Thursday 30 March 2017

பயிரும் களைகளும்.

தமிழகத்தில் நெடுவாசல் உட்பட நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுவதால் விவசாயமோ நிலத்தடி நீரோ பாதிக்கப்படாது என்பதை அரசு மட்டுமல்ல.. பல்வேறு நிபுணர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். தமிழகம் தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் இதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. 
      
ஆனால், தமிழகத்தில் பிரிவினைவாதிகளும் தேசவிரோத மற்றும் பிற தீய சக்திகளும் அரசியல் இலாபம் கருதி சில எதிர்க்கட்சியினரும் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்கள் மத்தியில் தவறான சிந்தனைகளை விதைத்து இத்திட்டத்திற்கு எதிராகப் போராட அவர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்திட்டம் நிறைவேறிவிடாமலிருக்க பல்வேறு பொய்ப் பிராச்சாரங்களையும் மேற்கொண்டுவருகின்றனர்.

இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் போன்ற பொருட்கள் நாட்டின் பெருவளங்களாகும். இவை மக்களுக்கு உரிய வளங்களாகும். மக்களுக்கு தீங்கு விளைவிக்காத மிகவும் பாதுகாப்பான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே இவை பூமியிலிருந்து வெளியில் கொண்டுவரப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் குறிப்பிட்ட அளவிலான பகுதி தவிர பிற இடங்களில் எப்போதும் போல விவசாயம் செய்ய முடியும்...நிலத்தடி நீரும் இதனால் சிறிதும் பாதிக்கப்படாது என்பதை அரசும் நிபுணர்களும் பல வகைகளிலும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இத்திட்டம் நிறைவேற்றப்படுவதனால் அப்பகுதி மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு கிராமப் பொருளாதாரமும் முன்னேற வழி ஏற்படும். தவறான வழிகாட்டுதலையும் வீண் கட்டுக்கதைகளையும் நம்பி பீதியடைவதை தவிர்த்து மக்கள் உண்மையை உணர வேண்டும்.

இளைஞர்கள் மாணவர்கள் என்ற பெயரில் ( இவர்கள் குறிப்பிட்ட பிரிவினைவாத தேசவிரோத இயக்கங்களைச் சார்ந்த மற்றும் எதிரணியிலிருக்கும் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களே ) எடுத்ததெற்கெல்லாம் போராட்டம் என்ற பெயரில் தமிழர்களின் முன்னேற்றம் தமிழகத்தின் வளர்ச்சி போன்றவற்றிற்கு தடைகளை உருவாக்க முற்படுகிறனர்.

பாதுகாப்புடனும் மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும் திட்டம் நிறைவேற்றப்படவும் தங்கள் நிலங்களுக்கு போதுமான ஈட்டுத்தொகை பெறுவதிலும் மற்ற பிற வசதிகளையும் கேட்டுப் பெறுவதிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். பொய்யான ஏமாற்றுப் பிரச்சாரங்களை நம்பி  நல்ல திட்டங்களுக்கு தடைவித்தித்து மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறு செய்ய அனுமதிக்கக் கூடாது.

இந்தியா கிராமங்கள் நிறைந்த நாடு; விவசாய பூமி; ஆனால், விவசாயம் தவிர்த்த பிற எந்தவிதமான முன்னேற்ற , வளர்ச்சித் திட்டங்களையும் அனுமதிக்கக்கூடாது என்ற நிலைப்பாடு கிராம முன்னேற்றத்திற்கு உதவாது.


மக்களை இத்தகைய தவறான வழியில் வழிநடத்த முற்படுபவர்கள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்கள் செழித்து வளர அதனுள் ஊடுருவியிருக்கும் களைகள் அகற்றப்படுவதும், மக்கள் முன்னேற சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் தீய சக்திகள் அகற்றப்படுவதும் இன்றியமையாதவை ஆகும்.

No comments:

Post a Comment