Wednesday 12 April 2017

இயந்திரமா.. காகிதச் சீட்டா..?

தேர்தல்களில் EVM ( Electronic Voting Machine )களை பயன்படுத்தாமல் முன்பு போல வாக்குச்சீட்டுக்களைப் பயன்படுத்த வேண்டும் என காங்கிரஸ், கெஜ்ரிவால் கட்சி திமுக உட்பட 16 கட்சிகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

EVM களில் எவ்வித தில்லுமுல்லுகளும் செய்ய முடியாது என்பதை தேர்தல் கமிஷன் பல வகைகளிலும்  உறுதி செய்த பின்பும் கூட இவர்கள் இப்படிப்பட்ட கோரிக்கையை வைத்திருப்பது,சமீபத்திய தேர்தல்களில் அடைந்த தோல்விகளுக்கு மக்களின் அதிருப்தி காரணமல்ல..EVM களில் ஏற்பட்ட பிழைகளே காரணம் என்று மக்களை திசை திருப்புவதற்கே  அன்றி வேறொன்றுமில்லை

EVM மூலம் நடத்தப்பட்ட தேர்தல்களில்தான் பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றது; பீஹாரில் லாலு, நிதிஷ்,காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. பா... தோற்றது. 2004, 2009 களில் நிகழ்ந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்றது. இப்படி எண்ணற்ற தேர்தல்களைச் சுட்டிக்கட்டலாம்.

டெல்லியில் 2015ல் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (67/70) 70 க்கு 67 இடங்களில் வெற்றி பெற்று பா.. . வை படுதோல்வியடையச் செய்தபோது  EVM மீது யாரும் குறை காணவில்லை; இப்போது .பி.யில் பா... 325 இடங்களைக் கைப்பற்றியவுடன் EVM ல் தில்லுமுல்லுகள் நடைபெற்றிருக்கின்றன என்று கூற முற்படுவது அப்பட்டமான கபட அரசியல். இது மக்களை ஏமாற்றும் நோக்கிலானது.

EVM மூலம் நடத்தப்படும் தேர்தல்களில் செல்லாத ஓட்டுக்கள் என்பது அறவே கிடையாது; மக்கள் எளிதாகவும் விரைவாகவும் வாக்களிக்க முடிகிறது; முடிவுகளும் விரைந்து அறிவிக்க இயலுகிறது. இப்படி எண்ணற்ற நன்மைகளைச் சுட்டிக்காட்ட முடியும். மேலும் இப்போது  நாம் EVM களில் வாக்களிக்கும்போது  நாம் வாக்களித்த நபருக்குத்தான் நமது வாக்கு சென்று சேர்ந்திருக்கிறதா என்பதை நாமே ( Counterfoil ) பார்த்து தெரிந்து கொள்ளும் வகையிலான EVMகளும் சில தொகுதிகளில் பரீட்சார்த்தமான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவிரைவில் இத்தகைய EVM கள் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்படலாம்.


எனவே, வாக்குச்சீட்டு முறையை விட EVM மூலம் வாக்களிக்கும் முறை எல்லா வகையிலும் சிறந்ததே. நாடும் உலகமும் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் ( Digital ) முறைக்கு மாறிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நாட்டின் தேர்தல் முறையில் EVM புறக்கணித்து வாக்குச்சீட்டுகள் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று கோருவது அபத்தமானது; முதல் நோக்கிலேயே முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியது.