Friday 13 March 2020

இந்த தயக்கம் தேவைதானா...?



திரு.ரஜினிகாந்த் அவர்கள் தான் முதல்வராக விரும்பவில்லை என்றும், இப்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கு எதிராக மக்களிடையே எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் பதவியை விரும்பாதவராக இருக்கிறார் என்பது  மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். சமுதாயத்தில் அநீதிகள் மலிந்திருக்கின்றன; அரசியல் போக்குகள் சீர்திருத்தப்பட வேண்டும் எனும்போது, ரஜினிகாந்த் தான் தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்று அதை மாற்றிக்காட்ட வேண்டுமே தவிர, மக்களிடையே எழுச்சி ஏற்பட்டபின் தான் நான் தலைமை தாங்க வருவேன் என்று அறிவிப்பது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதாகும்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு நாட்டுக்கு மற்றும் தமிழகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அவர் தேசப்பற்று மிக்கவராக இருக்கிறார்; பொது வாழ்க்கையில் தூய்மையும் நேர்மையும் மிக்கவராக இருக்கிறார். மக்கள் போகும் பாதையில் கும்பலோடு கும்பலாகச் செல்லாமல் மக்களுக்கு தேவையான கருத்துக்களை எதிர்ப்புகள் வந்தாலும் அஞ்சாமல் எடுத்துரைக்கிறார்.; அதோடு அவருக்கு கணிசமான மக்கள் ஆதரவும் இருக்கிறது. பிரதிபலனை பார்க்காமல் அவருக்காக உழைக்கிற மக்கள் கூட்டம் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் அரசியலில் முன்னணிக்கு வரவேண்டும்.  தனக்கு இருக்கும் செல்வாக்கையும் ஆதரவையும் மக்கள் நலனுக்கு ஆதரவாகச் செயல்படுத்த துணிந்து களத்தில் இறங்க வேண்டும். அப்போதுதான் அரசியம் தூய்மை அடையும். மக்கள் நல்ம் பெறுவார்கள். அவர் விரும்பும் சிஸ்டமும் சரியாகும் . ஆனால், ஏனோ தெரியவில்லை ...அவர் தயங்குகிறார்.

அவர் அறிவித்திருக்கும் நிபந்தனைகள், திட்டங்கள் சில காரிய சாத்தியமாற்றவை.
பொதுவாக நல்லவர்கள் வல்லவர்களாக இருப்பதில்லை; வல்லவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை. ஆனால், ரஜினிகாந்த் நல்லவராகவும் வல்லவராகவும் மக்கள் ஆதரவு பெற்றவராகவும் இருக்கிறார்.  இந்நிலையில் அவர்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதைவிட்டு, மக்கள் முன்னெடுத்து வந்தால் நான் பின்னால் வருவேன் என்பது தட்டிக் கழிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படும்.

இனியும் கூட எல்லாம் முடிந்து விடவில்லை. இப்போதும் கூட அவர் தனது நிலையை  மாற்றிக் கொண்டு வெற்றியோ தோல்வியோ அதைப் பற்றி கவலைப்படாமல், அவர் மனதில் இருக்கும் நல்ல திட்டங்களை சிந்தனைகளைச் செயல்படுத்த  மக்களுக்கு தலைமை தாங்கி களத்தில் இறங்கலாம்.

அப்படி செய்ய அவர் விரும்பவில்லை என்றால், அவருக்கு மாற்று வழியும் இருக்கிறது.
தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த முயலும் தீய சக்திகளை ஒழித்துக்கட்ட , தேசபக்தியுள்ள,  உண்மையான மதச்சார்பற்ற கொள்ள்கையுடைய ,நாட்டு நலன் மக்கள் நலனில் அக்கறையுடைய  அரசியல் சக்திகளுக்கு அவர் உடனிருந்து ஆதரவு தெரிவிக்கலாம். 

பெரும் மக்கள் ஆதரவு அவரது பின்னணியில் இருக்கிறது.  காரணமில்லாத தயக்கத்தாலோ, அல்லது வேறு ஏதோ காரணங்களுக்காகவோ  அந்த அபரிமிதமான ஆதரவை வீணடித்து விடாமல் அவர் சாதித்து காட்ட வேண்டும்.

எதிர்கால சரித்திரம் குற்றம் சாட்டும் நிலைக்கு அவர் தன்னை ஆளாக்கிக் கொள்ளக் கூடாது.