Saturday 15 September 2012

ஊழல்களும் விலை உயர்வும்




          மத்திய .மு.கூ.அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ5 உயர்த்தியிருக்கிறது. சமையல் வாயு சிலிண்டர்கள் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 6 மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
          டீசல் விலை உயர்வு உணவுப்பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலை உயர்விற்கும் வழிவகுக்கும்.ரெயில் பேருந்து மற்றும் மக்கள் பயன்படுத்தும் அனைத்து போக்குவரத்து சாதனங்களின் கட்டணமும் உயரும்என்வே உயர்த்தப்பட்டிருக்கும் டீசல் விலையில் பெருமளவு குறைக்கப்பட வேண்டும்.
                        சமையல் வாயு சிலிண்டர்கள் வருடத்திற்கு 6 என்பது போதுமானதல்ல; இது 12 ஆக உயர்த்தப்பட வேண்டும்.
                       பெட்ரோலியப் பொருட்களுக்கு வழங்கப்படும் மான்யங்களால் நாட்டின் பட்ஜெட்டில்  பற்றாக்குறை ஏற்படுகிற்து. அதனால், பொருளாதாரத் தேக்க நிலை ஏற்படுவதோடு நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது என்று அரசு விலை உயர்வுகளுக்கு காரணம் கூறுகிறது. ஆனால், இது போன்ற விலை உயர்வுகள் சாதாரண மக்களின் வீட்டு பட்ஜெட்டில் பெருமளவு  பற்றாக்குறை ஏற்பட காரணமாய் அமைந்துவிடுவதோடு அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் வீழ்த்துகிறது
         அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல்களையும் முறைகேடுகளையும் களைவதின் மூலம் அரசின் வருமானம் உச்சத்திற்கு செல்லும். விலைவாசிகளை இதுபோல் அடிக்கடி உயர்த்தி மக்கள் வயிற்றில் அடிக்க வேண்டியிருக்காது.
                      உதாரணத்திற்கு சமீபத்தில் வெளிப்பட்ட இரண்டு மெகா ஊழல்களைப் பாருங்கள். 2ஜி ஊழலில் ஸ்பெக்ட்ரம் என்று கூறப்படும் அலைக்கற்றைகளை தனியார் கம்பெனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு வழங்கியதில் நாட்டிற்கு ரூ 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய அரசின் தலைமைக் கணக்கு தணிக்கையாளரே கூறியிருக்கிறார்.
அதே போல நாட்டின் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த முறைகேடுகளால், அரசுக்கு ரூ 1,86,000 கோடி இழப்பு ஏற்பட்டது.இது போன்ற எத்தனையோ ஊழல்கள் முறைகேடுகளின் மூலம் அரசின் வருமானம் ஆட்சியிலிருப்போர்களால் சுரண்டப்படுகிறது ; அரசுக்கு வரவேண்டிய இலட்சக்கணக்கான கோடிகள் காணாமல் போய்விடுகின்றன. இதனால், தொடர்ச்சியாக மக்கள் மீது விலைவாசி உயர்வு என்ற சுமைகள் சுமத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
         ஒருபுறம் ஊழலின் மூலம் அரசின் வருமானத்தை அதாவது மக்களின் பணத்தை இலட்சக்கணக்கான கோடிகளில் சுரண்டும் அரசு மறுபுறம் அரசுக்கு வருமானம் போதவில்லை என்ற காரணத்தைக் கூறி  விலைவாசிகளை உய்ர்த்தவும் செய்கிறது
         இது அரசு மக்கள் மீது நடத்தும் பயங்கரவாத தாக்குதல் என்றே கூற வேண்டும்.

Friday 7 September 2012


முதல்வர் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

          சென்னை அண்ணா நகரில் கட்டப்பட்டு  வரும் மேம்பாலங்களுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள அண்ணா பவள விழா நினைவு வளைவை இடிப்பதென்று நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து அதற்கான வேலையிலும் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையே பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த வேண்டுகோள்களுக்காக அண்ணா வளைவை இடிக்கும் முயற்சியை நிறுத்துவது என்றும் மேம்பாலங்களை வேறு பாதைகளில் அமைப்பது என்றும் அரசு முடிவெடுத்திருக்கிறது.
          இது சரியான முடிவல்ல என்பதுதான் சென்னைவாழ் மக்கள் பெரும்பாலோரின் கருத்தாகும். 
          மேம்பாலங்களை புதிய பாதைகளில் அமைக்க அருகிலுள்ள சித்த மருத்துவமனையின் சில பகுதிகளையும் பாலம் அமையும் பகுதிகளிலுள்ள பல்வேறு கட்டிடங்களையும் வீடுகளையும் இடிக்க வேண்டியிருக்கும்; ஏற்கனவே பாலத்திற்காக அமைக்கப்பட்ட காங்கிரீட் தூண்களில் சிலவற்றையும் இடித்து விட்டு புதிதாக அமைக்க வேண்டியிருக்கும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இதனால் பல கோடிகள் கூடுதலாக செலவாவதோடு, அப்பகுதியில் வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகள் வைத்திருக்கும் மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். 
          இன்று பல இடங்களில் சாலைகள் விரிவாக்கத்திற்காகவும், சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலங்கள் அமைப்பதற்காகவும் கோயில்கள் கூட இடிக்கப்படுகின்றன. பொது நன்மைக்காக என்ற காரணத்திற்காக மக்கள் பன்னெடுங்காலமாக பூஜை செய்து வரும் பாரம்பர்யம் மிக்க தெய்வ சன்னிதானங்களைக் கூட அப்புற்ப்படுத்த ஏற்றுக் கொள்கின்றனர். அப்படியிருக்க பல இலட்சக்கணக்கான மக்களின் நன்மைக்காக அமையும் மேம்பாலங்களுக்காக அண்ணா நினைவு வளைவை அகற்றுவதில் என்ன தவறிருக்க முடியும் .. ? அந்த ஒன்றை இடிக்காமல் காப்பாற்றுவதற்காக கோடிக்கணக்கில் கூடுதலாக பணத்தை செலவு செய்வதும், பலருக்கு வாழ்வாதாரமாய் இருக்கும் அவர்களது வீடுகளையும் கடைகளையும் இடிக்கவும்  வேண்டுமா .. ? அண்ணா நினைவு வளைவை அண்ணா நகர் ரவுண்டானா அல்லது வேறு ஒரு இடத்தில் கூட புதிதாக நிறுவிக் கொள்ளலாமே.    
          எனவே முதல்வர் மேம்பாலங்களின் பாதையை மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.