Saturday 12 February 2022

என்ன செய்தார்கள் 8 மாதத்தில் ...?

 

தேர்தலின்போது திமுக வால் எத்தனையோ வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன; இவற்றில், ஆவின் பால் விலை குறைப்பு வாக்குறுதிதான் எவ்வித வில்லங்கமும் இன்றி  நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு குறிப்பிட்ட பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக  அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டு வந்த பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது . இலவச சலுகை வழங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை மறைமுகமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்தபின் பெரும்பாலான மாநிலங்கள்  லிட்டருக்கு 10 ரூபாய்க்கும் மேலாக வரிகளை  குறைத்தன. ஆனால் தமிழக அரசு வரிகளைக் குறைக்கவில்லை; அதனால், தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மிக அதிக விலையில் விற்கப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; மின் கட்டணங்கள் மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படும் ; அரசு மற்றும் போக்குவத்துக் கழக ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் முறை அமுல்படுத்தப்படும் என்பது போன்ற முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்ற வாக்குறுதிகள்தான் திமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தன. நகைக் கடன்கள், பயிர்க்கடன்கள், மாணவர்கள் கல்விக் கடன்கள், சுய உதவிக் குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டன. உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, எல்லோரும் தங்கள் வீட்டிலிருக்கும் நகைகளைக் கொண்டு வந்து அடகு வையுங்கள் ; அடுத்து திமுக ஆட்சிதான் வரப் போகிறது ..எல்லாக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று மக்களின் ஆசைகளைத் தூண்டிவிட்டார் . இப்போது நகைக் கடன்கள் ரத்துக்கு எண்ணற்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இதன் விளைவால் நகைக் கடன் பெற்றிருப்போரில் 30% பேருக்கு தான் தள்ளுபடி கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உதயநிதியின் பேச்சைக் கேட்டு வீட்டிலிருந்த நகைகளை எல்லாம் கொண்டு போய் அடகு வைத்தவர்கள் இப்போது வட்டி மேல் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். .பலரது நகைகள் ஏலத்துக்கும் வந்திருக்கின்றன.  

தமிழகத்தில் இந்த வருடம் வரலாறு காணாத மழை பெய்தது. மக்களின் வீடுகள், உடமைகள் நீரில் மூழ்கின ; மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாயினர் ; ஆனால் , திமுக அரசு வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட யாருக்கும் அளிக்கவில்லை. பொங்கலுக்கு வழங்கப்பட்ட இலவசப் பொருட்கள் தரம் குறைந்ததாக இருந்தது.. இதில் பல கோடிகள் ஊழல் நடந்திருக்கின்றன என்று செய்திகள் கூறுகின்றன.  

எடப்பாடி ஆட்சியின்போது, பொங்கலுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ 5000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த ஸ்டாலின் இப்போது ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று முழங்கியவர்கள் இப்போது 2026 சட்டமனற தேர்தலுக்கான வாக்குறுதியாக அதை மாற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று பேசி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் திமுக ஆட்சிக்கு வந்தபின் வன்முறை அராஜகங்கள் அதிகரித்திருக்கின்றன. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை திருட்டு போன்ற  செய்திகளாகத்தான் இருக்கின்றன. மத்தியில் ஆளும் பாஜக மாநில அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டுகள் வீசும் அளவுக்கு  சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்திருக்கிறது. .

கோயில்கள் இடிக்கப்படுகின்றன. திமுக முழுக்க முழுக்க மத அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது.. ஸ்டாலின் தனது ஆட்சியை கிறித்துவர்களின் ஆட்சி, முஸ்லிம்களின் ஆட்சி என்று வெளிப்படையாகவே கூறுகிறார். கிறித்துவ மதமாற்ற சக்திகளை ஆதரிக்கிறார். தஞ்சையில் கிறித்துவ மதமாற்ற நிர்ப்பந்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட லாவண்யா என்ற 16 வயது சிறுமியின் மரணத்தை  காவல் துறையின் உதவியுடன் திசை திருப்பும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன ஹிந்து மதத்தை இழிவுபடுத்தப்படும் போக்கு அதிகரித்திருக்கிறது. அரசு அதற்கு மறைமுக ஆதரவு ம் அளிக்கிறது. ஹிந்துக்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன; ஹிந்துக்கள் இரண்டாம் aதர குடிமக்கள் போல நடத்தப்படுகிறார்கள்.

இப்படி இந்த 8 மாத வேதனைகளை இன்னும் பல இருக்கின்றன.. இந்நிலையில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றுவிட்டால், திமுக தனது 8 மாத ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழாகவே அதை வெளிப்படுத்தும். அதன் பிறகு  நிறைவேற்றப்படாமல் இருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை அரசு கண்டு கொள்ளவே செய்யாது. அதோடு நிதி பற்றாக்குறை என்ற காரணம் சொல்லி , மின் கட்டணம், பேருந்து கட்டணம், சொத்து வரி போன்றவைகளை உயர்த்தவும் முற்படும்.  மாறாக எதிர்க்கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெற்றால், அரசு தனது தவறுகளை உணரும். .வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு  தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவங்கும்.  

உள்ளாட்சி தேர்தலில் திமுக தோற்றால் ஆட்சி  மாற்றம் ஏதும் ஏற்படப் போவதில்லை; ஆனால் அரசின்  செயல்பாடுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மக்களுக்கு பல நன்மைகளும் கிடைக்கும். மக்களுக்கு விரோதமாக ஒரு அரசு நடக்கிறபோது, அந்த அரசுக்கு தேர்தலில் கிடைக்கிற தோல்விதான் ஒரு பாடமாக இருக்கும்.

அந்த பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும். .