Thursday 11 June 2015

வை.கோ.விற்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய மறுமலர்ச்சி தி.மு.. தலைவர் வை.கோ. அவர்களுக்கு
வணக்கம்.

இப்போது தாங்கள் தி.மு..வுடன் நெருங்கிய உறவு கொள்ள ( தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடிய அளவில் ) தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை தங்களின் சமீப காலப் பேச்சுக்கள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

வை.கோ. என்றால் மக்களின் நெஞ்சங்களில் உடனடியாகத் தோன்றும் எண்ணம் ஈழத் தமிழர்களின் நலன்களுக்காக விடாது உண்மையுடன் போராடும் போராளி என்பதுதான்.
ஆனால், தி.மு..வுடன் உறவு என்பது உங்களது இந்தப் போராளி இமேஜை புரட்டிப் போட்டு விடுகிறதே.

எப்படி உங்களால் இப்படி ஒரு முடிவு அதிலும் அரசியல் தற்கொலைக்கொப்பான முடிவை எடுக்க முடிந்தது..?


2009ல் இலங்கையில் நிகழ்ந்த இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட இராஜபக்க்ஷே மட்டுமே காரணமல்ல..அப்போது ஆட்சியிலிருந்த .மு.கூ. அரசும்,  தான் மற்றும் தனது குடும்பத்தினர்களின் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இனப்படுகொலையைத் தடுக்க எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல் அதற்கு உறுதுணையாக இருந்த அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும்தான் என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மை மட்டுமல்லாது தாங்களே தங்கள் வாயால் பலமுறை கூறிய உண்மையும் கூட. ஒரு சில சட்டமன்றத் தொகுதிகளுக்காக அதே கருணாநிதியை தாங்கள் பலவாறாக பாராட்ட முற்படுவதும் அவரோடு தேர்தல் கூட்டணியில் இணைந்து மீண்டும் அவரை முதல்வராக்க முற்படுவதும் தாங்கள்தான் இலங்கைத் தாமிழர்களின் நலன்களுக்காக போராடும் போராளி என்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்கவில்லையா..? யூ டூ வை.கோ..?  You too Vai.Ko ? என்ற கேள்வியை தமிழர்கள் கேட்க வேண்டிய நிலை ஏற்படுகிறதா.. நம்ப முடியவில்லையே.

இலங்கைத் தமிழர் விவகாரங்களில் எப்போதும் துடிப்புடன் முன்னணியில் இருக்கும் நீங்கள் கனிமொழி - ஆனந்தி சசிதரன் விவகாரத்தில் வாயையே திறக்காமல் அமைதி காக்கிறீர்களே. எதற்காக இந்த மௌனம்..? கனிமொழி மீது குற்றம் சொல்லிவிடக் கூடாது என்ற தன்னடக்கமா..? அல்லது இலங்கை தமிழர்களுக்கு கருணாநிதி இழைத்த துரோகச் செயலை மக்களுக்குத் தெரியாமல் மறைக்க வேண்டும் என்ற ஆர்வமா..?உங்கள் தமிழுணர்வின் விலை வெறும் நாலைந்து சட்டமன்றத் தொகுதிகள்தானா..?

இலங்கைத் தமிழர் நலனுக்காக தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்துவரும் பிரதமர் மோடியை குற்றம் சாட்டும் தாங்கள் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாநிதியோடு கை குலுக்க நினைக்கிறீர்களே.. உங்களுக்கு அவமானமாகவில்லையா..? நாகப்பட்டினத்தில் ஏதோ ஒரு சிறு கோயிலில் வைக்கப்பட்ட பிரபாகரனின் உருவச் சிலையை அகற்றியதற்கு பொங்கும் நீங்கள் அந்த பிரபாகரனின் மரணத்திற்கு மறைமுக காரணமாயிருந்தவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறீர்களே.. உங்கள் மனசாட்சி உங்களை குற்றம் சாட்டவில்லையா..?


இலங்கைத் தமிழராவது மண்ணாவது.. பதவிதான் எங்களுக்கு முக்கியம் என்ற முதிர்ந்த நிலையை அடைந்து விட்டீர்கள் போலிருக்கிறதே.

தி.மு..வுடன் கூட்டணி என்றான பின் நீங்கள் எப்படி விடுதலைப் புலிகள், இலங்கைத் தமிழர் நலன் என்பது பற்றியெல்லாம் எப்படி பேசலாம்..? எப்படிபேச முடியும்..?
நாலைந்து சட்டமன்றத் தொகுதிகளுக்காக ( அதிலும் வெல்ல முடியாத தொகுதிகளுக்காக )உங்கள் தமிழின உணர்வை இப்படி அடகு வைத்து விட்டீர்களே.
உங்களை வசைபாட விரும்பவில்லை; உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்,

கு.காந்தி. M.A.B.G.L

No comments:

Post a Comment