Monday 1 June 2015

இவை சாதனைகள் இல்லை என்றால், எதை சாதனை என்போம்..?

திரு நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது.மாற்றத்திற்காக வாக்களித்த மக்களுக்கு நல்ல மாற்றம் கிடைத்திருக்கிறதா...ஏமாற்றம் கிடைத்திருக்கிறதா..?

இந்த ஓராண்டில் பல விசயங்கள் சாதிக்கப்பட்டிருக்கின்றன; இவற்றில் முதன்மையானது 'ஊழலே இல்லாத ஆட்சி' என்பதுதான். முன்பெல்லாம் ஆயிரம் கோடி ஊழல், இலட்சம் கோடி ஊழல் என மாதந்தோறும் புதுப்புது ஊழல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. மக்களின் வரிப்பணமும் நாட்டின் செல்வங்களும் ஊழல் அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்டுக் கொண்டிருந்தன. 'இந்தியா என்றால் ஊழல்' என்று உலகமே எண்ணுமளவிற்கு நமது ஆட்சியாளர்களின் ஊழல்கள் உலகப் புகழ் பெற்றிருந்தன.இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதை இமாலயச் சாதனை என்றே கூற வேண்டும்

கடந்த ஒரு வருட காலத்தில் அத்யாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுக்க மதக்கலவரங்கள் வெடிக்கும்; கிறிஸ்துவ முஸ்லீம்கள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் செய்யப்பட்ட பிரச்சாரங்கள் பொய்யாக்கப்பட்டன. அனைத்து மக்களும் அமைதியுடன் வாழும் சுமூக சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

தேசப்பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் தனி கவனம் செலுத்தப்பட்டது. தேசவிரோத தீய சக்திகளுக்கு கடும் பதிலடிகள் கொடுக்கப்பட்டன. எல்லையில் பாகிஸ்தானின் அத்து மீறிய தாக்குதல்கள் முன்பு போல் அல்லாமல், பாகிஸ்தானின் தரப்பிற்கு கடும் சேதம் உண்டாக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நவீன ஆயுதங்களும் சாதனங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கவும் வெளி நாடுகளிலிருந்து வாங்கவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இராணுவத்திற்காக பட்ஜெட்டில் 2.47 இலட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த வருடம் விவசாயிகளின் பயிர் சேதத்திற்கு சுமார் 506 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. கடந்த ஆட்சியின்போது 50% பயிர்கள் சேதமடைந்தால்தான் இழப்பீடு என்றிருந்த நிலையை மாற்றி, 33%பயிர்கள் சேதமடைந்தாலே ப்பீடு வழங்க வகை செய்யப்பட்டது.

தனிநபர் வருமான வரியில் ரூ50000 கூடுதலாக விலக்கு அளிக்கப்பட்டது. மொபைல் ரோமிங் (Mobile Roaming )கட்டணங்கள் 23% - 40% வரை குறைக்கப்பட்டிருக்கின்றன.

 சாதாரண மக்களின் சமூகப் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்கள் துவக்கப்பட்டிருக்கின்றன. 'பிரதான் மந்திரி தன்ஜன் யோஜனா' திட்டத்தின் கீழ் புதிதாக சுமார் 15 கோடிமக்கள் வங்கிகளில் கணக்கு துவக்கியிருக்கின்றனர்.எவ்வித முன்பணமும் இல்லாமல் துவக்கப்பட்டிருக்கும் இவ்வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்களுக்கு ரூ1 இலட்சத்திற்கான விபத்துக் காப்பீடும் ரூ30000 கான ஆயுள் காப்பீடும் இலவசமாக வழங்கப்படுகிறது; ரூ 5000 கடனும், கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தும்பட்சத்தில்  மேலும் ரூ15000 கடனும் வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் அவர்களது திருமணச் செலவுகளுக்காகவும் 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்' கொண்டு வரப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வருமான வரி பிடித்தம் இல்லாத 9.2% வட்டி வழங்கப்படுகிறது.
வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆண்டு பிரீமியம் வெறும் 330 ரூபாயில் 2 இலட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு வழங்க வகை செய்யும் 'பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா' என்ற திட்டமும் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஆண்டு பிரீமியம் வெறும் 12 ரூபாயில் 2 இலட்ச ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு வழங்கும் 'பிரதான் மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா' திட்டமும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
நாட்டின் மொத்த தொழிலாளர் சமுதாயத்தில் 88% தொழிற்சங்க ரீதியில் ஒருங்கிணைக்கப்படாத ( un organized sector ) தொழிலாளர்கள் ஆகும். இவர்கள் மற்றும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின்  வருங்காலத்தை பாதுகாக்கும் வகையில் மாதந்திர ஓய்வூதியம் ரூ 1000லிருந்து ரூ5000 வரை  வழங்கும் 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஒரு வருட காலத்திற்குள் இத்தனை சமூக நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கும் மோடி அரசு, நாட்டின் தொழில் வளர்ச்சி பெருகவும் சாதாரண மக்கள் பயன்பெறும் வகையிலும் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியிருக்கிறது. சிறு தொழில் தொடங்குவோருக்கும் வியாபாரிகளுக்கும் கடன் வழங்க முத்ரா வங்கி ( MUDRA Bank – Micro Units Development and Refinance )துவங்கப்பட்டிருக்கிறது இதற்காக ரூ20000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.நாட்டின் மின்பற்றாக்குறையை போக்கி அனைவருக்கும் 24*7 தடையில்லா மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 17,830 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
2022க்குள் ' வீடில்லா அனைவருக்கும் வீடு' வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 2 கோடி வீடுகள் கட்டப்படவிருக்கின்றன. 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முடிவுகட்டப்பட்டு இளஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
Clean India 'தூய்மையான இந்தியா' திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுக்க பல்லாயிரக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் தொழில் வளைர்ச்சிக்கும் சாலைகள் அத்யாவசியமானதாகும். கடந்த ஆட்சியின்போது ஒரு நாளைக்கு 2 கி.மீ. என்ற அளவில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வந்தன.ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நாலைக்கு 10 கி.மீ. என்ற அலவில் சாலைகள் போடப்படுகின்றன.

இப்படி ஒரு வருடத்திற்குள் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன; எண்ணற்றத் திட்டங்களுக்கான அடிப்படை விஷயங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

மாற்றத்திற்காக வாக்களித்தவர்களுக்கு நல்ல மாற்றம் அளிக்கப்பட்டிருக்கிறது என்று நாம் உறுதியாக கூற முடியும்.

1 comment: