Monday 30 September 2013

இத்தனை வருடங்களா..?

           1992-96 இடையே பீஹாரில் நிகழ்ந்த மாட்டுத் தீவன ஊழலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சி.பி.. சிறப்பு நீதி மன்றம் அறிவித்திருக்கிறது. இவ்வழக்கில் லாலுவுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கப் போவது உறுதி. சுமார் 38 கோடி ரூபாய் முறைகேடாக கையாளப்பட்டதாகக் கூறப்படும் இவ்வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வந்திருக்கிறது.
சமீபத்திய உச்சநீதி மன்ற உத்தரவின்படி லாலுவின் எம்.பி. பதவி பறி போகும். அடுத்த 6 வருடங்களுக்கு அவர் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு; இப்படிப்பட்ட தீர்ப்புகள் ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாய் அமையும். ஆனால், வழக்கு தொடுக்கப்பட்டு 17 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு வந்திருக்கிறது; இதற்கு மேல் உயர்நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம் என அப்பீல்கள் இருக்கின்றன; எனவே இறுதித் தீர்ப்பு வர 25 வருடங்கள் வரை கூட ஆகலாம். நீதி வழங்குவதில்  இத்தகைய நீண்ட கால தாமதம் ஏற்படுவது சரியானதுதானா..?
          இந்தியாவில் அரசியல்வாதிகளில் பலர் ஊழல்வாதிகளாகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களாகவும் மக்களை ஏமாற்றுபவர்களாகவும் இருப்பதால் அரசியல் என்றாலே ஒரு சாக்கடை என்று வர்ணிக்கப்படுகிறது; மக்களில் பலர் அரசியல் என்றாலே முகம் சுளிக்கின்றனர்.இப்படிப்பட்ட மோசடி அரசியல்வாதிகளால் நாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நீதிமன்றங்களின் துணிச்சலான மற்றும் நேர்மையான நடவடிக்கைகளின் காரணமாகவே பல்வேறு ஊழல்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன; ஏமாற்று அரசியல்வாதிகளின் தவறான நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.
          சமீபத்தில் கூட குற்ற வழக்குகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் எம்.பி. மற்றும் எம்.எல்.. பதவிகள் ( அப்பீலுக்காக காத்திராமல் ) உடனடியாக பறிக்கப்பட வேண்டும் என்றும் சிறையிலிருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் புரட்சிகரமான 2 தீர்ப்புகளை வழங்கியது.
          நீதிமன்றங்களின் இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாகவே மக்கள் பாராளுமன்ற ஆட்சி முறையில் கொஞ்சமாவது நம்பிக்கை கொண்டிருக்கிற சூழ்நிலையில் அதே நீதிமன்றங்கள் நீதி வழங்க எடுத்துக் கொள்கிற நீண்ட கால தாமதம் கவலைக்குரிய விஷயமாக இருந்து கொண்டிருக்கிறது. சமூகத்திலும் அரசியலிலும் நிலவுகிற பல்வேறு குற்றங்களுக்கும் முறைகேடுகளுக்கும் இந்த காலதாமதமே பிரதான காரணமாயிருக்கின்றது என்பது மறுக்க முடியாதது.
எனவே நீதி மன்றங்கள் முதலில் இதில் கவனம் செலுத்த வேண்டும்.நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது;தகுந்த காலத்திலும் வழங்கப்பட வேண்டும். 

Sunday 15 September 2013

நல்ல மாற்றம் காண்போம்

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. திரு நரேந்திர மோடி அவர்கள் நாட்டின் பிரதமர் பதவிக்கு பா..கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்.

