Saturday 12 September 2020

திமுக வின் நாடக அரசியல்

                                     

தமிழகத்தில் திடீரென்று ஹிந்தி எதிர்ப்பு கோஷம் தீவிரமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.' ஹிந்தி என்கிற பூதம் ' நம்மை விழுங்க காத்திருக்கிறது என்கிற ரீதியில் மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் ஒரு அச்ச உணர்வை உண்டாக்க திறமையான முறையில் திரைக்கதை வசனத்தை எழுதி, ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இந்த நாடகத்தின் தயாரிப்பு டைரக்க்ஷன் எல்லாம் திமுகதான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சமீப காலங்களில் தமிழகத்தில் இளைஞர்கள் அதிக அளவில் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். குக்கிராமங்கள் தொடங்கி பெருநகரங்கள் வரை பா.ஜ.க.வின் வளர்ச்சி தெளிவாகத் தெரிகிறது. மறுபுறம், தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் பேசிக் கொள்வதை பல இடங்களில் கேட்க முடிகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில் ஜெயலலிதா இல்லாத அதிமுக நன்றாக காலுன்றி வருகிறது.

ஆனால், திமுக நிலைகுலைந்து நிற்கிறது. ஸ்டாலின் கட்சியை திறம்பட வளர்க்கவோ பலப்படுத்தவோ முடியாத தலைவராக  இருக்கிறார்.. புதிதாக வாக்களிக்கும் வயது வந்த இளைஞர்கள் பலரும் திமுக வை நாடுவதில்லை; அவர்கள் பா.ஜ.க. வையே விரும்புகின்றனர். மோடியின் செயல்பாட்டு திறமை அவர்களை ஈர்த்து வருகிறது. சீன ஆக்ரமிப்புக்கு எதிராக இந்தியா எடுத்துவரும் உறுதியான அச்சமில்லாத பதில் நடவடிக்கைகள், கடந்த 6 வருடங்களில் ஊழலே இல்லாத ஆட்சி, பெரிதாக எந்த மதக் கலவரங்களும் இல்லாத நிலை, கொரானாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள், கொரானாவால் பொருளாதார சரிவு ஏற்பட்ட போதிலும் தேசம் வீழ்ந்து விடாமல் இருக்க எடுக்கப்பட்ட திறம்பட்ட நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் விவசாயத்தை மீட்கவும் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய திட்டங்கள் போன்றவை பா.ஜ.க. அரசு மீது மக்களுக்கு பெரிதும் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கின்றன. அதனால், பா.ஜ.க. வை நோக்கி மக்கள் வருவது அதிகரித்து வருகிறது. திமுக வின் தொடர்ச்சியான ஹிந்து விரோதச் செயல்பாடுகளின் எதிர்வினையாகவும் மக்கள் பா.ஜ.க. பக்கம் தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர். ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்தபோது கூட, திமுக எம்.எல்.ஏ. ஒருவர் கூட அக்கட்சியை விட்டு விலகியதில்லை. இப்போது ஒரு.எம்.எல்.ஏ.வே திமுக வை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

இத்தகைய சூழ்நிலையில்தான், தனது வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மக்களின் உணர்ச்சியை தூண்டி விடும் வகையில், மொழிப் பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால், இந்த முறை ஹிந்தி எதிர்ப்பு பருப்பு தமிழகத்து நீரில் வேகப்போவதில்லை என்றே தோன்றுகிறது..ஏனெனில்,திமுக வின் வேஷம் மக்களிடம் கலைந்து வருகிறது.

ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சன்ஷைன் பள்ளியில் ஹிந்தி கற்றுத்தரப்படுகிறது. அதே போல திமுக தலைவர்கள் நடத்தும் பல பள்ளிகளிலும் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கிறது. கனிமொழி உட்பட திமுக தலைவர்களின் பிள்ளைகள் பலரும் ஹிந்தி கற்கிறார்கள். ஆனால், சாதாரண மக்களின் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி கற்கக் கூடாது என்கிறது திமுக. திமுக வின் இந்த கபட நாடகத்தை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுவிட்டார்கள்.

ஒவ்வொருவரும் ஹிந்தி கட்டாயம் படித்தே தீர வேண்டும் என்று சொல்லப்பட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயாமானதாகவே இருக்கும். ஆனால், ஹிந்தி ஒரு விருப்பப் பாடமாகவே இருக்கிறது. விரும்புகிறவர்கள் ஹிந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கலாம். ஹிந்தியை விரும்பாதவர்கள், ஹிந்திக்கு பதிலாக, வேறு ஒரு இந்திய மொழியையோ அல்லது ஒரு அந்நிய நாட்டு மொழியையோ படிக்கலாம். என்றே புதிய கல்விக் கொள்கை 2020 கூறுகிறது. இதில் எங்கே ஹிந்தி திணிப்பு இருக்கிறது..?

தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஹிந்தி படிக்க வைக்கும் திமுக மற்றவர்களின் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்கிறது. தாங்கள் நடத்தும் பள்ளிக் கூடங்களில் பணம் வாங்கிக் கொண்டு ஹிந்தி கற்பிக்கும் திமுக வினர், அரசுப் பள்ளிகளில் இலவசமாக் ஹிந்தி கற்பிக்கக் கூடாது என்று போராடுகின்றனர்; இப்படி இரட்டை வேடம் போடும் திமுக வின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள். குடிப்பதை தடுக்க எவ்வித பிரச்சாரங்களையும் முயற்சிகளையும் செய்யாத திமுக, ( பெரும்பாலான மது உற்பத்தி ஆலைகளை நடத்துவதும் திமுக வினரே ) பிள்ளைகள் படிப்பதை கெடுக்க நினைக்கிறது.

ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்துவிடும் என்பது திமுக முன்வைக்கிற மற்றொரு கருத்து.கூடுதலாக ஒரு மொழியை கற்பதால் அழிந்துவிட தமிழ் ஒன்றும் பலகீனமான மொழி அல்ல; இத்தனை வருடங்களாக ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வந்த போதிலும் அழியாத தமிழா ஹிந்தி கற்பதால் அழிந்துவிடப் போகிறது..? தமிழ் என்றும் அழியாது. கர்நாடகம் கேரளா போன்ற மாநிலங்களில் பல வருடங்களாக ஹிந்தி மூன்றாவது மொழியாக இருக்கிறது. மலையாளமும் கன்னடமும் அழிந்து விட்டதா..?

திமுக மக்களை ஏமாற்ற நினைக்கிறது. தங்களின் அரசியல் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த ஹிந்தியை ஒரு பூச்சாண்டியாக மக்களிடம் காட்ட முயல்கிறது. இந்த முறை திமுக வின் இந்த முயற்சி வெற்றி பெறப்போவதில்லை. மக்கள் திமுக வின் நாடக அரசியலை நன்றாக புரிந்து கொண்டுவிட்டார்கள். திமுக வின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது.