Friday 21 October 2011

தெலுங்கானா


மத்தியில் அரசு என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா என்ற கேள்விதான் எழுகிறது தெலுங்கானா விவகாரத்தில் .மு.கூ. அரசின் செயல்பாடுகளைப்பார்க்கும்போது
தெலுங்கானா தனி மாநிலம் கோரி நடக்கும் போராட்டங்கள் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றன; எம்.எல்..க்கள், எம்.பி.க்கள் இராஜினாமா தினசரி இரயில் மறியல் பந்த் என போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றன; தனி மாநில கோரிக்கைக்கு மக்களின் பூரண ஆதரவும் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. சமீபத்தில் இப்பகுதியில் நிகழ்ந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட தனிமாநிலம் கோரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி பா... கூட்டணி வேட்பாளரே அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். தெலுங்கானா கோரி இதுவரை 400 பேருக்கும் மேல் உயிர்த் தியாகம் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா பகுதியில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன; தொழில்கள் முடங்கிப் போயிருக்கின்றன; அரசு நிர்வாகம் செயல்படவேயில்லை; அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துப் போய் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்; அதுமட்டுமில்லாமல், இந்தப் போராட்டத்தின் விளைவாக அண்டை மாநிலங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன; நிலக்கரி வரத்து இல்லாததால் தமிழ்நாடு மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டு மின்வெட்டு அதிகமாயிருக்கிறது. ஆனால், ஆந்திரா மற்றும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுகள் இதைப் பற்றி சிறிது கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கிணற்றில் போட்ட கல்லாக இருக்கின்றன.
ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்தே தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையும் ஒலித்துக் கொண்டிருக்கிறது; கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது நாங்கள் வெற்றி பெற்றால் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் அளித்தது.கடந்த 9/12/2010 அன்று தெலுங்கானா தனி மாநிலம் அறிவிப்பை மத்திய அரசு அதிகாரபூர்வமாகவே அறிவித்தது.  ஆனால், அடுத்த நாளே தனது நிலையிலிருந்து பின்வாங்கிக் கொண்டு மக்களுக்கு துரோகம் செய்தது. காங்கிரஸ் மேற்கொண்ட இந்த ஏமாற்று வேலையால் மாநிலமே இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், மத்திய மாநில அரசுகள் பிடில் வாசித்துக் கொண்டிருக்கின்றன.

Thursday 6 October 2011

நான் விரும்பும் இந்தியா


          வறுமையற்ற, வலிமை மிகுந்த, கல்வி அறிவு மிகுந்த, ஊழலற்ற, பயங்கரவாதம் வேரறுக்கப்பட்ட, சாதி, மதம் போன்றவற்றால் தங்களை பிளவு படுத்திக் கொள்ளாத, குண்டுவெடிப்புகளால் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து கிடக்காத ... இப்படி ஒரு ஒளி மிகுந்த இந்தியாவை நான் காண விரும்புகிறேன். இது ஒரு கனவாக இருக்கலாம்; ஆனால், நாம் ஒற்றுமையாய் முயன்றால் நம் கண்ணெதிரிலேயே இதை நிஜமாய்க் காண முடியும்.
          ஒரு காலத்தில் குஜராத் நாட்டின் பத்தோடு பதினோராவது மாநிலமாகத்தானிருந்தது; இன்று நாட்டின் முதன்மையான மாநிலமாகியிருக்கிறது. அமெரிக்காவே பாராட்டும் பெருமையைப் பெற்றிருக்கிறது. நேற்று வரை பீஹார் நாட்டின் பின்தங்கிய மாநிலம் என்ற பெயரைப் பெற்றிருந்தது; இன்று வளர்ச்சிப் பாதையில்  வேகமாய் முன்னேறுகிறது. திருவாளர்கள் மோடியும் நிதிஷ் குமாரும் இதன் காரணகர்த்தாக்கள். இதுபோன்ற தலைவர்கள் நாட்டின் அதிகாரத்திற்கு வரும்போது இன்று உலகில் ஒரு நாடாக இருக்கும் இந்தியா உலகின் முதன்மை பெற்ற நாடாகிவிடும்
          ஊழல் நமது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாய் இருக்கிறது; எங்கும் எதிலும் ஊழல் என்று ஒரே ஊழல் மயமாயிருக்கிறது. மக்கள் தங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தில் வரியாகவும் பிற வகைகளிலும் அரசுக்கு போகும் வருமானம் அந்த மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுவதை விட ஊழல்வாதிகளால் சுருட்டப்படுவதே அதிகமாயிருக்கிறது. சமீப காலமாக, தொடர்ச்சியாக விசுவ ரூபமெடுத்து வரும் ஊழல்கள் குறிப்பாக போஃபர்ஸ் ஊழல், 2ஜி மெகா ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்றவைகள் இந்தியா  ஊழல்வாதிகளின் தேசமோ என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டது; உலக நாடுகளின் மத்தியிலும் கூட இந்தியாவிற்கு இவை மிகப்பெரும் அவப்பெயரை தேடித் தந்திருக்கின்றன.
           இதனால், மக்களிடையே ஊழலுக்கெதிராக மிகப்பெரும் கொந்தளிப்பு உருவாகியிருக்கிறது. திருவாளர்கள் அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு இதன் விளைவே. ஊழலுக்கெதிரான இந்தக் கொந்தளிப்பு மக்களிடம் நிலைத்திருக்கும் பட்சத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அச்சம் தோன்றும்; ஊழல் செய்தால் இலஞ்சம் வாங்கினால் பதவியில் நீடித்திருக்க முடியாது என்ற நிலை உருவாகும்.. நமது வீட்டில் ஏதேனும் திருடு போனால் திருடியவர்களுக்கு எத்தகைய மரியாதையை தருகிறோமோ அதே மரியாதையைத்தான் நமது நாட்டில் திருடியவருக்கும் ( ஊழல் செய்தவர்களுக்கும் ) நாம் வழங்க வேண்டும். சொல்லப்போனால், வீட்டில் திருடுபவர்களை விட நாட்டில் திருடுபவர்கள்தான் நமக்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கிறார்கள். இதோடு, ஊழலுக்கெதிராக கடுமையான சட்டங்கள் வேண்டும். ஊழல் செய்தால் கடும் தண்டனை உறுதி; ஊழலில் சம்பாதித்த செல்வமும் பறிக்கப்படும் என்ற நிலை உருவாகும்போது ஊழலுக்கு முடிவு ஏற்பட வழி கிடைக்கும். .
          ஊழலைப் போலவே பயங்கரவாதமும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளால் மக்கள் தங்களை பிளவுபடுத்திக் கொள்வதும் நாட்டைப் பீடித்திருக்கும் மிகப்பெரும் பிணிகளாகும். இப்பிணிகளைப் போக்க மக்கள் ஒன்றுபட்டெழ வேண்டும். நம் நாட்டில் பல்வேறு சாதிகள், மொழிகள், இனங்கள், மதங்கள் உண்டு. இவற்றிற்கிடையே வேறுபாடுகள் நிலவுவது சகஜமே. ஆனால்,இந்தியர்களிடம் சாதி மாத உணர்வுகள் வேரூன்றியிருந்தாலும் நாடு பெரும் சிக்கலை சந்திக்கும் போதெல்லாம் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து இந்தியனாய் பிரச்னையை எதிர் கொள்ளும் பக்குவமுண்டு. இந்தியா அண்டை நாடுகளுடன் போர்களில் ஈடுபட்டபோதும் இயற்கைப் பேரழிவுகளை சந்தித்த போதும் இந்த ஓற்றுமையை நாம் கண்டிருக்கிறோம். அதே சமயம் இந்த சாதி மத வேறுபாடுகளை மேலும் மேலும் பெரிதாக்கி மக்களைபிளவுபடுத்தி அவர்களுக்குள் மோதலை உண்டாக்கி அதில் தங்களை வளர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள் சில சுயநல அரசியல்வாதிகளும் தலைவர்களும். இத்தகைய தலைவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாயிருப்பதோடு அவர்களை புறக்கணிக்கவும் செய்ய வேண்டும்.                   
            இந்தியா சந்திக்கிற மேலும் ஒரு முக்கிய பிரச்னை பயங்கரவாதம். மத அடிப்படையில் எழுகின்ற இந்த பயங்கரவாதப் படுகொலைகளுக்கு முழுக்க முழுக்க அரசே பொறுப்பு. மூன்று மாதத்திற்கொரு முறை அல்லது ஆறு மாதத்திற்கொரு முறை என குண்டுவெடிப்புகளால் கொத்து கொத்தாக மக்கள் மடிந்து கிடப்பதை தோலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் காண நேரும்போது நெஞ்சம் பதைக்கிறது. ஆனால் அரசோ அதைபற்றி எவ்வித கவலையும் கொள்வதில்லை. பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தை தொடங்குவதற்கு பதிலாக அரசு அரசியல் இலாப நஷ்டக் கணக்குகளின் அடிப்படையில் பிரச்னையை ஆறப்போடுவதாலேதான் பயங்கரவாதம் மீண்டும் மீண்டும் மக்களை தாக்கி வருகிறது. நாட்டின் ஜனநாயகத்தின் உருவகமாக விளங்கும் பாராளுமன்றத்தை தாக்கிய பயங்கரவாதிக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த பின்னும் அரசு பல ஆண்டுகளாக தண்டனையை நிறைவேற்றாமல் அவனைப் பாதுகத்து வருவதே இதற்கு சாட்சி; காஷ்மீர் பிரச்னையும் இப்படித்தான்; அரசின் மென்மையான , உறுதியற்ற நடவடிக்கைகளால், அது பிரச்னையாகவே காலாகாலத்திற்கும் நீடித்துக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி எனும்போது அது சம்பந்தமாக் பாகிஸ்தானை கூவிக் கூவி அழைத்து அரசு ஏன் பேச்சுவார்த்தை நடத்துகிறது ..?
          சுருங்கச் சொன்னால், நாம் அனைவரும் இந்தியர்கள்; இந்த தேசம் நம்முடையது; இதை நமது வீடு போல பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் போலிகளை அடையாளம் கண்டு, தேசத்திற்கு நல்ல நிர்வாகம் அளிக்க முடியாதவர்களையும், அதிகாரங்களை பயன்படுத்தி மக்களை சுரண்டுபவர்களையும் தண்டிப்போம் என்ற முடிவை நாம் கொள்வோம்; அடுத்த சில வருடங்களில் ஒளிமிகுந்த இந்தியாவை நாம் காண்போம்.
               
