , மத வழிபாட்டு உரிமைகள் எந்த அளவிற்கு பாதுகாக்கப்படும் என்பதுதான் பிரச்னைக்குரிய விஷயம்..

ஸ்டாலின் பொதுவாக அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கையற்றவராக இருந்தால் அது அவரது தனிப்பட்ட உரிமை என்று நாம் அதை பொருட்படுத்தாமல் இருந்து விடலாம். ஆனால், கிறித்துவ இஸ்லாம் மதங்களின் மீது பூரண நம்பிக்கையும் அதி தீவிர விசுவாசமும் உடையவராக விளங்கி, ஹிந்து மதத்தின் மீது மட்டும் கடும் வெறுப்பு தன்மை உடையவராகவும் இருப்பதை பார்க்கும்போது, அவர் ஆளும் கட்சிக்கு தலைமை வகிப்பவராக மாறினால், அவரது ஆட்சியின் கீழ் ஹிந்துக்கள் எப்படி மத சுதந்திரம் உள்ளவர்களாக வாழ முடியும் என்பது நியாயமான கேள்விக்குரிய விஷயமாகவே தோன்றுகிறது.

நமது அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிற 'மதச்சார்பின்மை' என்ற வார்த்தை 'மதங்களுக்கு அப்பாற்பட்ட ' அரசு என்ற பொருளில் சேர்க்கப்படவில்லை. எந்த மதத்திற்கும் சார்பாக நடந்து கொள்ளாமல் அனைத்து மதத்தினரையும் சமமாக கருதி ஆட்சி நடத்துவது என்ற பொருளிலேயே அந்த வார்த்தை சேர்க்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தி.. மற்றும் வேறு சில அமைப்புகள் கூட, ஹிந்து மதத்திற்கு மட்டும் விரோதமான செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் அரசியல் அதிகாரத்துக்கான போட்டியில் இல்லை. அவை அரசியல் இயக்கங்களும் அல்ல. ஆனால், திமுக ஒரு அரசியல் கட்சி.
அப்படியிருக்க, முற்றிலும் ஹிந்து மதத்திற்கு ( மட்டும் ) விரோதமான மனப்பான்மையுடன் , ஹிந்து பண்டிகைகளுக்கு மக்களுக்கு வாழ்த்து சொல்வது கூட தவறு என்ற தீவிர ஹிந்து எதிர்ப்பு நிலையுடன் இருக்கும் ஸ்டாலின் போன்றவர்  ஆட்சியில் அமர்ந்தால், அவரது ஆட்சியின் கீழ் ஹிந்துக்களின் உரிமைகளும் நலன்களும் பாதுகாப்புடன் இருக்குமா..?  இருக்காது என்பதுதானே நிஜம்.

இது ஒருபுறமிருக்க, வேறொரு கேள்வியும் எழுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
திமுக ஒரு மதச்சார்பற்ற கட்சிதானா..? இந்த அளவிற்கு குறிப்பிட்ட மதத்தின் மீது மட்டும் வெறுப்புணர்வுடன் இருக்கும் திமுகவை எப்படி மதச்சார்பற்ற கட்சி என்று  அழைக்க முடியும்..?
திமுக வை  ஹிந்து  விரோத கட்சி என்று அழைத்தால் ,,, அது நியாயம்தானே.....
திமுக விற்கு எதிராக ஹிந்துக்கள் திரண்டெழ வேண்டும்; திமுக வுக்கு வாக்களிப்பதை ஹிந்துக்கள் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படுவது நியாயமானதாகத்தானே கருதப்பட வேண்டும்...?

நமது அரசியல் சாசனம் கூறுகிற மதச்சார்பின்மைக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக நடந்து கொள்ளும் திமுக ஒரு அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்துக்கே தகுதியான கட்சிதானா...
இதுவும் தீவீரமாக ஆராயப்பட  வேண்டிய விஷயம்தான்.