Saturday 15 November 2014

ஆங்கில வழிக் கல்வி கூடாதா..?

ஆங்கில வழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் கருணாநிதி தமிழ் வழி மூலமே குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

          தாய் மொழிப் பற்று என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று;தமிழ் உலக மொழிகளில் தொன்மையானதும் சிறப்பு வாய்ந்ததுமாகும்;இலக்கண இலக்கியச் சிறப்பு வாய்ந்த மொழி.நாம், தமிழர் என்பது பெருமைக்குரிய விஷயம்; தமிழைக் கற்றல், தமிழில் புலமை பெற்றிருத்தல் என்பது தமிழர் ஒவ்வொருவரின் கடமையுமாகும். 

          ஆனால், ஹிந்தி கற்பதால், ஆங்கில வழியில் கல்வி கற்பதால் தமிழ் அழிந்து விடாது; தமிழர்கள் தமிழைப் புறக்கணிக்க முற்படும்போதுதான் தமிழின் வளர்ச்சிக்கு பங்கம் ஏற்படும். ஆங்கில வழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நாமே தடை போட்டுக் கொள்வதாகும். தமிழ்வழிக் கல்வி கற்பதனால் முன்னேற முடியாது என்பதல்ல;அதேபோல ஆங்கில வழிக் கல்வி கற்பதனால் தமிழ் அழிந்து விடும் என்பதும்சரியல்ல; அது அவரவர்கள் விருப்பத்தையும் நடைமுறை வாழ்க்கை விஷயங்களையும் நிர்ப்பந்தங்களையும் பொறுத்தது.

          தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் காலம் காலமாக ஆங்கில வழிக் கல்விதான் கற்பிக்கப்படுகிறது;இப்பள்ளிகளில் வசதி வாய்ந்தவர்கள் மற்றும் ஒரளவு வசதி வாய்ந்தவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கின்றனர்.ஏழைக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில்தான் தமிழ்வழி கல்வி கற்றுத் தரப்படுகிறது; இப்போது மாநகராட்சிப் பள்ளிகள் உட்பட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கூட ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்குத்தான் கருணாநிதி திடீர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த காலங்களில் கூட தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விதான் கற்பிக்கப்படுகிறது. அப்போதெல்லாம் தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று கருணாநிதி எந்தச் சட்டமும் கொண்டுவரவில்லை.இப்போது சாதாரண மக்கள் மற்றும் குடிசை வாழ் மக்கள் கூட அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்கின்றனர். இதுதான் கருணாநிதியின் கண்ணை உறுத்துகிறது போலும்; வசதி வாய்ந்தவர்களின் பிள்ளைகள் ஆங்கில வழியில் கற்கலாம்; ஏழைக் குழந்தைகள் மட்டும் தமிழ் வழிக் கல்விதான் கற்க வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் கொள்கையோ என்னவோ.

          தமிழ் வழிக் கல்வியே சிறந்தது; மகாத்மா காந்தியும் தாய்மொழிக் கல்வியையே வலியுறுத்தியிருக்கிறார் என்று கூறும் கருணாநிதியின் மகன் வழி மற்றும் மகள் வழி வாரிசுகளில் எத்தனை பேர் தமிழ்வழிக் கல்வி கற்றிருக்கிறார்கள்... தற்போது கற்கிறார்கள் ..என்பதை கருணாநிதி அறிவிப்பாரா..?. தனது பேரன் தயாநிதி மாறனை அவர் மத்திய அமைச்சராக்கியபோது” அவருக்கு ஹிந்தி தெரியும்...அதனால்தான் அவரை மத்திய அமைச்சராக்குகிறேன்" என்று ஹிந்தி கற்பதன் பெருமையையும் அவசியத்தையும் எடுத்துரைத்தவராயிற்றே கருணாநிதி.   

          கருணாநிதியின் வாரிசுகள் ஆங்கில வழிக் கல்வி கற்றால் தமிழ் அழிந்து விடாது; சாதாரண மக்களின் குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வி கற்றால் தமிழ் அழிந்து விடுமா..? ஊருக்கு ஒரு நியாயம்; தனக்கும் தன் குடும்பத்திற்கு மட்டும் வேறு நீதியா..?

          கருணாநிதியின் தமிழ்ப் பற்றிற்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் பாருங்கள்; இவரது பேரன்களின் பெயர்களைப் பாருங்கள்.தயாநிதி மாறன், கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி, ஆதித்யா..என அனைத்துப் பெயர்களும் ஸ்மஸ்கிருதத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. கருணாநிதி என்பதே ஸமஸ்கிருதப் பெயர்தானே.இவர்கள் தங்கள் தொழில் நிறுவனங்களுக்கு வைத்திருக்கும் பெயர்களைப் பாருங்கள்; ரெட் ஜயண்ட் (Red Giant  ), கிளவுட் 9 (Cloud 9 ), சன் மூவிஸ் ( Sun movies), ஸ்பைஷ் ஜெட் (Spice jet )இத்யாதி..இத்யாதி.. அத்தனையும் ஆங்கிலப் பெயர்கள்; இப்படிப்பட்டவர்தான் தமிழ்ப்பற்றாளர் போல் வேஷம் போட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.  
இப்படிப்பட்ட போலி தமிழ்ப் பாற்றாளர்களால்தான் தமிழ் அழியுமே தவிர ஆங்கில வழிக் கல்வியினால் தமிழ் அழிந்து விடாது.
         தமிழில் கற்போம்; தேவைப்படின் ஆங்கில வழியிலும் கல்வி கற்போம்; ஹிந்தி உட்பட எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்போம்.ஆனால்,தமிழை மறவாமலிருப்போம்; ஆங்கில வழிக் கல்வி மூலம் நாம் பெற்ற அறிவையும் வாய்ப்புக்களையும் தனது வளர்ச்சிக்கு மட்டுமின்றி தமிழின் வளர்ச்சிக்கும் பயன்படுத்துவோம்;நாம் தமிழர்; தமிழ் நமது தாய் மொழி; அதை என்றும் மறவோம்.

No comments:

Post a Comment