Friday 31 May 2013

நீதி வழங்கப்படுகிறதா..?




இந்திய நீதிமன்றங்களில் இன்றைய கால கட்டத்தில் சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கியிருக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் மட்டும் சுமார் 63,000க்கும் மேற்பட்ட  வழக்குகளும் உயர்நீதிமன்றங்களில் சுமார் 43 இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் தேங்கியிருக்கின்றன.உலகின் எந்த நாட்டிலும் இப்படிப்பட்டதோர் நிலை இல்லை. 
தாமதமாய் வழங்கப்படும் நீதி, நீதி மறுக்கப்பட்டதற்கு சமம் என்று கூறுவார்கள்.நம் நாட்டில் 90%க்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதி தாமதமாக அல்ல மிக மிக தாமதமாகத்தான் கிடைக்கிறது. பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் நியாயமும் குற்றவாளிகளுக்கு தக்க நேரத்தில் தண்டனையும் கிடைப்பதில்லை என்பதுதான் இதன் பொருள்.
இந்தியாவில் ஒரு வழக்கு பல நீதிமன்றங்களையும் கடந்து இறுதி முடிவுக்கு வர 20 வருடங்களுக்கும் மேலாகக் கூட ஆகின்றன.பல வழக்குகளில் தீர்ப்பு வருவதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் இறந்தேவிடுகின்றனர். பிரபலமான நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள், மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் போன்றவற்றைத் தவிர பிற வழக்குகளில் இதுதான் இன்றைய நிலை. 
நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்க ஆகும் இந்த காலதாமதம் சமுதாயத்தில் குற்றங்கள் பெருக ஒரு முக்கிய காரணமாக அமைகிறது என்று கூறினால் எதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. நீதிமன்றங்களின் மூலம் தீர்ப்பு கிடைக்காது என்பதனால் சிலர் பழிக்குப் பழி வாங்கி தாங்களே தீர்ப்பெழுதி விடுகின்றனர்; வேறு சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்களை நாடி தங்கள் பிரச்னைகளுக்கு தீர்ப்பெழுதிக் கொள்கின்றனர்
உலகம் மிக வேகமாக மாறிவருகிறது; பலவகையான குற்றங்கள் மட்டுமல்ல குற்றங்கள் நடைபெறும் விதமும் நவீன முறைக்கு மாறி வருகின்றன. தனிநபர் சம்பந்தப்பட்ட கிரிமினல் மற்றும் சிவில் குற்றங்கள் தவிர தேசத்திற்கு எதிரான பயங்கரவாதச் சம்பவங்களும் துரோகச் செயல்களும் சைபர் கிரைம் என்றழைக்கப்படுகிற இண்டர்நெட் குற்றங்களும் மிகவும் அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த காவல் துறையும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டால் மட்டும் போதாது. நீதிமன்றங்களில் வழக்குகளில் தீர்ப்பும் விரைந்து வழங்கப்பட வேண்டும்.   
ஆனால், நம் நாட்டில் நீதி பரிபாலன முறையில் நிலவும் இந்த மோசமான காலதாமதத்திற்கு பல காரணங்கள் உள்ளன. நீதிபதிகள் பற்றாக்குறை என்பது இதற்கு முக்கியமான ஒரு காரணமாகும். இந்தியாவில் 10 இலட்சம் மக்களுக்கு சுமார் 15.5 என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே நீதிபதிகள் இருக்கின்றனர். உலகிலேயே இது மிகக் குறைவாகும். இந்த விகிதம் ஆஸ்திரேலியாவில் சுமார் 41.6 ஆகவும் பிரிட்டனில் சுமார் 50.9 ஆகவும் கனடாவில் 75.2 ஆகவும் அமெரிக்காவில் 107 ஆகவும் இருக்கிறது. நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியது உடனடி அவசியம் என்பதை இந்தப் புள்ளிவிபரம் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
