Tuesday 19 August 2014

வரவேற்கத்தக்க நடவடிக்கை

காஷ்மீரில் இயங்கி வரும் ஹூரியத் மாநாடு, ஜே.கே.எல்.எஃப். போன்ற பிரிவினை கோரும் அமைப்புகளைச் சார்ந்த ஷபீர் ஷா, கிலானி போன்றவர்களை இந்தியாவிலிருக்கும் பாகிஸ்தானின் தூதர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர்களுக்கிடையே நடப்பதாயிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்திருக்கிறது இந்திய அரசு.
இந்தியாவின் அண்டை நாடு பாகிஸ்தான்;அந்த வகையில் தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் சம்பந்தமாக பாகிஸ்தான் இந்திய அரசுடன்தான் பேச முடியுமே தவிர, இந்தியாவின் ஒரு பகுதியில் மத வெறியின் அடிப்படையில் மக்களை ஏமாற்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிற பிரிவினைவாதிகளிடம் எவ்வகையிலும் பேச முடியாது என்று உறுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது மிக சரியான மற்றும் தகுந்த நடவடிக்கையாகும். இந்த பிரிவினை பேசும் நபர்கள் இதற்கு முன்பும் பலமுறை பாகிஸ்தான் தூதரை நேரடியாகச் சந்தித்து காஷ்மீர் பிரச்னையைப் பற்றி பேசியிருக்கின்றனர்.அப்போதைய .மு.கூ. அரசு அதை அனுமதித்தும் வந்தது. முதன்முறையாக பாகிஸ்தானின் தீய நோக்கிலான நடவடிக்கைக்கு மோடி அரசு கடும் பதிலடி கொடுத்திருக்கிறது.இதன் மூலம் காஷ்மீர் ஒரு பிரச்னைக்குரிய பகுதியல்ல; இது இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதை தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது நரேந்திர மோடியின் அரசு.
ஜம்மு- காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தது ஒரு முடிந்து போன விஷயம். இந்தியாவின் 29 மாநிலங்களில் அதுவும் ஒன்று.அம்மாநிலத்தில் எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் அது இந்தியாவின் உள்விவகாரம்; அதை எப்படி சமாளிக்க வேண்டுமோ எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றை இந்திய அரசு எடுக்கும். இதில் பாகிஸ்தானுக்கு எவ்வித வேலையுமில்லை.
உண்மையில் காஷ்மீர் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஏதேனும் பிரச்னை இருக்கிறது என்றால் அது பாகிஸ்தான் ஆக்ரமித்து வைத்திருக்கும் பகுதி தொடர்பான பிரச்னை மட்டுமே.
பாகிஸ்தானும் மத அடிப்படையில் ஜம்மு காஷ்மீரை பிரச்னையாக்க நினைக்கும் பிரிவினைவாதிகளும் வாலைச் சுருட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்நடவடிக்கையின் மூலம் மத்திய அரசு அனைவருக்கும் அறிவித்திருக்கும் செய்தி.

1 comment:

  1. modi govt should also showits intentions by action.mere talk....

    ReplyDelete