Friday 7 September 2012


முதல்வர் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

          சென்னை அண்ணா நகரில் கட்டப்பட்டு  வரும் மேம்பாலங்களுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள அண்ணா பவள விழா நினைவு வளைவை இடிப்பதென்று நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து அதற்கான வேலையிலும் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையே பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த வேண்டுகோள்களுக்காக அண்ணா வளைவை இடிக்கும் முயற்சியை நிறுத்துவது என்றும் மேம்பாலங்களை வேறு பாதைகளில் அமைப்பது என்றும் அரசு முடிவெடுத்திருக்கிறது.
          இது சரியான முடிவல்ல என்பதுதான் சென்னைவாழ் மக்கள் பெரும்பாலோரின் கருத்தாகும். 
          மேம்பாலங்களை புதிய பாதைகளில் அமைக்க அருகிலுள்ள சித்த மருத்துவமனையின் சில பகுதிகளையும் பாலம் அமையும் பகுதிகளிலுள்ள பல்வேறு கட்டிடங்களையும் வீடுகளையும் இடிக்க வேண்டியிருக்கும்; ஏற்கனவே பாலத்திற்காக அமைக்கப்பட்ட காங்கிரீட் தூண்களில் சிலவற்றையும் இடித்து விட்டு புதிதாக அமைக்க வேண்டியிருக்கும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இதனால் பல கோடிகள் கூடுதலாக செலவாவதோடு, அப்பகுதியில் வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகள் வைத்திருக்கும் மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். 
          இன்று பல இடங்களில் சாலைகள் விரிவாக்கத்திற்காகவும், சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலங்கள் அமைப்பதற்காகவும் கோயில்கள் கூட இடிக்கப்படுகின்றன. பொது நன்மைக்காக என்ற காரணத்திற்காக மக்கள் பன்னெடுங்காலமாக பூஜை செய்து வரும் பாரம்பர்யம் மிக்க தெய்வ சன்னிதானங்களைக் கூட அப்புற்ப்படுத்த ஏற்றுக் கொள்கின்றனர். அப்படியிருக்க பல இலட்சக்கணக்கான மக்களின் நன்மைக்காக அமையும் மேம்பாலங்களுக்காக அண்ணா நினைவு வளைவை அகற்றுவதில் என்ன தவறிருக்க முடியும் .. ? அந்த ஒன்றை இடிக்காமல் காப்பாற்றுவதற்காக கோடிக்கணக்கில் கூடுதலாக பணத்தை செலவு செய்வதும், பலருக்கு வாழ்வாதாரமாய் இருக்கும் அவர்களது வீடுகளையும் கடைகளையும் இடிக்கவும்  வேண்டுமா .. ? அண்ணா நினைவு வளைவை அண்ணா நகர் ரவுண்டானா அல்லது வேறு ஒரு இடத்தில் கூட புதிதாக நிறுவிக் கொள்ளலாமே.    
          எனவே முதல்வர் மேம்பாலங்களின் பாதையை மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

   

No comments:

Post a Comment