Sunday 6 November 2011

தீ பரவட்டும்




ஜன் லோக்பால் சட்டம் கோரி காந்தியவாதி அன்னா ஹஸாரே நிகழ்த்திய போராட்டங்கள் மக்களிடையே ஊழலுக்கெதிராக பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது நிச்சயமான உண்மை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அன்னாவுக்கு ஆதரவாக அதாவது ஊழலுக்கு எதிராக மக்கள் திரண்டெழுகிறார்கள்.மக்கள் அவரை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே நினைக்கிறார்கள். ஆனால், ஊழலுக்கெதிரான இந்த போராட்டத்தில் அன்னாவிடம் உறுதியற்ற தன்மை இருப்பது போல தோன்றுகிறது; அன்னா தனக்கெராக எழும் விமர்சனங்களைக் கண்டு அஞ்சுவது போல் தெரிகிறது.இதனால் அடிக்கடி அவர் தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கிறார்.இது அவரது 'இமேஜ்'க்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.  
குஜராத்தில் முதல்வர் ந்ரேந்திர மோடி ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குகிறார் என்று அன்னா முதலில் கூறினார்; உட்னே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் என்று தங்களைத் தாங்களே வர்ணித்துக் கொள்ளும் சில கட்சிகளின் தலைவர்களும் அன்னா மோடியை எப்படி பாராட்டலாம் .. அவர் ஆர்.எஸ்.எஸ்.. பா...போன்ற அமைப்புகளால் பின்னாலிருந்து இயக்கப்படுகிறார்.. என்றெல்லாம் குற்றம் சாட்ட அன்னா தனது கருத்திலிருந்து உடனே பின்வாங்கி விட்டார். குஜராத்தில் மிகப்பெரும் ஊழல் ஆட்சி நடக்கிறது என்று குற்றம் சாட்டினார். மோடி மிகச் சிறந்த ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறார் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். அமெரிக்க அரசின் ஒரு அமைப்பே அவரது நிர்வாகத் திறனை வியந்து அவர் பிரதமராக தகுதி உடையவர் என்று பாராட்டுகிறது. ஆனால் அன்னா விமர்சனத்திற்கு அஞ்சி தனது நியாயமான கருத்தை தானே மறுதலிக்கிறார்.
அதே போல, ஜன் லோக்பால் மசோதாவை வருகிற பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தோடரில் நிறைவேற்றாவிட்டால் அடுத்த வருடம் நடக்க இருக்கின்ற .பி. உட்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசை எதிர்த்து தான் பிரச்சாரம் செய்யப்போவதாக அன்னா முதலில் குறிப்பிட்டார்; உடனே அன்னா அரசியல் ரீதியில் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழவே தனது நிலையை மாற்றிக் கொண்டு காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் கிடையாது என்றார். அது மட்டுமல்ல வேறொன்றையும் சொன்னார். லோக்பால் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றினால் காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் செய்வோம் என்றார். என்ன அபத்தமான கருத்து இது .. ? மத்தியிலிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான் .மு.கூ. அரசு  இந்திய அரசியலையே ஊழல் மயமாக்கி இருக்கிறது; போஃபர்ஸ் ஊழல், காமன்வெல்த் ஊழல், உலக மஹா 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என பெரும் ஊழல்களில் திளைத்துக் கொண்டிருக்கிறது.இந்திய அரசியல் வரல்ற்றிலேயே இது போன்றதொரு ஊழல் ஆட்சி நடைபெற்றதில்லை என்று கூறுமளவிற்கு ஊழலில் சாதனை படைத்திருப்பது காங்கிரஸ் அரசு. இப்படிப்பட்ட காங்கிரஸ் அரசை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்றால் அது எப்படி ஊழல் எதிர்ப்பு இயக்கமாயிருக்க முடியும் ? லோக்பால் மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டு விட்டால் காங்கிரசின் ஊழல் விவகாரங்கள் எல்லாம் முடிந்து போன கதையாகி விடுமா .. ?
இப்போது கடைசியாக வந்த செய்தியின்படி, அன்னா மீண்டும் தன் நிலையை மாற்றிக் கொண்டு, லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். அன்னா ஏன் இப்படி தடுமாறுகிறார் .. ? மக்களிடம் என் குழப்ப நிலையை உருவாக்குகிறார் .. ? காங்கிரஸ் எதிர்ப்பு நிலை எடுப்பதனால் தன்னை பா... ஆதரவாளர் என்று சித்தரித்து விடுவார்களோ  தனது ஊழல் எதிர்ப்பு இயக்கம் காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கமாக திசை மாறி தனது நடுநிலைமைத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று அவர் அஞ்சலாம்; அல்லது அவரது குழுவினர்கள் அவரை ஆளுக்கு ஒரு பக்கமாக திசை திருப்ப முயன்று அதனால் உறுதியான முடிவெடுப்பதில் அவருக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். எது எப்படியாயினும் இந்த குழப்ப நிலை தொடர்வது அவரது போராட்டங்களுக்கு பெரும் பின்னடைவை உருவாக்கிவிடும்.
  பிற கட்சிகளின் ஆட்சியில் கூட ஆங்காங்கே ஊழல் இருக்கவே செய்கிறது; அவையும் ஒழிக்கப்பட வேண்டியவையே. ஆனால், அதற்காக அவற்றை காங்கிரசின் உலக மகா சாதனை ஊழல்களோடு ஒப்பிட்டு அனைவரையும் ஒன்றாக சமப்படுத்த முனைவது ஊழலுக்கெதிரான போராட்டத்தை பலவீனப்படுத்திவிடும்காங்கிரசின் நோக்கமே இதுதான். அன்னா காங்கிரசின் இந்த திசை திருப்பும் முயற்சிக்கு பலியாகி விடக்கூடாது. ஒருவர் பொதுவாழ்வில் நேர்மையை வலியுறுத்தும்போது அவர் எந்த அளவிற்கு உண்மையானவராயிருந்தாலும் கூட அவர் ஒரு சிலரது எதிர்ப்பிற்கும் விமர்சனத்திற்கும் ஆளாகவே செய்வார்;
அதற்காக அவர் பின்வாங்கினால், தனது இலட்சியத்தில் அவர் உறுதியாக இல்லை என்பதே பொருள். எதிர்ப்புகளுக்கு பயந்து ஒருவரை நேசிப்பது என்பது அஹிம்சையாகாது.
        அன்னா மூட்டிய ஊழல் எதிர்ப்பு தீ கொழுந்து விட்டெரிய வேண்டும்.

நட்டின் அனைத்து மூலைகளுக்கும் இந்த தீ பரவ வேண்டும்.  அன்னா இந்த
முயற்சியில் விமர்சனங்களுக்கு அஞ்சாது தொடர்ந்து ஈடுபட வேண்டும். இந்த தீயின் வெப்பத்தால் நாட்டைப் பீடித்திருக்கும் ஊழல் பேய் கருகிச்
சாம்பலாக வேண்டும்.