Sunday 18 March 2018

நடுநிலையுடன் சிந்தியுங்கள்.


பா... அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்போவதாக சில கட்சிகள் அறிவித்திருக்கின்றன. இதனால், எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் பா... எந்தக் கூட்டணிக்கட்சியின் ஆதரவும் இல்லாமலேயே தனிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பா... விற்கு 274 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது தவிர, மேலும் பல கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது. எனவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது வெறும் பொழுதுபோக்கும் தீர்மானமாகவே இருக்கும்.
மக்களவையில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத திமுகவின் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று தினசரி அதிமுக தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கிறார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்தாலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழி ஏற்படும் என்று அவர் கூறுகிறார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக ஆதரித்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எப்படி வழி ஏற்படும்   என்பது ஸ்டாலினுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகும்.
,உண்மையில் ஸ்டாலின் அதிமுகவை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க ஏன் வலியுறுத்துகிறார் என்றால், நம்பிக்கையில்லாத்தீர்மானத்தின் மூலம்  பா.ஜ.க. ஆட்சி கவிழ்ந்துவிடும்; விரைவில் மக்களவக்கு தேர்தல் வரும்; தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுவிடலாம்; மத்தியில் மீண்டும் தன் குடும்பத்திற்கு முக்கியமான இலாக்காக்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ஆயிரக்கணக்கான கோடிகள் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கலாம் என்று ஸ்டாலின் கனவுகண்டு கொண்டிருக்கிறார். பாவம்; நாட்டின் குடியரசு தினம் சுதந்திர தினத் தேதிகள் கூட தெரியாத ஸ்டாலினுக்கு மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு.. பா.ஜ.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
மோடி நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலும் வெற்றி பெறுவார்; 2019ல் நடைபெறவிருக்கின்ற மக்களவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராவார்.
நம்பிக்கையில்லாத் தீர்மான விவகாரம் என்று மட்டுமல்ல.. பல்வேறு பிரச்னைகளிலும் அதிமுக ( அரசிற்கு அல்ல..அரசுக்கு யார் வேண்டுமானாலும் ஆலோசனை வழங்கலாம்.) கட்சிக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார் ஸ்டாலின்.
ஸ்டாலின் என்ன அதிமுக உறுப்பினரா..வட்டச் செயலாளாரா..அல்லது மாவட்டச் செயலாளாரா ..? திமுக வை அழிப்பதற்காகவே திரு எம்.ஜி.ஆர். அவர்கள் அதிமுகவைத் துவக்கினார். திரு. ஜெயலலிதா அவர்களும் திமுக என்னும் தீய சக்தியை ஒழிப்பதற்காக தனது கடைசி காலம் வரை போராடினார். அதில் பெருமளவிற்கு வெற்றியும் பெற்றார்.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இவர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து செயல்பட்டு வந்தால்தான் அதிமுக நிலைத்திருக்க முடியும். இந்த உண்மையை அதிமுக தலைவர்களும் உணர்ந்தே இருக்கின்றனர்..
எனவே ஸ்டாலின் கனவெல்லாம் பலிக்கப்போவதில்லை. ஆவரது ஆசை என்றும் நிராசையாகவேஇருக்கப்போகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கும் துளி கூட சம்பந்தமில்லை.காங்கிரஸ் கட்சியே நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு இப்பிரச்னையை முன்வைக்காது.. ஏனெனில், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கர்நாடக முதல்வர்தான் மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை எதிர்க்கிறார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும் மறுக்கிறார்.
இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்..காவிரி விவகாரத்தில் திமுக வைப் போன்று தமிழகத்திற்கு துரோகம் செய்த கட்சி வேறெதுவுமே இருக்க முடியாது. 1974ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காதது, காவிரியில் எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ள கர்நாடகாவை அனுமதித்தது போன்றவை திமுகவின் துரோக வெளிப்பாடுகள்தான். 2014ல்தானே மோடி ஆட்சிக்கு வந்தார்.. அதற்கு முன்பு 2004 லிருந்து 2014 வரை மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூட மறுத்தது காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு.  ஏன் அந்த 10 வருடங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை..? கருணாநிதியும் ஸ்டாலினும் அப்போது என்ன செய்துகொண்டிருந்தனர்..? காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஒரு கன்டனமாவது தெரிவித்தனரா கருணாநிதியும் ஸ்டாலினும். மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த சோனியாவைக் கண்டித்து மத்திய அரசிலிருந்து விலகியதா..இல்லை காங்கிரஸ் கூட்டணியிலிருந்துதான் விலகியதா திமுக..?
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது கூட, கருணாநிதியும் ஸ்டாலினும் ராஜபக்க்ஷேவிடம் கனிமொழியை அனுப்பிவைத்து அவர் புரிந்த இனப்படுகொலைக்காக அவருக்கு பாராட்டு தெரிவித்து அவரிடமிருந்து பரிசுகள் பெற்றுவரச் செய்ததை மக்கள் மறக்க முடியுமா..? காவிரிப் பிரச்னையில் உச்சநீதிமன்றம் இப்போது ஒரு இறுதித் தீர்வுக்கான தீர்ப்பை அளித்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் திரு. ஜெயலலிதா அவர்கள்தான். கருணாநிதியோ ஸ்டாலினோ அல்ல.
காவிரியிலிருந்து கர்நாடகமும் தமிழகமும்  உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீரைப் பங்கிட்டுக் கொள்ள மத்திய அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
ஆனால், எப்போதும் போல இப்போதும் கூட காவிரிப் பிரச்னையில் திமுக மக்களை ஏமாற்றத்தான் முயற்சித்து வருகிறது.
மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் வந்துவிடாது. கர்நாடக அரசு திறந்துவிட்டால்தான் வரும். தமிழகத்திற்குரிய நீரை திறந்துவிட மறுக்கிற கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஸ்டாலின் ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா..? மேலாண்மை வாரியத்திற்காக அதிமுக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்லும் ஸ்டாலின் கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று இதுவரை ஒருமுறையாவது ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியிருக்கிறாரா..? தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவில்லையென்றால் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று ராகுல் காந்திக்கு ஸ்டாலின் ஏன் அழுத்தம் கொடுக்கக் கூடாது..?
மக்கள் ஒரு கணம் சிந்தித்தால் போதும்; எல்லா உண்மைகளும் விளங்கிவிடும். ஆனால், நடுநிலையுடன் சிந்திக்க வேண்டும். அதுதான் முக்கியம்.