Monday 16 March 2015

பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது

         
"மத்திய அரசின் நில ஆர்ஜித சட்டத்தை அ.தி.மு.க. ஏன் ஆதரித்தது என்பது ஒரு குழந்தைக்கு கூட தெரியும்.. பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது" என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
           கர்நாடகத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா அவர்களின் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையிட்டு விசாரணையில் சாதகமான தீர்ப்பை பெறுவதற்காகவே நில ஆர்ஜித மசோதாவை அதிமுக ஆதரித்தது என்பதுதான் கருணாநிதி சொல்ல வருகிற கருத்து.
          ஒரு வழக்கிலிருந்து ஒருவர் விடுபடுவதும் ..தண்டனை பெறுவதும் அவ்வழக்கின் தன்மை,வழக்கை விசாரணை செய்யும் நீதிபதி அந்த வழக்கை அணுகும் விதம், வழக்கறிஞர்களின் வாதப்பிரதிவாதங்கள் மற்றும் சட்டப்பிரச்னைகள் போன்றவற்றைப் பொறுத்ததே; ஆனால், கருணாநிதி மத்திய அரசை அனுசரித்து நடந்து கொண்டால் வழக்கிலிலிருந்து விடுபட்டுவிடலாம் என்று கூறுகிறார். 
          மத்திய பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரை நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை;
       ஆனால், கருணாநிதி ஒரு மிகவும் மூத்த அரசியல் தலைவர் ; அவர் விசயம் தெரியாமல் எதுவும் கூறமாட்டர்; அப்படிப்பட்டவர் வழக்கின் நடவடிக்கைகளையும் தீர்ப்புகளையும் அரசின் தலையீடுகள் தீர்மானிக்கின்றன என்று கூறுகிறார் என்றால் முன்னனுபவம் இன்றி அப்படிக் கூறியிருக்கமாட்டார் அல்லவா..?
          கடந்த ஐ.மு.கூ. ஆட்சியில் அந்த அரசின் மிக முக்கிய கூட்டணி தலைவராக கருணாநிதி இருந்தார்; சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு உட்பட பல்வேறு மக்கள் விரோத மசோதாக்கள் கருணாநிதியின் ஆதரவுடனேயே அப்போது நிறைவேறின. காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் விவகாரம் போன்ற பல்வேறு தமிழக நலன் சார்ந்த விசயங்களில் அப்போது முதல்வராயிருந்த கருணாநிதி மத்திய அரசிடம் தமிழக நலன்களுக்காகப் போராடாமல் விட்டுக் கொடுத்தே வந்தார். அப்படியானால், இதெல்லாம் 2ஜி வழக்கிலிருந்து தன் மகள் விடுதலையாக மத்திய அரசு உதவும் என்பதற்காகத்தான் நடந்ததா..?
            தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்ற தடையாயிருப்பவர் ஜெயலலிதாவும் அவரது கட்சியான அ.தி.மு.க.வும்தான்; இந்நிலையில் ஜெயலலிதா அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டால், தி.மு.க. தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு பெரிதாக எந்த தடையும் இருக்கப்போவதில்லை. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஐ.மு.கூ. அரசு தலையிட்டு ஆதிக்கம் செலுத்தியிருக்கக்கூடும் என்று கூறினால், அதில் என்ன தவறிருக்க முடியும்..?
          கருணாநிதியின் கருத்துப்படி, இப்போதிருக்கும் மத்திய அரசு ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவிக்க தனது செல்வாக்கை நீதிமன்றத்தின் மீது பிரயோகிக்க முடியும் என்றால், முன்பிருந்த கருணாநிதியின் ஆதரவில் இயங்கி வந்த ஐ.மு.கூ. அரசு, ஜெயலலிதாவை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தும் வகையில் அவருக்கு தண்டனை விதிக்க நீதிமன்ற நடவடிக்கைகளிலும் வழக்கின் தீர்ப்பிலும்  தனது செல்வாக்கை ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது..? இது சிந்திக்க வேண்டிய விஷயமல்லவா..? 
         ஐ.மு.கூ. ஆட்சியின்போது இதுபோன்று நீதிமன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசின் தலையீடு இருந்ததால்தான் இப்போதைய மத்திய அரசின் மீதும் கருணாநிதிக்கு அதே ஐயம் வருகிறது என்று கூறினால் அதிலென்ன தவறிருக்க முடியும்..?
          அப்படியானால், சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா பெற்ற தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பா...அல்லது கருணாநிதி மத்திய அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி பெற்ற தீர்ப்பா என்று மக்களுக்கு இருந்த ஐயத்தை கருணாநிதியின் இந்த அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
          உண்மையில் பூனைக்குட்டி வெளியில்தான் வந்துவிட்டது; ஆனால், இது கருணாநிதி இரகசியமாய் வளர்த்த பூனைக்குட்டி



No comments:

Post a Comment