Saturday 9 February 2013

கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா ..?



வருகிற மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இச்செய்தி உண்மையாயிருப்பின் இது வன்மையான கன்டனத்திற்குரியது. இதுபோன்றதோர் முடிவை அரசு எக்காரணம் கொண்டும் மேற்கொள்ளக் கூடாது. 
 
எல்லையில் பாகிஸ்தானும் சீனாவும் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் மிரட்டலாய் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவை நிலைகுலையச் செய்வதற்காக இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களின் துணையோடு பாகிஸ்தான் இந்தியா மீது ம்றைமுக யுத்தம் நடத்திவருவதோடு, எல்லையில் அடிக்கடி நமது இராணுவத்தினர் மீது தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட நமது ஜவான்கள் இருவரை காட்டுமிராண்டித்தனமாக அவர்களது தலைகளை வெட்டி படுகொலை செய்திருக்கிறது பாகிஸ்தான். 

சீனா இப்பிராந்தியத்தில் தன்னை வல்லரசாக நிலைநிறுத்திக் கொள்ள தனக்கு ஒரே போட்டியாக இருக்கும் இந்தியாவுக்கு பல்வேறு வழிகளில் பிரச்னைகளை உண்டாக்கி வருகிறது. தேவையற்ற எல்லைப் பிரச்னைகளை உருவாக்கி ந்ம்முடைய மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசம் முழுமையும் தனக்கு உரியது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. அதோடு, இந்திய சீன எல்லையின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மறைமுக ஆக்ரமிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டு வருகிறது சீனா. 

இவ்விரு நாடுகள் மட்டுமின்றி நமது மற்ற அண்டை நாடுகளான பங்களாதேஷ், இலங்கை, நேபாள் போன்றவைகளும் நமக்கு விரோதிகளாக எந்த நேரமும் மாறலாம் என்ற சூழ்நிலைதான் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறும்பட்சத்தில் அங்கே தாலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கக்கூடும். அதனால்,இந்தியாவில் பயங்கரவாதச் செயல்கள் அதிகரிக்கும் ஆபத்திருக்கிறது. 

அமெரிக்கா நம்மை ஆதரிக்கும்; ரஷ்யா நமக்கு உதவிகள் செய்யும் என்பது போன்ற எண்ணங்களை எல்லாம் தவிர்த்து விட்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் சுயச்சார்புடைய பலத்துடன் நமது இராணுவம் விளங்க வேண்டும். பரந்து விரிந்து நீண்டிருக்கும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் வகையில் இராணுவத்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு நவீன முறையில் பலப்படுத்தப்படவும் வேண்டும். ஆற்றல் மிக்க ஏவுகணைகளும் போர் விமானங்களும், விமானம்தாங்கிக் கப்பல்களும் மற்றும் காலத்திற்கேற்ற பல்வேறு ஆயுதங்களும் இராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் இராணுவத்தினர்கள் எல்லா வகையான போர்முனைகளிலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் தக்க பாதுகாப்புச் சாதனங்களும் வழங்கப்பட வேண்டும்.

எதிரிகள் நம்மைத் தீண்டவே அஞ்சும் அளவிற்கு தரை, வான், கடல் என அனைத்துப் பிரிவுகளிலும் நாடு வல்லமை பெற்று விளங்க வேண்டும். அதற்கு இராணுவத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.  
உலகின் முன்னணி நாடுகள் சில இராணுவத்திற்காக செலவு செயும் தொகை இங்கே பட்டியலிடப்பட்டிருக்கிறது. இவற்றில் பல நாடுகள் எல்லையில் நம்மைப் போல எவ்விதப் பிரச்னைகளும் இல்லாதவை.அத்தகை நாடுகளே இராணுவத்திற்கு நம்மை விட கூடதலாக செலவழிக்கின்றன. ஆனால், நம் சுற்றிலும் பகை எண்ணம் கொண்ட ஆக்ரமிப்பு சிந்தனை கொண்ட, மத அடிப்படையிலான பயங்கரவாத சிந்தனைகளுடைய நாடுகளால் சூழப்பட்டிருக்கிறோம். இத்தகைதோர் சூழ்நிலையில் பட்ஜெட்டில் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதற்கு சமமாகும்.
  
 ஊதாரிச் செலவுகள், வீண் செலவுகள் எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாத் துறைகளிலும் மலிந்திருக்கும் ஊழல்கள் போன்றவற்றை ஒழித்து, கோடிகளில் வருமானமுள்ளவர்களுக்கு கூடுதல் வரி விதித்தல்,வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்டல் போன்ற வழிகளில் வருமானத்தைப் பெருக்கினால் மத்திய பட்ஜெட் உபரியாகவே மாறும் வாய்ப்பு ஏற்படும்.அதை விட்டு நட்டின் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க முற்படுவது, சுவரின்றி சித்திரம் வரைய நினைப்பதற்கு ஈடாக மாறிவிடும்.