                                                                                                                                                                                                                                                                                               
                                                                                                                                                                                                                                                                                                



Saturday 1 October 2011


2001 டிசம்பர் 13 அன்று நமது நாட்டின் பாரளுமன்றத்தின் மீது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. நமது பாதுகாப்பு படையினர் தங்களது இன்னுயிரை ஈந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கொன்றழித்ததால் எம்.பி.க்கள் பலர் உயிர் தப்பியதோடு நாட்டின் மானமும் காப்பாற்றப்பட்டது.
நாட்டின் பாராளுமன்றம் தாக்கப்படுதல் என்பது நாட்டின் மீது படையெடுக்கப்பட்டதற்கு சமமாகும். இத்தகைய கொடூர பயங்கரவாதச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவனான அப்சல் குரு என்பவனுக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த பின்னும் கூட மத்தியில் ஆளும் .மு.கூ. அரசு பல வருடங்களாக தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல் அவனை பாதுகாத்து வருகிறது.
இந்நிலையில் அப்சலுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் காங்கிரஸின் கூட்டணியோடு ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவின் ஆதரவோடு ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பா...வின் கடும் எதிர்ப்பின் காரணமாக இத்தீர்மானம் நிறைவேறாமல் தடுக்கப்பட்டது. காங்கிரஸ் கூட தீர்மானத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டது வெட்ககேடான விஷயம்.
நாட்டின் இறையாண்மையின் சின்னமாக கருதப்படும் பாரளுமன்றத்தையே தாக்க முற்பட்ட பயங்கரவாதிக்கு அவன் ஒரு முஸ்லீம் என்பதனால் சிறுபான்மையினர் ஓட்டு வங்கி அரசியலை மனதில் வைத்து பாதுகாப்பு கொடுக்க நினைக்கிற ஒரு தரம் தாழ்ந்த செயலை செய்து வருகிறது காங்கிரஸ் கட்சி.இப்படிப்பட்ட மனப்பான்மையுடன் செயல்படும் காங்கிரஸ் பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும் மக்களையும் எப்படி பாதுகாக்க முடியும் .. ?
ஒரு கொடூர பயங்கரவாதியை பாதுகாத்துக் கொண்டிருக்கிற காங்கிரசுக்கு நாட்டை ஆளும் தகுதி உண்டா .. ? மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. காங்கிரசின் தோல்வியே நாட்டின் பாதுகாப்பு என்பதை அக்கட்சியே அப்சல் குரு விஷயத்தில் தான் மேற்கொண்ட நிலைப்பாட்டின் மூலம் மக்களுக்கு தெரிவித்திருக்கிறது.