Wednesday 7 December 2016

ஜெயலலிதா எனும் ஒரு சகாப்தம்.

ஜெயலலிதா.... இப்பெயரை தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே யாராலும் மறக்க முடியாது. இவர் அரசியலில் கரைகண்ட பெரும் மாமேதை இல்லை. எனினும் இவர் தனது மக்கள் ஆதரவு செயல்பாடுகளினால், தனது அரசியல் எதிரிகளை , மக்கள் விரோதிகளை கடைசி வரை தலை தூக்கவிடாமல் செய்தார். இவர் இராஜதந்திர நடவடிக்கைகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றவில்லை; உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் கலைகள் அறிந்திருக்கவில்லை; குடும்பத்தாரையும் நெருங்கியவர்களையும் பதவிகளில் அமரவைத்து ஜனநாயகப் பண்புகளை சீர்குலைக்கவில்லை. ஆனால், இவர் தன் ஆட்சிக் காலத்தில் செய்த பல்வேறு சாதனைகளால், அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றவர். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தில் அசைக்க முடியாத ஆதிக்கம் செலுத்தியவர். 


ஜெயலலிதா அவர்களைச் சுற்றி எந்த சொந்தமும் உறவும் இல்லை; ஆனால், 'அம்மா' என்றழைக்கும் கோடிக்கணக்கான மக்களை உறவாகக் கொண்டவர். இவரது அரசியல் எதிரிகளால் இவருக்கு எதிராக புனையப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள் அனைத்தையும் முறியடித்து வெற்றி வாகை சூடியவர். இவர் மாநில, மொழி, இன வெறியை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைய முயலாதவர்.தேசப்பற்று மிக்கவர்; தேசிய சிந்தனையும் தேச நலனில் அக்கறையும் கொண்டவர். 'திராவிட' என்ற பெயரில் கட்சி கண்டவர்கள் ஹிந்து மதத்தை மட்டும் எதிர்ப்பதையும் வசை பாடுவதையும் மட்டுமே மதச்சார்பற்ற தன்மை மற்றும் பகுத்தறிவுக்கு இலக்கணமாக வகுத்து ஹிந்து விரோதிகளாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவற்றை நிராகரித்து இவரது அரசியல் குரு எம்.ஜி.ஆரின் அடியொற்றி அனைத்து மதத்தினரையும் சமமாக பாவிக்கும் உண்மையான மதச்சார்பின்மை கொள்கையை நிலைநிறுத்தியவர்.
 
ஜெயலலிதா அவர்கள் பல்வேறு இலவசத் திட்டங்களை கொண்டுவந்து தமிழகத்தின் ஏழை மக்கள் 'ஏழ்மை'யை உணராதிருக்கும் நிலையை உண்டாக்கி அவர்களை முன்னேற்ற பாதையில் வழிநடத்தியவர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியவர். தமிழகம் சுனாமி, வரலாறு காணா பெருமழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட காலங்களில் தன்னுடைய நிர்வாகத் திறமையினாலும் தீவிரமான செயல்பாடுகளினாலும் அரசு இயந்திரத்தை விரைந்து சுழலச் செய்து மக்களை பாதிப்புகளிலிருந்து விரைந்து மீட்டுவரச் செய்தவர்.
ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், அராஜகம், ஊழல்கள், கொள்ளைகள், நிலப்பறிப்புகள் மற்றும் ரௌடித்தனங்களுக்கு முடிவுகட்டி தமிழகத்திற்கு விடுதலை பெற்றுத் தந்தது இவரது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

ஜெயலலிதா அவர்கள் சாதாரண கட்சித் தொண்டர்களுக்கு உயர்ந்த பதவிகள் வழங்கி அவர்களை அரசியல் அரங்கின் முன்னரங்கிற்கு கொண்டுவந்தவர். அதே சமயம் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் ஆனாலும் செல்வாக்கு படைத்தவர்கள் ஆனாலும் அவர்களிடம் தவறு காணும் பட்சத்தில் எவ்வித தயக்கமுமின்றி அவர்களை கட்சி மற்றும் அரசுப் பதவிகளிலிருந்து அப்புறப்படுத்திய துணிச்சல் மிக்கவர். 


பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் எல்லாம் மத்திய அரசில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு கூட்டணி மாறி மாறி ஆதரவு அளித்து தமிழக மக்களின் நலன்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் மீதிருக்கும் ஊழல் வழக்குகளை வாபஸ் பெறச் செய்தும் நீர்த்துப் போகச் செய்தும் குற்றமற்றவர்கள் போல மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கையில் ஜெயலலிதா அவர்கள் தன் மீதிருந்த வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திந்தே நிரபராதியாக வெளிவந்திருக்கிறார். தன் மீது வழக்கிருக்கிறது என்பதற்காக தமிழகத்தின் மக்கள் பிரச்னைகளில் எவ்வித சமரசமும் செய்து கொண்டதில்லை. இதற்காக மத்தியில் ஆளும் கட்சிகளுடன் எவ்வித மறைமுக உடன்பாடுகளிலும் ஈடுபடாமல் சிங்கம் போல் நிமிர்ந்து நின்றவர். 
ஜெயலலிதா அவர்கள் காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை என தமிழக மக்களின் பிரச்னை எதுவானாலும் பதவிகளுக்காகவோ பணத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ அரசியல் கூட்டணிக்காகவோ விட்டுக் கொடுக்காமல் உறுதியுடன் போராடியவர். நீதிமன்ற நடவடிக்கைகள் உட்பட எவ்வகையில் முடியுமோ அவ்வகையைக் கடைப்பிடித்து பல முக்கியப் பிரச்னைகளில் தமிழகத்தின் நலன்களைப் பாதுகாத்தவர்.





ஜெயலலிதா அவர்களின் பெருமைகள் சாதனைகள் என இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். திரு எம்.ஜி.ஆர். அவர்களால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட இவர் கட்சிக்கு உள்ளிருந்தும் வெளியிருந்தும் பல்வேறு எதிர்ப்புகளையும் அவமானங்களையும் துரோகங்களையும் சந்தித்து அவற்றை முறியடித்து வெற்றிவாகை சூடி சரித்திரத்தில் இடம் பிடித்தவர். இவர் அரசியல் களத்திலிருந்த சுமார் 35 ஆண்டு காலகட்டத்தில் தமிழக அரசியலின் நிகழ்வுகள் பெரும்பாலும் இவரை மையமாகக் கொண்டே நிகழ்ந்தன. இந்திய அரசியல் களம் இவரை கருத்தில் கொண்டே இயங்கியது. இவரில்லாத நிலையில் பெரும் வெற்றிடம் உருவாகியிருப்பதைப் பார்க்கிறோம். எனினும் இத்தனைக் காலம் இவரைச் சுற்றிவந்த நிகழ்வுகள் இனி இவர் பெயரைச் சுற்றி நிகழும் நிலை உருவாகும். ஏனெனில் ஜெயலலிதா ஒரு முடிவில்லா சகாப்தம்.