மோடி குஜராத்தின் முதல்வராக கடந்த  12 வருடங்களாக இருந்து வருகிறார். மூன்று முறை முதல்வராக குஜராத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தனது நிர்வாகத் திறமையாலும் உறுதியான மற்றும் சிறப்பான முடிவுகளாலும் ஊழலில்லாத ஆட்சி முறையாலும் குஜராத்தை பல்வேறு துறைகளிலும் சிறப்பான முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
அவரது ஆட்சித் திறமையால் குஜராத் இன்று இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும் கவனிக்கத் தக்க அளவில் ஒரு சிறந்த மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

அவர் பிரதமராவது,

' இன்றைய குஜராத் போல நாளைய இந்திய உருவாக வழி வகுக்கும்'

இந்தியர்களாகிய நமக்கு சில கனவுகளுண்டு.

பாதுகாப்பான இந்தியா; பசி பட்டினியற்ற இந்தியா; வலிமையான இந்தியா; வளம் கொழிக்கும் இந்தியா; ஊழலற்ற இந்தியா; பயங்கரவாதம் வேரறுக்கப்பட்ட இந்தியா; சாதி மத பேதமற்று அனைத்து மக்களும் மகிழ்வுடன் வாழும் இந்தியா; இப்படி எண்ணற்ற பல இந்தியக் கனவுகள்..  
சுதந்திரம் அடைந்த இந்த 66 ஆண்டுகளில் இந்தியாவை ஆண்ட அரசுகள் சில சாதனைகளைப் படைத்திருக்கின்றன. ஆனாலும் இன்னமும் முழுமையான வளர்ச்சிக்கான பாதையில் விரைந்து செல்லவில்லை என்பது நிச்சயமான உண்மை.

எழுச்சி பெற்ற இந்தியாவில்தான் வளர்ச்சி சாத்தியமாகும்; மேலே சொன்ன கனவுகள் நனவாக வாய்ப்புகள் உண்டு.

அதற்கு தேசப்பற்று மிக்க, நாட்டு நலனில் அக்கறையுடைய நாட்டின் பண்பாடு கலாச்சாரம் இவற்றை மதிக்கிற, ஊழல் கறை படியாத வலிமையான தலைமை தேவை.

திரு நரேந்திர மோடி அவர்கள் அதற்கு தகுதியானவர்; குஜராத்தில் அவர் அதை சாதித்திருக்கிறார்; தொடர்ந்து மேலும் மேலும் சாதனனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது அந்த ஆற்றல் நாடு முழுக்கப் பயன்பட வேண்டும் . அவர் பிரதமராவது நாட்டுக்கு நல்லது.

அவருக்கெதிராக எத்தனையோ பொய்ப் பிரச்சாரங்கள்; அதெல்லாம் பொய்தான் என்பதற்கு ஒரு விஷயத்தை மட்டும் அறிந்து கொண்டால் போதும்.  

கோத்ராவில் ரயிலில் வைத்து 55 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதே குஜராத் கலவரங்களுக்கு மூல காரணமாய் அமைந்தது. அதன் பின் கடந்த  11 வருடங்களாக ஒரு சிறு மதக் கலவரமோ வகுப்புக் கலவரமோ குஜராத்தில் நிகழ்ந்ததில்லை. மோடி ஒரு மதவாதியாக இருந்தால் இது எப்படி சாத்தியமாகும் ..?

காய்த்த மரத்தில் கல்லெறிய எப்போதும் பலர் தயாராயிருப்பார்கள்; எனவே பொய்ப் பிரச்சாரங்களுக்கும் வதந்திகளுக்கும் செவி சாய்க்காமல் வரும் தேர்தலை நல்ல மாற்றத்திற்கான பாதையை உருவாக்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வோம்.

போலி மதச்சார்பின்மை கோஷங்களுக்கு ஏமாற வேண்டாம்; உண்மையான மதச் சார்பற்ற,அனைத்து மக்களும் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காணும் இந்தியாவை உருவாக்குவோம்.

மோடிக்கு வாய்ப்பளிப்போம் ; மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுக்கே வாய்ப்பளிப்போம்.

2014 நாட்டிற்கு ஒரு திருப்பு முனையாக அமையட்டுமே.



