Sunday 6 December 2015

மீண்டு எழுவோம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ளச் சேதங்கள் வரலாறு காணாதவை .இதை ஒரு தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்தக் கொடும் சூழ்நிலையைச் சமாளிக்க அதிலிருந்து மீண்டு வர தமிழக அரசு துடிப்புடனும் வேகத்துடனும் செயல்பட்டு வருகிறது. அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரின் உத்தரவுக்கிணங்கி பம்பரமாய் சுழன்று நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றனர். நடுநிலையோடு நோக்கும் அனைவரும் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளவே செய்வார்கள். மத்திய அரசும் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ரு 1930 கோடி நிதியுதவியும் மேலும் பல்வேறு உதவிகளையும் உடனடியாக துரித கதியில் செய்து வருகிறது.

தமிழக அரசின் ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள், மீனவர்கள், துப்புரவு பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், இராணுவத்தினர், மத்திய அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பல தரப்பினரும் இந்த இன்னல்மிகு சூழ்நிலையைச் சமாளிக்க சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள்.

பல்வேறு தொண்டு நிறுவனங்களும் பிறரும் பிற மாவட்டத்து மக்களும், பிற மாநில அரசுகளும் மக்களும் நிதி உதவி உட்பட காலத்திற் செய்ய வேண்டிய பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அரசுகளின் முயற்சிகளினாலும் மேலே கூறிய பலதரப்பட்டோரின் உதவிகளினாலும் சேவைகளினாலும் இந்த கொடிய சூழ்நிலையிலிருந்து மக்கள் உறுதியாக மீண்டுவருவார்கள்நாம் மீண்டும் எழுவோம்