இதோடு, ஒரு வழக்கு முடிவுக்கு வர வழக்கறிஞர்களின் பங்கும் மிக மிக அத்யாவசியமானதாகும். அவர்கள் வழக்குகளை இழுத்தடிக்காமல் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு விரைந்து முடிக்க உதவ வேண்டும். தேவையற்ற சட்டப்பிரச்னைகளை எழுப்புவதையும் தேவையற்ற வாய்தாக்களையும் தவிர்த்தாலே பெருமாலான வழக்குகளில் தீர்ப்பு விரைந்து கிடைத்துவிடும். வழக்கறிஞ்ர்களுக்கு வழக்கு ஒரு தொழில். ஆனால், வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அதாவது அவரது கட்சிக்காரர்களுக்கு வழக்கு வாழ்க்கையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.  
சமீப காலங்களில் வழக்கறிஞ்ர்களின் வேலை நிறுத்தம் அதிக அளவில் நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம். தாங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக மட்டுமின்றி பல்வேறு பொதுநலம் சார்ந்த பிரச்னைகளுக்காகவும் அவர்கள் நீதிமன்றங்களைப் பகிஷ்கரிக்கும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
வழக்கறிஞ்ர்கள் பொது நலன்களுக்காக போராடுவது வரவேற்கத்ததே. ஆனால், நீதிமன்ற பகிஷ்கரிப்பு போராட்டங்களில் ஈடுபடாமல் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்பான தங்கள் பணிகளை முடித்து விட்டு வெளியில் வந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவைகளில் ஈடுபடலாமே. வழக்கு தொடுத்தவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே எவ்விதப் பிரச்னையும் இல்லாத்போது, நீதிமன்றப் பகிஷ்காரத்தில் ஈடுபட்டு தங்களுக்கு வழக்கு கொடுத்த தங்கள் கட்சிக்காரர்களை தண்டிக்க முற்படுவது என்ன நியாயம்....?
சமீபத்தில் நீதிமன்றக்களுக்கு கோடை விடுமுறை கூடாது என்று ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இது நியாயமான கோரிக்கையாகவே இருக்கிறது. இந்தியா பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்தபோது இந்தியாவில் நிதிபதிகளாய் இருந்தவர்களில் பெரும்பாலோர் பிரிட்டிஷார்களே. கோடைகாலத்தில் இந்தியாவில் நிலவும் கடுமையான உஷ்ண நிலையை அவர்களால் தாங்கமுடியாததாலேயே இந்தக் கோடை விடுமுறை பழக்கம் உருவானது. இப்போது எல்லாம் மாறிவிட்ட நிலையில் நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை தேவையில்லை என்ற மாற்றத்தையும் ஏற்றுக் கொள்வதே சரியானதாயிருக்கும்.
25 வயதில் ஒரு கடுமையான குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவனின் வழக்கில் அவனது 45 வயதில் அவன் நிரபராதி எனத் தீர்ப்பு வருமேயாயின் அந்தத் தீர்ப்பால் அவனுக்கு என்ன பயன் ..? இழந்து போன அவனது இளமையை யார் திருப்பித்தர முடியும் ..? அவனது வாழ்க்கை அழிக்கப்பட்டு விட்டது என்றுதானே பொருள் ..?
ஒரு அசையாச் சொத்து தனக்குரியது என்று தனது இளம் வயதில் வழக்கு தொடுத்தவனுக்கு 75 வயதில் சாதமாய்த் தீர்ப்பு வருமேயாயின் அதனால் அவனுக்கு என்ன பயனிருக்கப்போகிறது ..? அவனுக்கு நீதி மறுக்கப்பட்டதாகத்தானே பொருள் ..?
நீதிமன்றங்களில் நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது. நீதி தக்க நேரத்திலும் வழங்கப்பட வேண்டும்.என்வே அரசு, மேன்மைதாங்கிய நீதிபதிகள் மற்றும் கற்றறிந்த வழக்கறிஞர்கள் இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டில்லியில் ஓடும் பேருந்தில் கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவது உட்பட அனைத்தும் விரைவாக நடந்தேறி வழக்கு துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தீர்ப்பும் வரவிருக்கிறது. இந்த வழக்கில் முடியும் என்றால் ஏன் மற்ற வழக்குகளிலும் இந்த வேகம் கூடாது ..?

.



Tuesday 21 May 2013

சீமான் ஏன் திசை மாற்றுகிறார் .. ?






இலங்கையில் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நினைவு தினத்தை ஒட்டி கடலூரில் சீமான் நடத்திய கூட்டத்தில் காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்களில் ஒன்றைச் சார்ந்த யாசின் மாலிக் கலந்து கொண்டிருக்கிறான். இது கடுமையான கன்டனத்திற்குரியது.தமிழினப் படுகொலைகள் கன்டனக் கூட்டத்திற்கு .நெடுமாறன், வை.கோ. போன்றவர்களை அழைக்காமல் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன..?
அக்கூட்டத்தில் பேசிய யாசின் மாலிக்,இலங்கைத் தமிழர் பிரச்னையையும் காஷ்மீர்ப் பிரச்னையையும் ஒன்று போல சித்தரித்துப் பேசியிருக்கிறான். மாலிக்கின் இப்பேச்சிற்கு கூட்டத்தில் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை சீமான்.மேடை நாகரீகம் கருதி அவர் அவ்வாறு இருந்திருப்பாரேயாயின் இனியாவது சீமான் மாலிக்கின் கருத்திற்கு உடனடியாக மறுப்பு தெரிவிக்க வேண்டும்.  
ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவின் பிற மாநில மக்களைப் போல அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் உண்டு; இன்னும் சொல்லப்போனால் அரசியல் சட்ட 370வது பிரிவின்படி பிற மாநில மக்களை விட காஷ்மீர் மக்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் உண்டு.
ஜம்மு-காஷ்மீரில் ஜம்மு,லடாக் மற்றும் காஷ்மீர் என்ற 3 பிராந்தியங்கள்  உண்டு. இதில் ஜம்முவில் ஹிந்துக்களும் லடாக்கில் பௌத்தர்களும் காஷ்மீரில் முஸ்லீம்களும் அதிக அளவில் வாழ்கின்றனர். இதில் காஷ்மீர் பகுதியில் மட்டுமே மத அடிப்படைவாதப் போராட்டங்களும் வன்முறைக் கலவரங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் எவ்விதப் பிரச்னையுமில்லை. இங்கு நடந்து கொண்டிருப்பது முழுக்க முழுக்க மத அடிப்படையிலான பயங்கரவாதமே தவிர உரிமைகளுக்கான போராட்டமல்ல. ஜம்மு பகுதியிலும் லடாக்கிலும் முஸ்லீம்கள் எல்லா அதிகாரங்களுடனும் உரிமைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், காஷ்மீர் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் அங்கிருந்து மத அடிப்படைவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால், இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அதிகாரங்களோ உரிமைகளோ கிடையாது.எனவேதான் முதலில் அமைதி வழிப் போராட்டங்கள் நடந்து இறுதியில் பிரபாகரனின் தலைமையிலான பெரும் ஆயுதப் போராட்டம் நடந்தது. சுருங்கச் சொன்னால், இலங்கையில் நிகழ்வது தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம்; காஷ்மீரில் நடப்பது மத அடிப்படைவாத குழுக்களின் பயங்கரவாதம். எனவே காஷ்மீர்ப் பிரச்னையும் இலங்கைப் பிரச்னையும் ஒன்றல்ல.  இரண்டையும் ஒன்று என்று கூறுபவர்கள் இலங்கைத் தமிழர் போராட்டத்தை கொச்சை படுத்த நினைக்கிறார்கள் என்றே பொருள்.
இலங்கைத் தமிழர் போராட்டம் நியாயமானது; ஆதரிக்கப்பட வேண்டியது;அவர்களுக்குரிய உரிமைகளையும் அதிகாரங்களையும் பெற்றுத் தர வேண்டியது இந்தியா உட்பட்ட உலக நாடுகளின் கடமை. ஆனால், காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதம் அடக்கி ஒடுக்கப்பட வேண்டியவை.
எனவே முள்ளிவாக்கால் படுகொலைகள் நினைவு தினத்திற்கு மாலிக் அழைக்கப்பட்டது மிகப்பெரும் தவறு. இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை எல்லாம் அழைத்து வந்து இலங்கைத் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட நினைப்பது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கு சமமாக மாறிவிடும். இப்படிப்பட்ட சம்பவங்கள் ராஜபக்க்ஷேவிற்குத் தான் நற்பெயரைத் தேடித்தரும்