Sunday 8 September 2013

நாடகம்... அருமையான நாடகம்

"மத்திய ( .மு.கூ.) அரசு இலங்கைக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறது; இலங்கைத் தமிழர்களுக்கோ தமிழக மீனவர்களுக்கோ அனுசரணையாக இல்லை" என்று வருத்தப்பட்டிருக்கிறார் கருணாநிதி. அதோடு, 2009ல் இலங்கையில் போர்நிறுத்தத்திற்காக தான் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியபோது, போர் நின்று விட்டது என்று மத்திய அரசு பொய் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை இப்போது மட்டுமல்ல.. ஏற்கனவே பல முறை அவர் கூறியிருக்கிறார்.
அப்படியானால்,


1)கருணாநிதி தனது 4 மணி நேர உண்ணாவிரதத்தை நிறுத்திய பின்னும் பல நாட்கள் தொடர்ந்து தமிழர் பகுதிகளில் இலங்கை அரசு தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்களைக் கொன்றதே.. ஏன் கருணாநிதி தன்னை ஏமாற்றிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை..?
உண்ணாவிரதத்தை ஏன் மீண்டும் துவக்கவில்லை ..?
மகாபாரதத்தில் கர்ணன் அர்ச்சுனன் மீது ஒரு முறைதான் நாகாயுதத்தை ஏவுவேன் என வாக்குறுதி அளித்தது போல கருணாநிதியும் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு முறைதான் உண்ணாவிரதம் இருப்பேன் என்று சோனியாவிடம் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்திருந்தாரா ..? போர் நிறுத்தப்படவில்லை.. தமிழர்கள் மீது இன்னமும் தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்று தமிழர் தலைவர்களும் பத்திரிக்கைகளும் சுட்டிக் காட்டிய போது,
மழை விட்டும் இன்னும் தூறல் நிற்கவில்லை என்று அந்தத் தாக்குதல்களை நியாயப்படுத்தியவர்  கருணாநிதி என்பதை யாரும் மறந்து விட முடியாது அல்லவா ..?
2) தன்னை இந்த அளவிற்கு மோசமாக ஏமாற்றிய காங்கிரஸோடு ஏன் கூட்டணியை தொடர்ந்தார் ..? ஏன் மத்திய அரசிலும் பங்கு வகித்தார் ..?

3)இலங்கையில் .மு.கூ. அரசின் உதவியுடன் ராஜபக்க்ஷே நடத்திய தமிழின அழிப்பில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற் செய்தி உலகம் முழுக்க அம்பலமாகியிருந்த நிலையிலும் ராஜபக்க்ஷேவிடம்  தன் மகள் கனிமொழியையை அனுப்பி வைத்து அவனோடு விருந்துண்டு, அவனுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தளித்து, அவனிடமிருந்து பரிசுகளைப் பெற்று புளகாங்கிதம் அடைந்தது ஏன் ..?
4) அதற்குப் பிறகும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸோடு கூட்டணி வைத்து மகிழ்ந்தது ஏன் ..?
5)தன்னை ஏமாற்றி விட்டதகவும் இலங்கைத் தமிழர்களுக்கோ தமிழக மீனவர்களுக்கோ காங்கிரஸ் அனுசரணையாக இல்லை என்று கூறும் கருணாநிதி,வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் காங்ரஸுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பாரா ..? அதற்குரிய துணிச்சல் அவரிடமிருக்கிறதா ..?

இப்படிப்பட்ட பல கேள்விகள், கருணாநிதி இப்போது எடுத்திருக்கும் இலங்கைத் தமிழர் ஆதரவு நிலையும், இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் ஆதரவாக  தினசரி அவர் விடுகிற வெற்று அறிக்கைகளும் வெறும் நாடகமே.. தேர்தலில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க அவர் போடும் வேஷமே என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிருபித்துக் கொண்டிருக்கின்றன.